126. வால்மீகி இராமாயணம் கிரேக்கக் காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டது – இலக்குவனார் திருவள்ளுவன்

(125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? – தொடர்ச்சி)
சனாதனம் பொய்யும் மெய்யும் 126
வால்மீகி இராமாயணம் மூல நூலன்று. பாலி மொழியிலுள்ள தசரத சாதகக் கதையே சிறு மாற்றத்துடன் எழுதப்பட்டது என ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர். பேரா. வீபர் ஓமரின் கிரேக்கக்காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டதாகக் கூறுகிறார்.
திராய் நாட்டு இளவரசனான பாரிசு என்பான், பார்ட்டாவின் அரசனான மெநிலாசின் மனைவியான எலனைக் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான். இதனால் மெனிலாசு தன் உடன்பிறப்பானனும் மைசினியாவின் அரசனும் ஆன அகமேனானின் உதவியுடன் எலனை மீட்பதற்காகக் கிரேக்கர்களின் பெரும் படை கொண்டு திராய் நகரத்தை முற்றுகையிடுகிறான். இராமாயணத்தில் இராமனின் மனைவி சீதையை இராவணன் கவர்ந்து செல்ல, இராமன் தன் தம்பி இலக்குவனுடன் படை எடுக்கிறான். எனவே, கதை ஒற்றுமையால், கிரேக்கக்காப்பியத்தின் தழுவல் எனப்படுகிறது.
கிரேக்கக் காப்பியத்தின் தழுவல் என்பதால் தனித்தன்மை வாய்ந்ததாகக் கூற இயலவில்லை. மக்களிடையே வேறுபாடு காட்டக்கூடிய செய்திகள் இடம் பெற்றுள்ளமையால் நடுவுநிலைமை வாய்ந்ததாகக் காண இயலவில்லை. இளவரசர்களின் பிறப்பையே ஒழுக்கக் கேடு அடிப்படையில் குறிப்பிட்டுள்ளமையால் நல்லொழுக்க நூலாகவோ உயர் சிந்தனை உடைய நூலாகவோ கூற இயலவில்லை. மூன்று பெண்களின் மார்பு முதலான உறுப்புகளை அறுத்து எறிந்துள்ளமையால் பெண்களுக்கு எதிரானதாக இந்நூல் விளங்குவதால் போற்ற முடியவில்லை.
கம்பரின் இராமன் தெய்வப் பிறப்பாகவும் எடுத்துக்காட்டான சான்றோனாகவும் திகழ்கிறான். ஆனால், வால்மீகி இராமன் முரண்பட்டவனாக உள்ளான். தொடக்கத்தில் இராமனின் அறிமுகம் அவனைச் சிறந்த நாயகனாகக் காட்டுகின்றது. ஆனால், சில சூழல்களில் தரக்குறைவான எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இடம் கொடுப்பவனாகவும் நல்லவன் போல் நடிக்கும் வேடதாரியாகவும் இராமன் விளங்குகிறான். இராமனின் பிம்பம் சிதறுகிறது.
ஆனால், இராமனை நல்லவனாகக் காட்டுவதற்காக உரையாசிரியர்கள் கோவிந்தராசா, மகேசுவர தீர்த்தா, திலகா, கடகா முதலியோர் போட்டி போட்டுக்கொண்டு யாரும் ஏற்க முடியாத பொருத்தமற்ற விளக்கங்களைத் தருவதாகப் பேரா.ப.மருதநாயகம் ஆய்வுரையில் கூறுகிறார். இவர்கள் தேவைப்படும் பொழுது உத்தரகாண்டத்தை எடுத்துக் கொண்டும் விளக்கத்திற்குப் பொருந்தவில்லை எனில் அதைப் புறக்கணித்தும் எழுதியுள்ளனர் என்கிறார் இவர்.
கைகேயியிடம் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு நல்லவன்போல் பேசும் இராமன் பின்னர் அவளைப்பற்றி வேறுவகையாகக் கூறுகிறான். பொதுவாகச் சராசரி மனிதனின் உணர்வுகள் இப்படித்தான் இருக்கும் என்பதால் இவை தவறல்ல. ஆனால், தொடர்ந்து வேடதாரிபோல் இராமன்பேசுவதுதான் சிறப்பில்லை.
