(சனாதனம் – பொய்யும் மெய்யும் 92 தொடர்ச்சி)

  • ஒழுக்கம் அற்றவர்கள் காயத்திரி மந்திரம், நரசிம்மர், ஆஞ்சநேயர் போன்ற கடவுளரைப்  பூசித்தால் அவர்கள் கோபம் கொண்டு விடுவார்கள் என்றும், அவர்களால் கெடுபலன்கள் விளையும் என்றும் எழுதி வைத்துப் பரப்புகிறார்கள். ஒழுக்கம் அற்றவர்கள்தானே சொல்லக்கூடாது; பிற சாதியில் உள்ள ஒழுக்கமானவர்கள் சொல்லலாமே என்றால், பிராமணர் அல்லாதவர் என்ற சமற்கிருதத் தொடரைத்தான் தமிழில் இவ்வாறு தவறாக மொழி பெயர்த்துள்ளனர். எனவே, பிராமணர்க்கும் அல்லாதவர்க்கும் வெவ்வேறு நீதி கூறும் நூல்களை நாம் புறக்கணிக்க வேண்டாவா?  இவற்றை யெல்லாம் நாம் எங்கே பயன்படுத்துகிறோம் என்கிறீர்களா? பல்வேறு இணையத்தளங்களிலும் மின்னிதழ்ப் பக்கங்களிலும் இவை பகிரப்பட்டுள்ளன. இந்தப்பரப்பலுக்குத் தடை விதிக்காமல் நாம் அவற்றை மதிக்கவில்லை என்று சொன்னால் பொருளாகாது. எனவே, ஆரிய நூல்களில் இல்லாத நல்ல கருத்துகள் உள்ளனபோல் தவறாக விளக்குநருக்கும் மொழி பெயர்க்குநருக்கும் தண்டைன வழங்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.

புத்தி விழிப்படைய காயத்திரி மந்திர வழிபாடு முதலியவற்றைச் செய்யுமாறு கடஉபநிடதம் கூறுகிறது.

காயத்திரி மந்திரத்தைப் பிராமணர்கள்தான் சொல்ல வேண்டும் என்கிறது வேதம்.  இல்லை இல்லை. ஒழுக்கமானவர்கள் யாரும் காயத்திரி மந்திரம் கூறலாம் என இக்கால நஞ்சு நெஞ்சுடையோர் விளக்கம் தருவர். ஆனால் வேதத்தில் அவ்வாறு இல்லை. நம்மை ஏமாற்றுதற்காக இவர்கள் தரும் தவறான விளக்கம் இதுவே. பிராமணர்கள்தான் காயத்திரி மந்திரம் சொல்ல முடியும் என்றால் அவர்கள் மட்டும்தான் அறிவுக்கூர்மை அடைய முடியும். பிறர் அவரை அண்டி அவர் மூலமாக  அவர் தரும் அளவுஅறிவு பெறவேண்டும் என்றாகிறது. அறிவு வளர்ச்சிக்கும் சாதியை அளவுகோலாகக் கூறும் ஒரு நூலைச் செவ்விலக்கியம் என்று தவறாகப் பரப்பி வருகிறார்கள்.  மக்களிடையே  பாகுபாடு காட்டும் இத்தகைய நூல்களை அவ்வாறு சொல்வது  மனித நேயத்திற்கு எதிரானதாக  அமையாதா? எண்ணிப்பாருங்கள். .(இலக்குவனார் திருவள்ளுவன் உரையில் ஒரு பகுதி, சமற்கிருதம் செம்மொழியல்ல: கட உபநிடதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை)

மனுவின் கொள்கைபடி சூத்திரர்கள் அறிவுரை அல்லது கல்வி பெற தகுதியற்றவர்கள். புனித நூல் விவரங்களை அவர்களுக்கு அறிவிக்க உயர் சாதியினர் முற்படக் கூடாது. சூத்திரர்கள் முன்னர் வேதங்களை ஒதுவதும் கூடாது.

எனவே, இப்பாகுபாட்டை வலியுறுத்தும் உபநிடதங்களை அனைவருக்கும் பொதுவாக இருக்கும் தகுதியற்ற நூல்களை  நாம் எங்ஙனம் சிறந்த நூல்களாகப் போற்ற முடியும்?

“மேலான பொருளாழம் மிக்க இந்த உபநிடத்தைச் சான்றோர்களின் அவையிலோ சிரார்த்த காலத்திலோ தூயவனான ஒருவன் படித்தால் அது எல்லையற்ற பலனைத்தருகிறது” என்பது ஒரு பாடலில் பொருள். ஆனால், மூலச்சமற்கிருத நூலில் பிராமணன் படித்தால் என்றுதான் உள்ளது.

எனவே, பிராமணன் படித்தால்தான் பலன் கிடைக்கும். ஆதலினால் பிராமணர் அலலாதார் யாரும் படிக்க முயலாதீர்கள் என நூலிலேயே தெரிவித்து விட்டனர். பொதுவாக நூலின் இறுதியில் அந்நூலைப்படிப்பவர்க்கு என்ன பயன் கிடைக்கும் என்று சொல்வது வழக்கம். அது பொதுவாகத்தான் தமிழ் நூல்களில் இருக்கும். ஆனால், சமற்கிருத நூலில் பிராமணனுக்குத்தான் பலன் கிடைக்கும் என்றுதான் உள்ளது. சனாதனத்தின் சாதி வேறுபாட்டை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

“வாழும் மக்களுக்குக் கல்வி, கண்ணெனவே போற்றப்பட்டு வந்துள்ளது.  ஆண் பெண் சாதி சமய வேறுபாடின்றி அனைவரும் கல்வி பெறவேண்டும் என்ற கொள்கையே நாட்டில் நிலவியது” என்கிறார் பேரா.சி.இலக்குவனார் (இலக்கியம் கூறும் தமிழர் கல்வி -சங்கக் காலம்)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

(திருவள்ளுவர், திருக்குறள் 392)

என வாழும் உயிர்க்குக் கல்வி என்பதன் மூலம் அனைவருக்கும் கல்வி என்பதே தமிழ் நெறி.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

(திருவள்ளுவர், திருக்குறள் 396)

என மாந்தர் அனைவருக்குமே பாகுபாடின்றிக் கல்வி கற்க உரிமையுண்டு என்பதுதான் தமிழ் நெறி.

தமிழ்நெறியோர் பிராமணர்க்கு மட்டுமே கல்வி எனக் கூறும் சனாதனத்தை எதிர்க்காமல் வேறு என்ன செய்ய இயலும்?

  • (தொடரும்)