113.மனுவிலும் கீதையிலும் குறைகள் இருந்தாலும் பின்பற்ற வேண்டாவா? ++ 114.கீதை கலப்பு மணத்தை எதிர்க்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 112 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 113-114
- மனுவிலும் கீதையிலும் குறைகள் இருந்தாலும் பின்பற்ற வேண்டாவா? –
o மனுவிலும் கீதையிலும் சிற்சில குறைகள் இருக்கலாம். ஆனால் , அவை அறநூல்களாயிற்றே. படித்துப் பின்பற்ற வேண்டாவா என்கின்றனரே!
இவற்றில் சில குறைகள் இல்லை. நூற்கள் முழுமையுமே குறைகளால் நிறைந்தவைதான். இவை குறித்து அறிஞர் அயோத்திதாசர் பின்வருமாறு கூறுகிறார்.
“மனுவும் கீதையும் பொதுவான அறநூல்கள் அல்ல; ஒரு குலத்துக்கொரு நீதி கூறும் நெறியற்ற நூல்கள்; பெண்களை இழிவு படுத்தும் நூல்கள்; மக்களைப் பிறப்பிலேயே உயர்ந்தோராகவும் தாழ்ந்தோராகவும் வகைப்படுத்தும் இழிந்த நூல்கள்; மிக உயர்ந்த நூல்களாகப் பொய்யுரைகள் கொண்டு புனைந்துரைக்கப்பட்ட நூல்கள்”
கீதை கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது.
காந்தியடிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக நாதுராம் கோட்சேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவர், “கீதை காட்டும் இந்து தருமப்படி காந்தியைக் கொலை செய்தது நியாயமே” என்று கூறினார்.
அண்மையில், பெண்கள் கற்பழிப்பு வழக்கில் சிக்கிய சாமியார் ஒருவர், “பகவான் கிருட்டிணன் பல பெண்களுடன் உறவு கொண்டான். அவர் வழியில் நானும் பலருடன் உறவு கொண்டேன். இதில் தவறு இல்லை” என்று வாதிட்டார். - கீதை கலப்பு மணத்தை எதிர்க்கிறதா?
ஆம். கீதை கலப்பு மணத்தை எதிர்க்கிறது. பெண்கள் கற்பிழப்பதால் கலப்பு மணம் ஏற்பட்டுக் குலம் அழிகிறது என்கிறது.
குலம் அழிந்தால் என்றுமுள்ள குலதருமங்கள் அழிகின்றன. தரும நாசத்தால் குலம் முழுவதையும் அதருமம் சூழ்கிறது.( கீதை 1.40)
அதருமம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர். மாதர் கற்பிழக்கும்போது வருணக் கலப்பு உண்டாகிறது.(கீதை 1.41)
கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பிண்டத்தையும் நீரையும் இழந்து வீழ்கிறார்கள்(கீதை 1.42)
குல நாசகர்கள் செய்யும் வருணக் கலப்பை விளைவிக்கும் இக்கேடுகளால் நிலைத்துள்ள சாதி தருமங்களும் குல தருமங்களும் நிலை குலைக்கப் படும்.(கீதை 1.43)
குலதர்மத்தை இழந்தவர் நரகத்தில் நெடிது வசிக்கின்றனர் என்று கேட்டிருக்கிறோம்.(1.44)
(இவ்வெண்கள் சிலவற்றில் முன்பின்னாக மாறியுள்ளன. ஆனால், கருத்துகளில் மாற்றமில்லை.)
இவற்றின் மூலம் பெண்கள் பிற வருணத்தவருடன் தொடர்பு கொள்வதால் குல அழிவு ஏற்பட்டுக் குலதருமங்கள் அழிகின்றன என்பது தெரிவிக்கப்படுகின்றது.
கலப்புமணத்தைக் கண்டிக்கும் கீதை பெண்களே இக்கொடிய பாவத்திற்குக் காரணம் என்று சொல்லி அவர்களைக் குற்றவாளியாக்குகிறது. - (தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 162-164
Leave a Reply