தசரதன் கைகேயியிடம் அவள் மகனைப் பட்டத்தரசனாக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளான். இந்த வாக்குறுதி அடிப்படையில்தான் கையேயியை அவள் தந்தை மணம் செய்வித்தான். இதனை இராமன் அறிந்துள்ளான். இதனை அவன் இலக்குவனிடம் கூறி, இதனால் தந்தை மீது சினம் கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளான். ஆனால், தசரதன் இளவரசனாக முடி சூட்ட முற்பட்ட பொழுது உண்மைக்கு மாறாக நடக்க மாட்டேன் என்று கூறாமல் அதை ஏற்பதற்கு இசைகிறான்.
கைகேயி தனக்குத் தசரதன் அளித்த இரண்டு வரங்களின் அடிப்படையில் பரதனுக்கு முடிசூட்டவும் இராமனைக் காட்டுக்கு அனுப்பவும் வேண்டுகிறாளே தவிரத் தன் தந்தையிடம் அவன் அளித்த வாக்குறுதி குறித்து ஒன்றும் கூறாதது ஏன் எனத் தெரியவில்லை. எதன் அடிப்படையிலோ அவள் மகன் முடிசூட்டப்பட வேண்டும் என்பதுதான் அவள் விருப்பம். ஆனால், உண்மை அறிந்த இராமன் தந்தை எனப்படும் தசரதனிடம் வாக்குறுதியைப் பின்பற்றவேண்டும் என்று தெரிவிக்க வில்லை.
தருமத்தைக் காக்கப் பிறந்தவனாம் இராமனின் நாடான அயோத்தியில், பிராமணன் ஒருவனின் குழந்தை எந்தக் காரணத்தினாலோ இறக்கிறது. இராமன் தருமத்தைக் காக்கவில்லை என்று அப்பிராமணன் குற்றஞ்சாற்றுகிறான். எவ்வாறெனில், “ஒரு சூத்திரன் தவம் செய்கிறான்; ஆகவேதான் என் குழந்தை இறந்தது” என்ற குற்றச்சாற்றிலிருந்து விடுபட அப்பிராமணன் சொற்படி இராமன் தருமத்தைக் காக்கப் புறப்படுகிறானாம்.
புறப்பட்ட இராமன் நாட்டைச் சுற்றி வரும் போது விந்திய மலைக்குத் தெற்கில் ஒருவன் தலைகீழாகத் தொங்கித் தவம் செய்வதைப் பார்க்கிறான். “நீ, நால்வருணத்தில் எவன்?” என்று இராமன் வினவ, “நான் சூத்திரக் குலத்தில் பிறந்தவன்; நான் தேவனாகிக் கடவுளைப் பார்க்க வேண்டும். தேவருலகைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இத்தவத்தைச் செய்கிறேன்” என்கிறான் சம்பூகன் என்னும் அவன். இப்படி அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே இராமன், தன் வாளை எடுத்து சம்பூகனின் தலையை வெட்டிக் கொல்கிறான். அதே வேளையில் இறந்த பிராமணக் குழந்தை உயிர் பெறுகிறது.
பார்ப்பனர்களின்றி மந்திரம் ஓதுவதும், கடவுளைக் காண விழைவதும், சூத்திரர்கள் தவமிருப்பதும் கூடாதென்று தடைவிதிக்கும் இராமாயணம் இராமனைக் கடவுளாகவும், சீதையைப் பத்தினியாகவும், திராவிடர்களைக் குரங்குகளாகவும், அடிமைச் சேவகர்களாகவும் சித்தரிக்கின்றதால், இராமாயணம் எங்ஙனம் சிறந்த நூலாகும்.
காண்க:
- ILIAD AND RAMAYAN: A STUDY IN COMPARISON AND CONTRAST
Dr. Harmik Vaishnav, School of Liberal Studies
- The ILIAD and the RAMAYANA: Narrative Techniques
Saudamini Deo, Jadavpur University
- Ramayana and Greek mythology-A CREATIVE COMPARISON – Sidharth Sankar
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 189-192
Leave a Reply