119/133. சனாதனம் இல்லறத்தைப் போற்றுவது என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 117 + 118 தொடர்ச்சி)
- இதுவும் பொய்யே!
ஆரியர்களின் குடும்ப வாழ்க்கை என்பது யாருடனும் யாரும் உறவு கொள்ளலாம் என்பதே. தமிழர்களின் குடும்ப வாழ்க்கையோ இல்லறம் என அறமாகக் கூறப்படுகிறது. மனைவியை இழிவு படுத்துவது சனாதனம். மனைவியின் சிறப்புகளைப் போற்றவதே தமிழர் நெறி. இது குறித்துத் திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார், “இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியின் சிறப்புகளைத் தொகுத்துரைப்பதே திருக்குறளின் இல்லறவியல்” என்கிறார்.
“மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது என்கிறார். “நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக்கூடியவள் மனைவியேயாவாள். அவள் தன் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும். தன் கணவனைவிட அழகிலோ, செல்வத்திலோ, ஆண்மையிலோ, கல்வியிலோ, இன்னும் பிற சிறப்புகளிலோ சிறந்த வேறு ஓர் ஆடவனைக் காணுமிடத்து, அவன்பால் மனம் செல்லுதல் கூடாது. அவ்விதம் செல்லாமல் இருக்கும் நிலைமை திண்மை நிலை உளங்கலங்கா நிலை. தமிழ் நாட்டில் உளங்கலங்கும் நிலை என்பது நினைக்கக் கூடாத ஒன்று. ஆனால், மேனாடுகளில் ஒருவனை மணந்த பெண் பிறிதோர் ஆடவனை ஏதேனும் ஒரு காரணத்தால் விரும்பி முன்பு மணந்தவனிடம் விலக்குப் பெற்றுப் புதியவனை மணந்து கொள்ளுதல் மன்பதை வழக்குக்கும் அறநெறிக்கும் உட்பட்டதாகவே உளது. ஆனால், இவ்வாறு உளங்கலங்கி, மறுமணம் செய்து கொள்ளுதலால் இல்லற வாழ்வில் பல இடர்ப்பாடுகள் தோன்றும். இம்முறைக்கு இடம் கொடுப்பின், நினைந்தவுடன் மணந்து சினந்தவுடனேயோ, முந்தையவரினும் சிறப்பு மிக்கவரைக் கண்டவுடனேயோ பிரிவது என்றால் இல்லற வாழ்வு உடைகலம்போல் உறுதி பயவாது. ஆதலின், காதலித்து மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது. அதற்கு உளத்திண்மைதான் வேண்டும். அதுதான் கற்பு எனப்படுகின்றது” என விளக்குகிறார். (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 22-23) பெண்கள ஒழுக்கத்தையே வலியுறுத்தாத சனாதனம் ஆண்கள் ஒழுக்கத்தைப்பற்றிச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஆடவருக்கு வேண்டிய ஒழுக்கத்தைப் பிறன் மனை விழையாமை மூலம் நாமறியலாம். பேரா.முனைவர் சி.இலக்குவனார் இது குறிப்பத்துப் பின்வருமாறு கூறுகிறார்.
” கற்பு நெறி பெண்டிர்க்குத்தானா? ஆடவர்க்கு வேண்டியதின்றோ என வினவி ஆண்களுக்கும் கற்பு வேண்டியதுதான் என்கிறார். “ஆடவனும் தன் மனைவியைவிட அழகு முதலிய சிறப்புகளில் மிக்காள் ஒருத்தியை விரும்பி உளங்கலங்குவானோயானால் அப்பொழுதும் இடர்ப்பாடு தோன்றும். அவள் சீறியெழுதல் கூடும் செற்றமும் கலாமும் மிகுந்து இல்லற இன்பம் சிதைந்து விடும். ஆகவேதான் திருவள்ளுவர் “கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்” எனப் பொதுப்படக் கூறியுள்ளார். இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்” என்கிறார். (பேரா.முனைவர் சி.இலக்குவனார், வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 25-26)
எப்பிறப்பாயினும் பிரியாது வாழ்தல் வேண்டும் என்பதே தமிழர் இல்லற நெறி. இப்பிறிவியிலேயே பிறருடன் உறவு கொள்ளலாம் என்பதே சனாதனம். எது சிறந்தது என நீங்களே புரிந்து கொள்ளலாம்.
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 172-174
Leave a Reply