ஈழம் : துயரம் விலகவில்லை !

என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை!

   ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம் மீண்டும் உரிமையாட்சி செய்வதே தமிழர்களின் இன்னல்களைப் போக்கும்; நன்மைகளைப் பெருக்கும் என்ற  முடிவிற்கு வந்தனர். எனவே, தமிழர்கள் நெருக்கமாக வாழும் தமிழ்ப்பகுதிகளை இணைத்துத் தமிழீழம் கேட்டனர். அமைதிவழி அறப்போராட்டங்களும் அரச அடக்குமுறைகளின் துப்பாக்கிக்குண்டுகளால் எதிர்கொள்ளப்பட்டன. எனவே, அமைதிவழியினும் மற வழியே சிறந்தது எனத் தாங்களும் ஆயுதங்களைக் கைகளில் எடுத்தனர்.  இந்திய அரசு ஒதுங்கி யிருந்தால் என்றோ தமிழீழம் மலர்ந்திருக்கும்! உயிர்ப்பலிகள் தடுக்கப்பட்டிருக்கும்! பன்னாட்டு மன்றங்களில் தமிழீழக் கொடிகள் பறந்திருக்கும்! உலகெங்கும் தமிழீழத் தூதர்கள் தமிழ்ப்பணிகளும் மக்கள்நலப்பணிகளும் ஆற்றிக்  கொண்டிருந்திருப்பர்.

  ஆனால், அண்டை நாட்டின் வஞ்சகத்தாலும் பிற உலகநாடுகளின்  ஏமாற்று வேலைகளாலும் ஈழத்தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்பட்டனர். 2009 மேத்திங்கள் பெரும் அவலம் நேர்ந்தது.  கொத்துக்குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் இருநூறாயிரவர்கள் அழிந்தனர். ஈழ நிலப்பகுதி அழிக்கப்பட்டது. புறநானூற்றின் இலக்கணமாகத் திகழ்ந்த விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால்  கொடுமைகளால் ஆயுதங்களை அமைதியாக்கினர். மேதகு பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நல்லரசு சிதைக்கப்பட்டது.

   ஈழத்தமிழர்களின் வாக்குச்சீட்டு என்னும் ஆயுதம் இலங்கை அரசை மாற்றியது. எனினும் துயரம் தீரவில்லை. இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை. நேற்றுவரை உடன் குற்றவாளியாக இருந்தவர்கள் எப்படித் திருந்துவர்? எனினும் சிங்கள வெறியர்களின் நெருக்குதல் இல்லையெனில், புதிய அரசு,. சில நன்மைகளைத் தமிழர்களுக்கு ஆற்றியிருக்கும். சிங்களவன் கைகளில் ஆட்சிக்கோல் இருக்கும்வரை தமிழர்களின் நிலையில் மாற்றமிராது என்பதே உண்மை என்பதையே தமிழர்கள் உணர்ந்து கூறி வருகின்றனர். ஒவ்வொருவர் வீட்டிலும் உயிர்ப்பலிகள், உடைமை இழப்புகள் போன்ற துயரங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும் சூழல் அவர்களை அமைதியாக இருக்கச் செய்துள்ளது. அமைதி காத்தாலும் அவர்களின் உள்ளங்களில்  உரிமைத் தீ கனன்று கொண்டுதான் உள்ளது.

  ஈழத்தமிழர்களுக்கான நீதி கேட்டு, தனியுரிமையுடன் ஆட்சியமைக்க உரிமைகேட்டுப் புலம் பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் கருத்தாடல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

   பதவி ஆசையும் பிற ஆசைகளும் உடைய சிலரும்   தமி்ழ்ஈழத்தை ஆதரிப்பதுபோல் நடித்து ஈழப்போராளிகளுக்கு எதிரான கருத்தை விதைக்கும் கயமைத்தனம் உடைய சிலரும் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். அதே நேரம் கையறு நிலையில் உள்ள ஈழத்தமிழர்கள் விடிவை எதிர்நோக்கி அமைதி காத்து வருகின்றனர். இதனால், அவர்கள் சோர்ந்துவிட்டார்கள் என்றோ, கயமைக்குப்பலியாகிவிட்டனர் என்றோ பொருளல்ல!

  • காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவரம் இன்னும் தெரியவில்லை.
  • தமிழர் பகுதிகிளில் சிங்களக் குடியிருப்புகளும் சிங்களப் படைக்குடியிருப்புகளும் பெருகி வருகின்றன.
  • தமிழர்களைத் தமிழ்ப்பகுதிகளிலேயே சிறுபான்மை ஆக்கும் முயற்சிகளில் சிங்கள அரசு ஈடுபட்டு வருகின்றது.
  • வீடிழந்தவர்கள் 100 பேர் இருக்கும் இடத்தில் ஒருவருக்கு வீடுகொடுத்து அனைவருக்கும் வீடு கொடுத்ததுபோல் விளம்பரம்செய்து உலகமக்களிடம் தமிழர்கள் நல்வாழ்வில் கருத்துசெலுத்துவதுபோல் ஏமாற்றுவதும் தொடர்கின்றது.
  • வெண்ணூர்தி(வெள்ளைவேன்) கடத்தல் தொடர்கி்ன்றது.
  • சித்திரவதை முகாம்களில் உள்ளவர்கள் விடுவிக்கப்படவி்ல்லை.
  • இனப்படுகொலையால் உயிர்ப்பலியான குடும்பத்தாரின் நினைவைக்கூடப் போற்றத் தடை

  இவ்வாறான பலவற்றை ஈழத்தமிழர்கள் துயரத்துடன் தாங்கிக் கொண்டுள்ளனர். இவற்றிற்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளனர்.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்(திருவள்ளுவர், திருக்குறள் 487).

  பகைவர் தீங்கு இழைத்தவுடன் சினந்தெழாமல், அறிவுடையோர் உள்ளத்தில் சினத்தை வளர்த்துத்  தக்க காலம் பார்த்துக் காத்திருப்பர் என்னும் வள்ளுவர் நெறியின்படி ஈழத்தமிழர்கள்  உரிய காலம் வரும்வரை வெளிப்படையாகக் களத்தில் குதிக்கமாட்டார்கள். எனவே, ஈழத்தமிழர்கள் அமைதியைத் தவறாக எடைபோடக்கூடாது.

  முள்ளிவாய்க்கால் அவலத்துடன் தமிழ் ஈழத்திற்கு முற்றுப்புள்ளி இடவில்லை. அரைப்புள்ளிதான் இடப்பட்டுள்ளது. எனவே, “ஈழம் மலரும்! மலர்ந்தே தீரும்!” என்பதே தமிழர்களின் நம்பிக்கை!

  ஈழத்தமிழர்களின் துயரம் விலகவில்லை! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! என்பதே உண்மை.

  நம்பிக்கை பொய்க்காது,  ஈழம் மலரட்டும்! துயரம் விலகட்டும்! அமைதி நிலவட்டும்! மகிழ்ச்சி நிலைக்கட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல 186,  சித்திரை 31, 2048 /  மே 14, 2017