இரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க

வெட்கப்பட வேண்டாவா?

 

2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் செயற்பட்டுவந்தது. 2008 மே 19 முதல் சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தனித்துச் செயல்பட்டு வருகிறது. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட பொழுது அதன் இயக்குநரே இதன் இயக்குநராக இருந்தார். சென்னைக்கு இவ்வலுவலகம் மாற்றப்பட்ட பொழுது முனைவர் ப.மருதநாயகம் இதன் பொறுப்பு அலுவலராக அமர்த்தப்பட்டுச் செயல்பட்டு வந்தார்.

தமிழின் செம்மொழி அறிந்தேற்பிற்குப் பெரிதும் துணையாக இருந்த முனைவர் க . இராமசாமி, இ.மொ.ந.நிறுவனப்பணியில் ஓய்வு பெற்றதும், 29.09.2008 அன்று செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவராக ஒப்பந்தப் பணியில் சேர்ந்தார்.

பொறுப்பு அலுவலர்கள் இருந்த பொழுது தனியாக இயக்குநர் பதவி இன்மை பெரிதாகக் குறையாகத் தெரியவில்லை. எனினும் தனித்து இயங்குவதால் இங்கேயே செயல்படும் தனி இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட நாளிலிருந்து மத்திய அரசு அதிகாரிகளின் கூடுதல் பொறுப்பிலேயே இப்பதவி நிரப்பப்பட்டது- அவர்களில் ஒருவர்கூடத் தமிழ்த் துறையினர் அல்லர். வெளியூரில் இருந்த அதிகாரிகளின் கூடுதல் பொறுப்பில்கூட இயக்குநர் பதவி இருந்தது. இதனால் தலைமை இல்லா அமைப்பாக இந்நிறுவனம் தள்ளாடி வந்தது.

செம்மொழி அறிந்தேற்பிக்குக் காரணமாக இருந்த தி.மு.க. தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்த பொழுதும் அவ்வாறு அறிந்தேற்பு ஆணையை வெளியிட்ட பேராயக்(காங்கிரசு)கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுதும் இயக்குநர் பதவியில் முழுப்பொறுப்பில் யாரும் அமர்த்தப்படவில்லை. இதற்கு முன்னரும் இயக்குநர் பதவியை நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இங்குள்ளவர்களின் மொட்டை மடல்களால் நிரப்பப்படாமல் போயின. பா.ச.க.வும் தன் முந்தைய ஆட்சியிலும் இப்போதைய ஆட்சியில் நேற்றுவரையும் இப்பதவியை நிரப்பாமல்தான் இருந்துள்ளது. எனினும் இப்பொழுது இயக்குநர் பதவியில் தமிழாய்ந்த தமிழ்மகனை அமர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இயக்குநராக அமர்த்தப்படும் முனைவர் இரா.சந்திரசேகரன் இரு முனைவர் பட்டங்களையும் ஐந்து முதுநிலைப்பட்டங்களையும் பெற்றவர். மேலும், 18 ஆய்வுநூல்களையும் 13பாடநூல்களையும் எழுதி 92 ஆய்வுக்கட்டுரைகளையும் அளித்துள்ளார். அத்துடன்   குடியரசுத் தலைவர் வழங்கும்  இளம் அறிஞர் விருதை 2009 – 2010-ம் ஆண்டில் பெற்றவர். இவை இவரின் தளராக் கல்வி ஆர்வத்தையும் தமிழ் ஆராய்ச்சி ஈடுபாட்டையும் புலப்படுத்துகின்றன. எனவே, மகிழ்ச்சியான அறிவிப்புதான்.

துறை அமைச்சரான மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முனைவர் இரமேசு பொக்கிரியால் என்னும் நிசாங்கன் (நிசாங்கன் அவர் புனை பெயர் / Dr Ramesh Pokhriyal Nishank)  பணியமர்த்தத் தகவலை  உச்ச நடிகர் இரசினிக்குத் தெரிவித்துள்ளார். அதற்கு மறுமொழியாக இரசினி அவருக்கு நன்றி மடல் அனுப்பியுள்ளார். அதில், “தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கான உங்கள் முயற்சிகள், ஒப்படைப்பிற்கு நன்றி” எனப் பாராட்டியுள்ளார். இந்தப் பணியமர்த்தத்தில் இரசினியின் பங்களிப்பு இருந்து அவர் நன்றி தெரிவித்திருந்தால் அது தனிச்செய்தி. எப்படியும் இப்பொழுதாவது பணி நிரப்பப்பட்டதற்கு நாமும் இரசினிக்கு நன்றி  சொல்லலாம். ஆனால், காலங்கடந்து பதவியிடத்தை நிரப்புவதில், தமிழ் மேம்பாட்டு முயற்சி என்ன அடங்கியிருக்கிறது? இதில் என்ன தமிழ் மேம்பாட்டிற்கான ஒப்படைப்பு உணர்வு உள்ளது.

