92 ?. ஒருவேளை முன்பு சனாதனத்தில் பாகுபாடு இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 89-91 தொடர்ச்சி)
- சனாதனம் – பொய்யும் மெய்யும் 92
- ?. ஒருவேளை முன்பு சனாதனத்தில் பாகுபாடு இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை என்கிறார்களே!
- இது மிகவும் தவறான கருத்து என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இருப்பினும் ஒன்றைக் கூறுகிறேன்.
- கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை(மனுதர்மம்) என்பது சனாதனம். இதனை வெளிப்படுத்தும் தீர்ப்பு ஒன்றைப் பாருங்கள்.
- “என் கணவர் அடித்துத் துன்புறுத்துவதால், அவரிடம் இருந்து மணவிலக்கு வழங்க வேண்டும்” எனக் கோரி, பெண் ஒருவர் தொடுத்த வழக்கில், கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலா, “குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இது போன்ற விசயங்களைக், குழந்தைகளின் நலன் கருதிப், பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார் (ஆகட்டு/செட்டம்பர் 2022).
“எதிரிகளுக்குச் சுரத்தைக் கொடு” என்பது வேதம். “நாத்திகனுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது” என்றவர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (தெய்வத்தின் குரல், தொகுதி 3, பக்கம் 148).
- ஆரியநூல்கள் பிராமணர்க்கு முதன்மையும் தலைமையும் கொடுக்கின்றன என்பதை அவற்றைப் படிப்போர் அறிவர். ஆனால் இவற்றை மறைத்து விட்டு, இவை ஒழுக்கமானவர்களைத்தான் போற்றுவதாகப் பொய்யுரை தருகின்றனர். வருண வேறுபாடுகளையும் ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் பிராமணன் ஆகின்றான், பிறப்பினால் அல்ல எனப் பொய்யான விளக்கம் தருகின்றனர். ஒழுக்கம்தான் அடிப்படை என்றால் தலையில், முகத்தில், தோளில், காலில் பிறப்பதாகக் கூறி அவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது ஏன்? இவ்வாறு பொய்யான விளக்கங்கள் அளித்து ஆரிய நச்சுரைகளை நல்லுரைகளாகக் காட்டுவோருக்கும் அத்தகைய நூல்களை வெளியிடுவோருக்கும், அத்தகைய விளக்கவுரைகளுக்கு ஏற்பாடு செய்யும் அமைப்பாளர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். அத்தகையோருக்குச் சான்றாக கட உபநிடதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில் சிலவற்றைப் பார்ப்போம்.
“தூயவன் ஒருவன் விருந்தினனாக வரும்போது நெருப்பு போலவே நுழைகிறான்” என்பது ஒரு மொழி பெயர்ப்பு வரி. ஆனால், மூலநூலாகிய சமற்கிருதத்தில் தூயவன் என்று இல்லை. பிராமணன் என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது. ஆங்கில மொழி பெயர்ப்பிலும் அவ்வாறுதான் உள்ளது.
இதன் மற்றொரு பாடல் “யாருடைய வீட்டில் தூயவன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்பப் புத்தி உடையவனான அவனது அஃதாவது வீட்டு உரிமையாளனது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் அழிகின்றன. தான் செய்த புண்ணியங்களின் பலன், இனிய பேச்சின் பலன், யாகங்கள் வழிபாடு போன்றவற்றின் பலன், நற்பணிகளின் பலன் அனைத்தையும் அவன் இழக்கிறான். அவனது பிள்ளைச்செல்வம் கால்நடைச் செல்வம் அனைத்தும் அழிகின்றன” என்று மொழி பெயர்ப்பில் தரப்படுகிறது.
இதற்கு விளக்கமாக, “தூயவன் ஒருவன் வீட்டிற்கு வந்தால் அவனை விருந்தோம்ப வேண்டியது – உபசரிக்க வேண்டியது கடமை என்பதை இந்த மந்திரம் உணர்த்துகிறது. உபசரிக்கா விட்டால் எல்லாச் செல்வமும் அழியும். அதே வேளையில் உபசரித்து அவர்களின் மனம் கனிந்த ஆசிகளைப் பெற்றால் செல்வம் அனைத்தும் சேரும் என்பது உணர்த்தப்படுகிறது” என உள்ளது.
மேலோட்டமாகப் பார்த்தால் தூயவர்களைத்தானே போற்றுகின்றது. இதில் என்ன தவறு. உயர்ந்த கருத்தாக உள்ளதே என எண்ணத் தோன்றும்.
ஆனால் கட உபநிடதம் என்னும் மூலச் சமற்கிருத நூலில் “பிராமணர்களைப்(ப்ரா‘க்மணோ) பேணாவிட்டால் பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம் அழியும், அவன் செய்த எல்லா நற்செயல்களின் பயன்களும் இல்லாமல் போகும்” என்றுதான் கூறுகிறது.
