133/133. பிராமணர்கள் தமிழர்களா? அவர்கள் யார்? – சனாதனம் நிறைவு

(132/133. தமிழுக்கும் தமிழர்க்கும் தீங்கிழைக்கும் பிராமணர்கள் – தொடர்ச்சி)
முதல் வினா இன்னும் சற்றே விரிவாகக் கேட்க வேண்டியது. ஏன் தமிழர்களா? என்று மட்டும் கேட்கிறீர்கள்?
• பிராமணர்கள் தமிழர்களா? பிராமணர்கள் மலையாளிகளா? பிராமணர்கள் தெலுங்கர்களா? பிராமணர்கள் கன்னடர்களா? பிராமணர்கள் துளுவர்களா? பிராமணர்கள் மராத்தியர்களா? பிராமணர்கள் குசராத்திகளா? பிராமணர்கள் வங்காளிகளா? ….. பிராமணர்கள் காசுமீரிகளா? …… இப்படி நீண்டுகொண்டே போகவேண்டும் உங்கள் கேள்வி.
நீங்கள் கேட்டுவிட்டீர்கள். ஏனைய மாநிலங்களில் இக்கேள்வி உள்ளீடாகத் தொக்கி நிற்கின்றது.
புலம் பெயர்ந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் சென்ற பிறகும் ஆரிய இனம் மட்டும் உலகில் இந்த அவலத்துக்கு ஆளாகியிருக்கிறது.
ஆம்! ஆரிய பிராமணர்கள் என்னும் இனத்தைத் தவிர, உலகில் வேறு எந்த இனமும் இத்தகைய கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவதே இல்லை!
முதலில் இக்கேள்வி ஏன் எழுப்பப்படுகின்றது?
• மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன், ஆரியர்கள் புலம் பெயர்ந்து, இந்தியா வந்தபோது, இன அச்சம்(ethnic fear) காரணமாக, (குறிப்பாகத் தங்கள் இனம், பிற இந்திய பூர்வ இனங்களுடன் கலந்து கரைந்து போய்விடாமல் பாதுகாக்கவே,) தங்களைப் பிராமணர்கள் (அதாவது, விராட் புருடன் எனப்படும் பிரம்மத்தின் தலையில் பிறந்தவர்கள்) என்றும், தாங்கள் பேசும் மொழி ‘தேவபாசை’ என்றும், தங்களிடம் மனிதர்களால் உருவாக்கப்படாத வேதங்கள் (ஆரியர்களின் நாடோடி இனஇலக்கியம்) உள்ளன என்றும் பொய் கூறினார்கள்!
•
அங்கே தொடங்கியது ஆரியர்களின் தீர்க்கவே இயலாத இனப் போராட்டமும், வாழ்வியல் போராட்டமும்!
ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, புலம் பெயர்ந்து வந்தவர்கள் மேற்கூறிய கதைகளைக் கூறிக்கொண்டு, இந்தியாவெங்கும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று குடியேறினர்.
சிவப்பாக இருக்கும் ஆரியன் பொய் சொல்லமாட்டான்; வேள்வி செய்து கடவுள்களைக் கட்டுப்படுத்தும் சக்தியுள்ளவன், உயர்ந்தவன் என்று நாகரிகத்தில் பல படிகள் மேம்பட்டிருந்த பூர்வகுடி இந்தியர்கள் ஏமார்ந்ததால்,
• வேதங்களைக் கொண்டு செய்யும் வேள்விகளையே தங்கள் முழுநேரத் தொழிலாகக் கொண்டனர் ஆரியர்கள்!
ஆண்களைவிடப் பெண்கள் எண்ணிக்கை குறைவாயிருந்ததால், குடியேறிய இடங்களில் இருந்த பூர்வகுடி இந்தியப் பெண்களை மணமுடித்துக் கொண்டு, தங்கள் இனவிருத்தியைச் செய்தனர்.
வேதமொழியை அழித்த ஆரியர்கள்!
• வேற்றினப் பெண்களை திருமணம் செய்ததால், வேதக்கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டது! பெண்களால் பேசப்படாததால், பேச்சு வழக்கிலிருந்து வேதமொழி அழிந்துபோக, ஆரியர்களே முழுக்காரணம் ஆயினர்!
• ஆரியப் பிராமணக் குழந்தைகள் தங்கள் தாய் பேசிய மொழியையே பேசியதால், ஆரியர்களின் வேதமொழி சிலதலைமுறைகளுக்குள் பேச்சு-வழக்கு, உலக வழக்கு இழந்துபோய்விட்டது.
உள்ளூர் மொழிகளே ஆரியப் பிராமணர்களின் தாய்மொழி!
காலப்போக்கில், ஆண்-பெண் பேதமின்றி, ஆரியர்களின் தாய்மொழி அவர்கள் வாழ்ந்த நாட்டின் மொழியாகவே மாறிவிட்டது!
• தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர் தமிழர் இல்லை!
• மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர் மலையாளி இல்லை!
• வங்காளி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர் வங்காளி இல்லை!
• இப்படிப் பட்ட அவலம் இந்தியாவெங்கும் வாழும் ஆரியப் பிராமணர்களுக்கு ஏற்படுகின்றது!
தந்தைமொழியான வேதமொழி ஏட்டுச்சுரைக்காய் ஆனது!
• வேதம் ஓத மட்டுமே பயன்பட்ட வேதமொழி, ஆண் குழந்தைகளுக்கு மட்டும், அவரவர் தந்தைகளால், வேள்வித்தொழில் செய்யும் பொருட்டுக் கற்றுக் கொடுக்கப்பட்டதால், வேதமொழி, தந்தைமொழி எனப்பட்டது!
• ஆரியப் பிராமணர்களுக்குத் தாய்மொழிகள் மாறலாம்! தந்தைமொழி ஒன்றே!
• இப்போது சொல்லுங்கள்! உலகில் எந்த மனிதனுக்காவது இப்படிப்பட்ட அவலமான இரு-மொழி – Duality நிலை இருக்குமா?
ஆரியப் பிராமணர்களின் தாய்மொழிகள் அவரவர்கள் குடியேறிய நாட்டைப் பொறுத்து, அந்தத்த நாட்டைச் சேர்ந்த பல இந்திய மொழிகள்!
• ஆரியர்கள் முன்னோர்களின் தாய்மொழியான வேதமொழி, இப்போது வேதவேள்வி செய்து வயிற்றுப் பிழைப்புதொழிலுக்கு மட்டுமேயான தந்தைமொழி!
• தந்தைமொழியின் எழுத்துவடிவம் பல்வேறு தாய்மொழிகளின் எழுத்து வடிவங்கள்!
வேதமொழி, எண்ணும், எழுத்தும் இல்லாமல் இருந்ததால், வேத மொழிக்கான எழுத்துமுறை இந்தியாவெங்கும் இருந்த பல்வேறு தமிழ், பிராக்ருத, திராவிட, கூர்ச்சர, வங்காள மொழிகளின் எழுத்துமுறையையும், இலக்கணத்தையும் அடியொற்றி இருந்தன.
இந்தியாவெங்கும் பலமொழிகளிலிருந்து உருவான பிராதி-சாக்கிய எழுத்துகளில் எழுதப்பட்ட வேதங்களைத் தொகுத்தவர் வேதவியாசர்!
• இந்தியாவெங்கும் ஆரியர்களின் இன இலக்கியமான இருக்கு வேதம் பல்வேறு எழுத்து வடிவங்களில் மாறுபட்டிருந்தது. பாதராயணர் என்னும் வேதவியாசர், இவற்றை ஒன்று திரட்டி, மாறுபாடுகளைக் களைந்து, ரிக்கு, யசூர், சாம வேதங்களாகத் திட்டப்படுத்தினார்.
•
வேதமொழிக்கான இலக்கணத்தையும், எழுத்து முறையையும், தமிழ் மொழியின் இலக்கணத்தை ஒட்டி அமைந்த கிரந்தமொழியைப் பின்பற்றி, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், ‘பாசா’ என்னும் மொழியாக திட்டப்படுத்திய பாணினி என்பவர் ‘அசுடத்யாயி’ என்னும் ‘வியாக்ரண்’ இலக்கண நூலைச் செய்தார்.
பிற்கால ஆரிய மொழியியலாளர் இவற்றை மேலும் செம்மைப்படுத்தி, சமற்கிருதம் (நன்றாகச் செய்யப்பட்ட மொழி) என்ற அரை-செயற்கை மொழியாகக், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கினர்.
இரிக்கு, யசூர், சாம என்னும் மூன்று வேதங்களும், சமற்கிருதத்தில் முறையாக மாற்றி எழுதப்பட்டன.
கி.பி. எட்டாம் நூற்றாண்டு வாக்கில், சமற்கிருதத்துக்கு தேவநாகரி எழுத்துவடிவம் அறிமுகம் செய்யப்பட்டு, காலப்போக்கில் பெருவழக்காக ஆனது!
தமிழர்களின் சங்க, பக்தி இலக்கியங்களில் ‘நான்மறை’ என்று ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்னும் உறுதிப்பொருட்கள் பேசப்படுவதால், தமிழர் மரபுகள், ஆரிய மரபிலிருந்து வந்தைவையே என்று காட்டும் தீய எண்ணத்துடன்,
பில்லி, சூனியம் போன்ற தீய செயல்களைச் செய்யும் மந்திரத் தொகுப்புக்கு அதர்வண வேதம் என்று பெயரிட்டு இரிக்கு, யசூர்,, சாம, அதர்வண என்று நால்வேதம், சதுர்மறை, நான்மறை என்று பொய்ப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்னும் தமிழர் வாழ்வியல் நெறிகளைச் சற்றே மாற்றி,
தரும, அருத்த, காம, மோட்ச என்னும் நான்கு புருசார்த்தங்கள் என்று கூசாமல் புளுகினர்.