இதற்கு அமைச்சர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? “இது வாலாயமான துறையின் பணிதான். இத்தனை  ஆண்டுகளாக இந்தப்பதவி நிரப்பப்படாமல் இருந்த வருத்தம் நீங்கியதில் மகிழ்ச்சிதான். இயக்குநரின் தமிழ் மேம்பாட்டுப்பணிகளுக்கு மத்திய அரசு முழுஒத்துழைப்பு நல்கும்” எனத் தெரிவித்திருக்க வேண்டும்.

மாறாக அவர், “தமிழ்மொழியை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் மத்தியஅரசு பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன்’ என்று குறித்துள்ளார். காலங்கடந்து பணி யிடத்தை  நிரப்புவதில் என்ன அக்கறை?

மத்திய ஆட்சியாளர்கள் தமிழ் இலக்கிய மேற்கோள்களை உலகு அறிய தெரிவிக்கின்றார்கள். மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதன் மூலம் தமிழ் முதலான தேசிய மொழிகளை அழிக்கும் கொடுஞ்செயல் நிற்கவில்லையே.

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரே! நீங்கள் இந்தி மொழிப்புலவராகவும் அறிஞராகவும் திகழ்கிறீர்கள். உண்மையான அறிஞர் பிற மொழிகளையும் மதிப்பர். ஆகவே, நீங்கள், தேர்தல் விளம்பர நோக்கில் இல்லாமல் உயர்தனிச்செம்மொழியாகவும் இன்றைய இந்தியத் துணைக்கண்டம் முழுமையும்  ஒரு காலம் வழங்கிய மொழியாகவும் உள்ள செம்மொழித் தமிழை – செந்தமிழை – செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் மூலமேனும் வளர்க்க உதவுங்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சான்றிதழ்ப் படிப்பு முதல் முனைவர் பட்ட ஆய்வு வரை வாய்ப்பு உள்ளவாறு தமிழ்த் துறைகளைத் தொடங்குங்கள்.

உலகப்பல்கலைக்கழகம் ஒவ்வொன்றிலும் தமிழ்ச்சான்றிதழ் வகுப்பும் தமிழ்ப்பட்டயம் வகுப்பும் இருக்கும் வகையில் தமிழ்த்துறையைத் தொடங்குங்கள். (ஒருவருக்கு மட்டும் வேலைவாய்ப்பு அளிக்கும் ஆய்வு நிலையிலான இருக்கைகள் வேண்டா.)

அனைத்து நாட்டுத் தலைநகரங்களிலும் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் தொடக்கநிலை முதல் ஆய்வு நிலை கற்பிக்க நடவடிக்கை எடுங்கள்.

செந்தமிழ்க்கல்வி நிலையங்களுக்கும் செந்தமிழ் இதழ்களுக்கும் முழுப் பொருளுதவி அளியுங்கள்.

செந்தமிழில் உருவாக்கும்  நாடகம், திரைப்படம், ஆவணப்படங்களுக்கும் முழுப் பொருளுதவி நல்குங்கள்.

நிலுவையில் உள்ள செம்மொழி விருதுகளை மட்டுமல்லாமல் வழங்கப்படா ஆண்டுகளுக்குரிய செம்மொழி விருதுகளையும் வழங்குங்கள்.

செம்மொழி அறிஞர்களுக்கான வாழ்நாள் முழுமையும் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் இதுவரை தமிழ்மொழிக்கு வழங்கப்படவில்லை. செம்மொழி அறிந்தேற்வு வழங்கிய ஆண்டிலிருந்து இவற்றை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை உடனே வழங்கச்செய்யுங்கள்.

தமிழக அரசியல் விளையாட்டுகளில் தலைவர் பதவியும் சிக்கித் தவிப்பதால், இந்நிறுவனத்தின் தலைவராக உள்ள முதல்வரை இதன் நெறியாளராக மாற்றித் தலைவராகத் தமிழறிஞர்கள் அமர்த்தப்படுவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

முதல் இயக்குநர் பல கனவுகளுடன் பணியில் சேருவார். அவர் கனவுகள் நனவாக எல்லாவகை ஒத்துழைப்பையும் தாருங்கள்.

எல்லா அமைச்சுத் துறைகளிலும் தமிழ் அறிந்த ஒருவரையேனும் பணியமர்த்துங்கள்.

எல்லாத் தூதரகங்களிலும் தமிழறிந்த ஒரு தமிழரையேனும் பணி யமர்த்துங்கள்.

தமிழர் பெரும்பான்மை வாழும் நாடுகளில் தமிழர்களைத் தூதர்களாகவும் தூதரக அதிகாரிகளாகவும் அமர்த்த ஆவன செய்யுங்கள்.

மக்கள் ஆதரவு உள்ள நடிகர் உங்களைப் பாராட்டுவதால் மட்டும் தேர்தலில் வாகைசூட இயலாது. தமிழை எல்லா நிலைகளிலும் பரப்பித் தமிழ் மக்கள் உள்ளங்களை ஆளுங்கள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல