கவிதைபாடல்

தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன்

(தமிழ் வளர்கிறது! 4-6 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி)

 

தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன்

 

பொய்யான கருத்தெல்லாம் தமிழர் நாட்டில்

புகுத்துகின்ற கதைகளையே வெறுத்தொ துக்கச்

செய்யாரோ எனநினைத்தால் கலைந யத்தைச்

செந்தமிழில் இறக்கிவைத்த கவிதை யென்று

மெய்யாக விழாக்கள்பல நடத்தி வைத்து

மேன்மேலும் அக்கதையே பெருக்கு வார்கள்

செய்யாதே என்பதனைச் செய்வ தற்கே

திரண்டோடி வருவாரிம் முரண்டர் கண்டீர் !    (7)

 

தென்றமிழில், வடமொழியின் சொற்கள் வந்து

திரிந்ததென ஆராய்ச்சி நடத்திக் காட்டி

அன்றிருந்த தமிழ்ச்சொல்லும் வடசொல் லென்றே

அழிவழக்குப் பேசிடுமோர் கூட்டத் தாரும்

இன்றமிழை வளர்க்கின்றோம் யாங்க ளென்றே

ஏமாந்த தமிழ்நாட்டார் முன்னே வந்து

நின்றிருப்பார் பூமாலை கைச்செண் டோடே

நிகழ்த்திடுவார் வரவேற்புத் தமிழர் தாமே  (8)

 

பெண் கல்வி வேண்டுமென்றே ஒருவர் சொன்னால்

பெரியவளாய் ஆகும்வரை படிப்ப தென்று

தண்டமிழ்க்குப் பண்டிதர்கள் உரைவ குத்த

தந்திரம்போல் மற்றொருவர் விளக்கம் சொல்வார்.

கண்ணைநிகர் கல்வியினைக் கற்ப தற்கே

கல்லூரி வருமந்தக் கன்னி தன்னை

மண்டுதமிழ் மாணவரோ சுற்றி வந்து

மனமயக்கம் கொண்டிடுவார் மான மின்றி !  (9)

 

(தொடரும்)

பாவலர் நாரா. நாச்சியப்பன்:

தமிழ் வளர்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *