(நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே!  பொய் சொல்லாதே! –தொடர்ச்சி)

அணு என்பது மீச்சிறு அளவு. அத்தகைய அணு அளவும் சினம் கொள்ளக் கூடாது என்கிறார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அவர்,

அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்

என்கிறார்.

நம்மிடம் சினம் இல்லாமல் போனால் யாவும் கைகூடும். இதனை,  இடைக்காட்டுச் சித்தர்.

சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே! யாவும்

சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே” என முழங்கித் தெரிவிக்கிறார்.

சினம் என்பது அதனால் பாதிப்புறுவோருக்கும் தீங்கு விளைவிக்கும். அதனை வெளிப்படுத்துவோருக்கும் தீங்கினை விளைவிக்கும். எனவேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்”சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி” என்கிறார்.

நாலடியாரும் சினமின்மை குறித்துப் பத்துப்பாடல்களில் கூறியுள்ளது. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.

மதித்திறப் பாரும் இறக்க மதியா

மிதித்திறப் பாரும் இறக்க – மிதித்தேறி

ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்

காயும் கதமின்மை நன்று

( நாலடியார், பாடல் 61)

பதவுரை : மதித்து = பொருட்படுத்தி, மதிப்பளித்து; இறப்பாரும்=நடந்து கொள்வோரும்;  இறக்க=அவ்வாறு நடந்து கொள்ளட்டும்; மதியா= மதிக்காமல்; மிதித்து=கால் படும்படி;இழிவுபடுத்தி; இறப்பாரும்= நடந்து கொள்வோரும்; இறக்க – அங்ஙனம் தாழ்வு படுத்தி நடக்கட்டும்; மிதித்து ஏறி ஈயும்=ஈயும் மிதித்து ஏறி; தலைமேல் இருத்தலால் – தலைமேல் இருத்தலினால்; அஃது அறிவார் -அந் நிலையை அறிந்து சிந்திக்குஞ் சான்றோர்;காயும் = எரிந்து விழும்; கதம்=சினம்; இன்மை=கொள்ளாது இருத்தல்; நன்று=நல்லது.

இறப்பாரும் என்பது இங்கே ஒழுகுவாரை – நடந்து கொள்வாரைக் குறிக்கிறது. இறக்க என்பது தாழ்வுபடுத்தி / இழிவுபடுத்தி ஒழுகுதலை/நடந்து கொள்ளுதலைக்  குறிக்கிறது.

இறக்க என்பது தாழ்ச்சியையும் குறிக்கும். எனவேதான் பறவையின் தாழ்வான உறுப்பு இறக்கை எனப்பட்டது.