௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? – திருத்துறைக்கிழார்

(உ. தமிழர் திருமணமுறை – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஆ.தமிழர்
௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்?
கடல் கொண்ட குமரிக் கண்டம் தொட்டு வடபால் எல்லையாம் பனிமலை வரை தமிழர் பரவி வாழ்ந்ததாகப் பண்டைத் தமிழர் வரலாறு கூறுகிறது. உலகுக்கு நாகரிகம் உணர்த்திய பெருமை தமிழர்க்கே உரியது! தமிழ்மொழி ஒன்றே உலகப் பொதுமொழியாக இருக்கக்கூடிய தகுதி பெற்றது என்கிறோம்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றே உலக ஒழுக்க நூலாக இருக்கும் தகுதி வாய்ந்தது என்கிறோம். ஆனால், தமிழர்தம் ஆண்டுக்கணக்கு, தமிழ்க்கணக்குகள் தமிழ்ப்பகைவர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. அக்கம் பக்கம் உள்ள நாட்டினர், நாவலந்தேயத்தின் (இன்று இந்தியா) வளங்கருதிப் போந்து, பொருள்களைக் கொள்ளை கொண்டு சென்றனர். சிலர் வந்து நிலையாகத் தங்கிவிட்டனர்.
ஒரு மொழி வைத்து உலகாண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இன்றில்லை. முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவி தமிழ்மொழியை ஆய்ந்து, பன்னூறு புலவர்கள் யாத்தளித்த பல்லாயிரம் ஓலைச்சுவடிகள், நீரிலிட்டும், நெருப்பிலிட்டும் அழிக்கப்பட்டு விட்டன. எஞ்சியவை சிலவே.
குமரி முதல் பனிமலை வரை செங்கோலாச்சிய தமிழினம், குமரி முனையிலிருந்து தென் சென்னைக்குள் அடங்கிக் கிடக்கிறது. உலக நாடுகள் பலவற்றிற்கும் ஓடிப்பிழைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இன்று நம் தமிழர் சென்றவிடங்களில் எல்;லாம் அந்நாட்டு மக்களால் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
பொதுவாகத் தமிழினம் சிறுகச் சிறுக அழிக்கப்படுகின்றதென்றே சொல்லலாம். இன்றைய தமிழ்நாட்டில் அயலார் குடியேற்றம் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. தமிழகத் தலைநகராம் சென்னையில் தமிழர் வாழ வழிவகையில்லாது போகிறது. அயலார், அளவற்ற பொருள் கொணர்ந்து மனைகள் வாங்கிப் பெரும் பெரும் மாளிகைகள் அமைக்கின்றனர். பெருந் தொழில்கள் தொடங்குகின்றனர். தம் மொழிபரப்பப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நிறுவுகின்றனர். அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழர்களும், தமிழகத்தை ஆட்சிபுரிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்களும், அதிகாரமற்ற ஆட்சியாகலின், எந்த நேரத்திலும் தம் ஆட்சி கலைக்கப்படலாம் என்னும் அச்சத்தால் நடுவண் அரசிற்கு ஒத்து ஊதிக்கொண்டு தம் செல்வம் பெருக்குவதில் குறியாக இருக்கின்றனர். தமிழினம் நாளும் நசுக்கப்படுவதைக் கேட்கக் கூட உரிமையில்லை; வாயில்லை; வாய்ப்பூட்டுச் சட்டம் உள்ளது.
தமிழ்நாட்டுச் செல்வம் பாதி கோயில்களில் முடக்கப்பட்டுள்ளது. ஊரையடைத்துப் பல கோயில்கள் கட்டி தமிழ்மக்கள் வாழ இடமில்லாமல் செய்துவிட்டனர். இன்றும் கோயில்கள் கட்டவும், புதுப்பிக்கவும், பொன்னால் ஊர்திகள் செய்யவும் கோடி கோடியாகப் பணம் செலவிடப்படுகின்றது.
உணவின்றி, உடையின்றி, குந்தக் குடிசையின்றித் திண்டாடும் ஏழைத் தமிழ்மக்கள் குறைகளைப் போக்கி வறுமையின்றி வாழ வழிவகை செய்ய முனைவாரிலர். தம் பதவி, செல்வம் நிலைக்கப் பாடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் முதல் வகுப்பு முதல் இந்திமொழி கற்பிக்கப்படுகின்றது. வானொலி, வானொளிகளும் நாள்தோறும் இந்திப்பாடம் கற்பிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள நடுவணரசு அலுவலகங்களில் இந்திக்கே முதலிடம்! தமிழ் மொழிக்கு இடமே இல்லை! கேட்பார் யார்?
தமிழக அரசுப் பணிமனைகளிலும் தமிழ்மொழிக்கு முழு இடமில்லை. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட ஆங்கிலத்தில்தான் ஒப்பமிடுகின்றனர். தமிழ் வாழ, தமிழர் வாழ, தமிழ்ப்பண்பாடு வாழ, தமிழ் தொல்பழம் வரலாறு மலர, தமிழினம் உலகில் மதிக்கப் பெற, தமிழர்கள் அனைவர்க்கும் தன்மான உணர்வு, தமிழுணர்வு, தமிழின் உணர்வு, தன்னம்பிக்கை, விடுதலை உணர்வு, பண்டைத் தமிழர்க்கிருந்த வீரவுணர்வு வேண்டும்.
இவை இல்லையேல், தமிழினம் எங்கும் என்றும் அயலார்க்கடிமையாய், வறுமையால் வாடவேண்டியதே!
(நன்றி : தமிழ் மக்கள் இலக்கியம்)
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
Leave a Reply