செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் !

   சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள். கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள்  அணிவகுத்துச் சிறப்பிக்கச் செய்தல், சென்னையிலிருந்தபடியே காணொளிக் காட்சிகள் மூலம் பல திறப்பு விழாக்களை நடத்துதல்  போன்றவற்றின் மூலம் தன்னைச் செயலலிதாவிற்கு இணையாகவும் சில  நேர்வுகளில் அவரை விட உயர்வாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார் இன்றைய முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி. உண்மையில் இவையெல்லாம் அவருக்குத் தேவையே இல்லை. செயலலிதாவைவிடத் திறம்படவே அவர் செயல்படுகிறார்.

  புரட்சித்தலைவர் எம்ஞ்சியார்,  திமுகவிலிருந்து தான் விலக்கப்படக் காரணமானவர்களை எல்லாம் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு கலைஞர் கருணாநிதியின் துணைக் கூட்டத்தைப் பிரிக்கச் செய்தார். அவர் ஒருவரை மட்டும் எதிரியாகக் கொண்டு அவர் கூட்டத்தைப் பிரிப்பதிலும் தன் கூட்டத்தில் சேர்ப்பதிலும்  வெற்றி கண்டார்.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்லது அமைச்சு (திருவள்ளுவர், திருக்குறள் 633)

என்பதற்கு இலக்கணமாகப் புரட்சித்தலைவர் திகழ்ந்ததுபோல் எடப்பாடி க.பழனிச்சாமியும் செயல்படுகிறார். தான் முதல்வராகக் காரணமான சசிகலாவிடமிருந்து அவர்பக்கமே நின்றிருந்த தலைவர்களையும் அமைப்புப் பொறுப்பாளர்களையும் தன் பக்கம் ஈர்ப்பதில் வெற்றி கண்டு வருகிறார்.

  புரட்சித்தலைவி செயலலிதாவும் இவ்வாறு நடந்துகொண்டாரே எனில், அவற்றுக்குப் பின்னணியில் இருந்தவர்கள் சசிகலா குடும்பத்தினரே!

  புரட்சித்தலைவி செயலலிதா பெரும்பாலும் சசிகலா குடும்பத்தார் சொற்படியும் சிறுபான்மை தன் வகுப்பு சார்ந்த குழுவினர் சொற்படியும்தான் நடந்துள்ளார் என நிகழ்வுகள் உணர்த்துகின்றன. தன் தாயாயும் தோழியாயும் உற்ற உடன்பிறப்பாயும் நல்லதொரு வாழ்க்கைத் துணையாகவும் இருந்த சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றியதில் இருந்தே அவர் தற்சிந்தனை அற்றவர் என்பது புரிகின்றது. வேறு சான்று எதுவும் தேவையில்லை.

 அமைதியை விரும்பும் நாட்டில்,   நாட்டை ஆளும் தலைவர்கள் மறைந்தால் மாற்று ஏற்பாடு செய்த பின்னரே அம் மறைவைத்  தெரிவிப்பர். செயலலிதா எதிர் நோக்கும் வழக்கில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என மறு கோணத்தையும் ஆராய்ந்த சசிகலா குடும்பத்தினர் மாற்று ஏற்பாடு குறித்துச் சிந்தித்துள்ளனர். இவ்வழக்கில் தனக்குத் தண்டனையே கிடைக்காது என எப்படிச் செயலலிதா நம்பினார் எனத்  தெரியவில்லை.

  தண்டனையே கிடைக்காது என்று நம்புபவரிடம் எப்படி மாற்று ஏற்பாடு குறித்துத் தெரிவிப்பது என எண்ணினார்களோ என்று தெரியவில்லை. ஆனால், அவ்வாறு  தெரிவிக்காததுதான் சசிகலா குடும்பத்தினர் செய்த  பெருந்தவறு. எனவே, மாற்று ஏற்பாட்டுச் சிந்தனையைச் செயலலிதாவைச் சிறையில் தள்ளவும் ஆட்சியைப் பறிக்கவும் போட்ட சதியாகத் திரித்துக் கூற முடிந்தது. தற்சிந்தனை அற்ற செயலலிதாவும் அதற்கேற்பவே நடவடிக்கை எடுத்துள்ளார்.

  செயலலிதாவின் அரச வன்முறைச் செயல்களைத் துணிவு எனப் புகழ்பாடிகள் புகழ்ந்ததை நம்பியதும்கூட அவரின் தற்சிந்தனையற்ற போக்கிற்கு எடுத்துக்காட்டாகும்.

 முதல்வர் அருகில் உள்ள அமைச்சர்கள் உதிர்க்கும் முத்துகளைப் பார்த்தால் அவர்கள் வழிகாட்டும் திறனற்றவா்களாகவே தெரிகின்றனர். வழிகாட்டும் வல்லமை உள்ள செங்கோட்டையன் போன்றோர் தன்  இடத்தை நிரப்பக் காத்திருப்பவர்களாக எண்ணுவதால் அவர்களிடமும் கேட்பதாகத் தெரியவில்லை.  ஆனால், எடப்பாடியார் அதிகாரிகள், நண்பர்கள் கருத்தறிந்து ஆராய்ந்து முடிவெடுப்பதாக உள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பொதுமக்கள் என்ற வேறுபாடின்றிக் காட்சிக்கு எளியராக அனைவரும் சந்திப்பதற்கு இடம் தரும் எளிமையை எடப்பாடியார் பின்பற்றுகிறார். அவர் தலைவியிடம் இல்லாத அரும் பண்பு இது.

  பாசகவிற்கு எதிராகக் குரல் கொடுக்க முடிவெடுப்பது அரசியல் தந்திரமாக இருந்தாலும் உரிமை உணர்வாக இருந்தாலும் பாராட்டத்தக்கதே!

  பாசகவின் ஆதரவால்தான் பழனிச்சாமி தாக்கு பிடிக்கிறார் என்றால் அதே ஆதரவு கொண்டிருந்த பன்னீர்செல்வத்தால் தாக்கு பிடிக்க முடியவில்லையே! ஆட்சி இன்றுகவிழும், நாளை கவிழும் என்று ஆருடம் சொல்பவர்கள் முகத்தில் கரி பூசும்வண்ணம் தொடர்ந்து ஆட்சித்தேரை இழுத்துச் செல்கிறாரே!

  ஆட்சித்திறனில் சிறந்து விளங்கும் முதல்வர் இன்றைய சூழலை உணர்ந்து கொண்டு வழக்குகளின் முடிவுகளில் ஆட்சி இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வழக்கு முடிவுகள் எதிராக இருந்தால் மேல் முறையீடு செய்து காலத்தை ஓட்டி ஆட்சியை நடத்தலாம் என எண்ணக்கூடாது. ஒரு வேளை மாறான தீர்ப்பிற்கு இடையூறு இல்லாத வகையில் மேல் முறையீட்டிற்கு இசைவளித்தால் துன்பம்தான். பா.ச.க. தேர்தல் நேரத்தில் தன் பிடியில் ஆட்சி இருப்பதையே விரும்பும். எனவே ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத்தலைவர் ஆட்சி என்ற பெயரில் பொம்மை ஆட்சியைத் திணிக்க விரும்பும். இதனால் எதிர்க்கட்சிகளை விட இவருக்கும் இவர்  ஆதரவாளர்களுக்குமே துன்பம் மிகுதியாகும். மக்கள் ஆதரவு இவரை விடத் தினகரனுக்குத்தான் மிகுதி என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தேர்தல் வந்தால் மக்களிடம் நற்பெயர் பெற நல்லன சில ஆற்ற வேண்டும்.

எனவே, வினைத்திறம் மிக்க முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி பின்வருமாறு செயல்பட்டுப் புகழ் பெறவேண்டும்.

  1. மூன்றாண்டு முனைப்புத்திட்டம் ஒன்றை அறிவித்து ஆங்கில வழிப்பள்ளிகளை மூட வேண்டும். எல்லா நிலைகளிலும் தமிழ்மொழி,  கல்வி மொழியாக இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  1. தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் வழிபாடு கட்டாயம் என்பதை நிலை நாட்ட வேண்டும்.
  1. இராசீவு காந்தி கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு அளவுகடந்த தண்டனையில் இருப்பவர்களை விடுதலை செய்வதாகவே சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளதால், உடனடியாக அனைவரையும் பரோல் எனப்படும் காப்பு விடுப்பில் விடுவிக்க வேண்டும். குறுகிய காலத்திற்குள் முடியக் கூடிய மறு  நீதிமன்ற உசாவலுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  1. தண்டனைவாசிகளைச் சாதி, சமயக்கண்ணோட்டத்தில் அணுகுவது தவறு. எனவே, நீண்டகாலமாகச் சிறையிலிருக்கும் இசுலாமியச் சிறைவாசிகளையும் விடுதலை செய்யவும் அதற்கான முடிவு எடுக்கும் வரை காப்பு விடுப்பில் விடுவிக்கவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
  1. இலங்கைத்தமிழர் முகாம்களில் இருப்பவர்களை அனைத்து உரிமைகளும் உள்ள குடிமக்களாக நடத்த வேண்டும்.
  2. மாற்றுக்கருத்துகளுக்கெல்லாம் வழக்கு தொடுக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதன் தொடக்கமாக இப்போதைய இத்தகைய வழக்குகளைக் கைவிடவேண்டும்.

  மதி நுட்பம் கொண்ட முதல்வர் இவ்வாறு செயல்பட்டால்  இவரின் அரசியல் எதிரிகள் காணாமல் போவர் என்பது உறுதி. செய்வாரா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல இதழுரை