தமிழர் அறம் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது!
ஆரியர்கள் மனு’தர்மம்’,
பிராமணர்களின் நலனுக்காக,
பிராமணர்களால், பிராமணர்களுடைய வாழ்வியல் நெறிகளை வகுப்பது;
பிற இன மக்களை அடிமைகளாக, சூத்திரர்களாக வரையறுப்பது!
அனைவரும் சமம் என்று இன்றைய ஆரிய தலைமுறை மக்களாவது வாழ்ந்தால், இந்தியா என்னும் நாட்டுக்கு பலம் சேர்த்திருக்கும்.
ஆனால், ஆரியர்கள், தங்களின் முன்னோர்கள் செய்த மனுதர்மக் கொடுமைகளை நியாயப் படுத்தப் பார்க்கிறார்கள்!
கீழ்த்தரமான விதிகளுக்குப் புனிதப் பொருளை ஏற்றி, நம்மை முட்டாளாக்க முயல்கிறார்கள். இங்குதான் உரசல் வருகின்றது!
அமெரிக்காவில் ஐந்தாண்டுகள் வாழ்ந்து, பச்சை யட்டை குடியுரிமை பெற்ற ஆரியர்கள் முழுமையான அமெரிக்கக் குடிமக்களாகவே மாறி, அமெரிக்கா நாட்டுக்கு உண்மையான வாழ்கிறார்கள்!
ஆனால், தமிழ்நாட்டில் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும், தமிழே தாய்மொழியாகக் கொண்ட தமிழ்ப் பிராமணர்கள் தமிழ் மொழியை ‘நீசமொழி’ என்று வாய்கூசாமல் சொல்வதை என் காதால் கேட்டிருக்கிறேன்! தமிழுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படுவதையும் கண்டிருக்கிறேன்!
தமிழர்களுக்கும், தமிழுக்கும் எதிராக ஏன் இந்தக் கொலைவெறி?
பள்ளி நாட்களில் பிராமணத் தோழர்களின் வீட்டுக்குச் சென்ற சமயங்களில், “கண்ட சூத்திரனையெல்லாம் ஆத்துக்கு ஏண்டா கூட்டிண்டு வர்றே! சனியனே!” என்று நன்றாகக் காதில் விழட்டும் என்று கத்திச் சொல்லும் வயதான பிராமணப் பாட்டி-தாத்தாக்களைப் பார்த்திருக்கிறேன்!
‘கத்தாதே தாத்தா! அவன் சுத்த சைவம்தான்! காதுல விழுந்துறப் போறது!” என்று கெஞ்சும் பிஞ்சு உள்ளத்திடம், “எவனா இருந்தா என்னடா? சூத்திரன் சூத்திரன்தான்!. கூட்டிண்டு வெளில போ! ஆத்தைக் கழுவிவிடணும்”-னு எரிந்து விழுந்த தாத்தாவின் கோபத்தின் முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் வெளியில் வந்து,
‘வயசான கெழம்டா! எனக்காக மன்னிச்சுக்கோ!” என்று கூனிக்குறுகும் நல்ல பிராமண நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்!
ஆரியன் என்ற இனத்தூய்மை இன்று இல்லவே இல்லை. என்று இங்குள்ள பெண்களை மணந்து, இனவிருத்தி செய்தார்களோ, அன்றே, ஆரியர்கள் கலப்பினமாக மாறிவிட்டார்கள்.
ஆரியம் என்பது இன்று கருத்தியல் சார்ந்த வன்முறை மட்டுமே!
அவற்றை புனிதப் புனுகு கொண்டு, ஏமாற்றப் பார்ப்பதுதான் இங்குச் சிக்கல்!
பன்மைத்துவத்தை மதிப்பதும், தமிழர்கள் வழிபாட்டு இடங்களின் சமற்கிருதத்தைத் திணிப்பதிலிருந்தும், ஊர்களையும், கோயில்களையும் சமற்கிருதப் பெயர்மாற்றம் செய்வதிலிருந்தும், ஆரியர்கள் மாறினால் அமைதி நிலவும்.
அதை விட்டுவிட்டு, சநாதன தருமம், இந்து தருமம் என்று பூசி மொழுகும்போதுதானே, ‘தெய்வத்தின் குரல்’ பதிவுகளை மேற்கோள் காட்டவேண்டியுள்ளது!
– மாயோன் (கிருட்டிணன்) நல்லபெருமாள், தமிழ்க்கோராவில்
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 212-219
000
சனாதனம் என்பது பயங்கரத் தொற்று நோய்
– ஒழிக்கப்பட வேண்டும்!
சனாதனம் என்பது குமுகாயக் களங்கம்
–துடைக்கப்பட வேண்டும்!
சனாதம் என்பது மன்பதை அநீதி – அகற்றப்பட வேண்டும்
- நிறைவு
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 223- 229
Leave a Reply