மற்றொரு பாடலிலும் பிராமணன் என்னும் சொல் வழிபாட்டிற்குரியவன் என்றும் தூயபாலன் என்றும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு எல்லா இடங்களிலும் பிராமணன் என மூல நூலில் உள்ள இடங்களில் எல்லாம் திரித்துக் கூறப்பட்ட மொழிபெயர்ப்புகளையே நாம் காணலாம். இவற்றின் அடிப்படையில் அந்நூற்கருத்துகளைப் போற்றும் அறியாதவர்களையும் காணலாம்.
பிராமணர்களை உயர்த்திக் கூறும் சாதிப் பாகுபாட்டு நூல் எங்ஙனம் போற்றுதற்கு உரியது ஆகும்? என்பதை நாம் உணரவேண்டும். மூல நூலில் பிராமணன் என உள்ளதை வேண்டுமென்றே தமிழில் தூயவன் எனக் குறிப்பிட்ட அநீதியைத் தட்டிக் கேட்பார் யாருமில்லையா? அதே நேரம், தூயவர்களைப் போற்றல்போலும், மறுபுறம் பிராமணர்கள் தூயவர்கள் என மறைமுகமாக வலியுறுத்துவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பின் மூலம் தவறான கருத்தைப் பரப்பும் அழிமதியர்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டிற்கு வரும் பிராமணனை நல்லவனாகக் கூறிப் போற்ற வேண்டும் எனச் சொல்வதன் மூலம் பிறர் நல்லவர் அல்லர் எனக் கூறுகின்றது. இதன் மூலம் பிராமணர்க்கு அடிமையாக இருக்க மூளைச்சலவை செய்கிறது கட உபநிடதம்.
பிராமணனுக்குத் தகுதி யில்லாத பொருள்களை, பசுக்களை, பிறவற்றைத் தானமாகக் கொடுப்பவன் மகிழ்ச்சி இல்லாத உலகங்களை அடைவான் என்றும் கடஉபநிடதம் கூறுகிறது. தானம் கொடுப்பதாக இருந்தால் யாவர்க்காயினும் தரமான தகுந்தவற்றையே கொடுக்க வேண்டும் என்றால் நல்ல கருத்தாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பிராமணனுக்குத் தகுதி யில்லாத பொருள்களை வழங்கினால் நல்லுலகம் கிடையாது. நரக உலகம்தான் செல்வான் என்பது பிராமணர்களுக்கு மட்டும் சிறப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது அல்லவா?
இவை எல்லாம் காலக்கடவுளான எமன், நசிகேதன் என்னும் சிறுவனுக்குக் கூறுவதாக உள்ளன. ஆகக் கடவுளே பிராமணனைப் போற்றச் சொல்கிறார் என்றால் நாம் அதைக் கேட்க வேண்டும் என்றுதானே அப்பாவி மக்கள் எண்ணுவர்.
புத்தி விழிப்படைய காயத்திரி மந்திர வழிபாடு முதலியவற்றைச் செய்யுமாறு கடஉபநிடதம் கூறுகிறது.
காயத்திரி மந்திரத்தைப் பிராமணர்கள்தான் சொல்ல வேண்டும் என்கிறது வேதம். இல்லை இல்லை. ஒழுக்கமானவர்கள் யாரும் காயத்திரி மந்திரம் கூறலாம் என இக்கால நஞ்சு நெஞ்சுடையோர் பொய் விளக்கம் தருவர். ஆனால் வேதத்தில் அவ்வாறு இல்லை. நம்மை ஏமாற்றுதற்காக இவர்கள் தரும் தவறான விளக்கம் இதுவே. பிராமணர்கள்தான் காயத்திரி மந்திரம் சொல்ல முடியும் என்றால் அவர்கள் மட்டும்தான் அறிவுக்கூர்மை அடைய முடியும். பிறர் அவரை அண்டி அவர் மூலமாக அவர் தரும் அளவுஅறிவு பெறவேண்டும் என்றாகிறது.அறிவு வளர்ச்சிக்கும் சாதியை அளவுகோலாகக் கூறும் ஒரு நூலை நாம் செவ்விலக்கியம் என்று சொல்ல முடியுமா? அவ்வாறு சொன்னால் அது மனித நேயத்திற்கு எதிரானதாக அமையாதா? எண்ணிப்பாருங்கள்.
“யாகங்களைச் செய்பவனுக்கு ஆண்களை மயக்குகின்ற தேவலோகப் பெண்களைத் தருகிறேன்” என ஒரு பாடலில் உள்ளது. பல பெண்களைத் தருவதாகக் கூறுவதிலிருந்தே இது கற்பொழுக்கத்திற்கு எதிரான நூல் எனலாம். இத்தகைய உடநிடதங்களை நாம் எப்படிப் போற்ற முடியும்? .(இலக்குவனார் திருவள்ளுவன் உரையில் ஒரு பகுதி, சமற்கிருதம் செம்மொழியல்ல: கட உபநிடதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை)
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 128-131