மாணிக்கவாசகம்பள்ளி-காணொளி02 - முகப்பு0;chokkalingam_video_padam மாணிக்கவாசகம்பள்ளி-காணொளி- முகப்பு01 :chokkalingam_video_padam02

கற்பித்தலில் புதுமை! – தமிழ்நாடு அரசின் ஆவணப் படம் வெளியீடு

 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஏறக்குறைய 1320 பள்ளிகளில் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்று மட்டுமே முதற்கட்டமாகத் தேர்வாகி, சிவகங்கை மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசின் சார்பாக உலக அளவில் முதன் முதலாக இதற்கெனக் காணொலி ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  தேவகோட்டை, பெருந்தலைவர்(சேர்மன்) மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கற்பித்தல் நிகழ்வுகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் விரிவாக எடுத்து சொல்லும் ‘பட்டறிவு (அனுபவம்) புதுமை’ என்கிற தலைப்பிலான காணொலிப் பதிவினை உயூடியூபு (YOUTUBE) வாயிலாக https://www.youtube.com/watch?v=DHSKxC40YaE&list=PLrEkyHXS85XtjFLXUNdWGu3lHnNvFzPPk&index=4 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனம் (மா.க.ஆ.ப.நி – SCERT) வெளியிட்டுள்ளது. பள்ளியில் நடைபெற்றுள்ள பல்வேறு நிகழ்வுகளை மிக அழகாக எடுத்துச் சொன்னதுடன் உலக அளவில் தமிழ்நாடு அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிகழ்வுகளைக் கொண்டு சென்றுள்ள மா.க.ஆ.ப.நி-யில் உள்ள அனைவருக்கும் நன்றிகள் பல!

  தமிழக அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் புதுமைகள் செய்யும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து ஆவணப்படமாக எடுத்து வெளி உலகுக்கு ஆசிரியர்களின் பன்முகத் திறமைகளைக் காட்டும் நோக்கில் இந்தப் புதிய முயற்சியை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது!

குறிப்பிட்ட காணொலியைக் கீழ்வரும் இணைப்பு வாயிலாகக் காணலாம்:

https://www.youtube.com/watch?v=DHSKxC40YaE&list=PLrEkyHXS85XtjFLXUNdWGu3lHnNvFzPPk&index=4

இதனைப் பார்த்தபோது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

  தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகளின்படி கற்றல், கற்பித்தல், புதுமை புனைதல், கல்வி சார் கணினி வளங்கள் சேகரிக்க இணையத்தளப் பக்கத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை உள்ள ஏறத்தாழ  ஐந்நூறாயிரம் ஆசிரியர்களில் முதற்கட்டமாக 75 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 75 ஆசிரியர்களில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் அவர்களும் ஒருவர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையான அரசு மற்றும் அரசு உதவி பெறும்  ஏறக்குறைய 1320 பள்ளிகளில் இப்பள்ளி ஒன்று மட்டுமே முதற்கட்டமாகத் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 புதுமை புனைதல் என்னும் பொதுத் தலைப்பின் கீழ்க் காணொலி ஆவணம்  உருவாக்கும் பொருட்டு இயக்குநரின் ஆணைப்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனக் குழுவைச் சேர்ந்த படப்பிடிப்புக் குழுவினர் இப்பள்ளிக்கு வருகை புரிந்தனர். பட இயக்குநர் செரோம், ஒளிப்பதிவாளர்கள் அந்தோணி, சான் ஆகியோர் பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் மாணவ-மாணவியரிடமும் காட்சிகளை விரிவாக எடுத்துக் கூறினர். பிறகு ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

பட இயக்குநர் பேச்சு:             

  இது குறித்துப் பேசிய இந்த ஆவணப் பட இயக்குநர் செரோம், “தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவன இயக்குநரின் ஆணைப்படி, சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியை ‘பட்டறிவு (அனுபவம்) புதுமை’ என்கிற தலைப்பில் ஆவணப்படமாக எடுக்க இங்கு வந்துள்ளோம். தமிழ்நாடு அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தலில் புதுமைகள் செய்யும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து ஆவணப்படமாக எடுத்து வெளி உலகுக்கு ஆசிரியர்களின் பன்முகத் திறமைகளைக் காட்டும் நோக்கில் அரசு இதனைச் செய்து வருகிறது. இஃது ஒரு புதிய முயற்சி” என்று கூறினார்.

தலைமை ஆசிரியர் பேச்சு:

இது குறித்து, தேர்வு பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் கூறும்போது, தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகளின்படி கற்றல், கற்பித்தல், புதுமை புனைதல் மற்றும் கல்வி சார் கணினி வளங்கள் சேகரிக்க இணையத்தளப் பக்கத்தின் மூலம் விண்ணப்பித்திருந்தேன். தமிழ்நாடு முழுவதிலும் தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை உள்ள ஏறத்தாழ ஐந்நூறாயிரம் ஆசிரியர்களில் முதற்கட்டமாகத் தேர்வாகி உள்ள 75 ஆசிரியர்களில் நானும் ஒருவன் என்கிறபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். மேலும், சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக இப்பள்ளி மட்டுமே தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டறிவு புதுமை:

இப்பொழுது இங்கு நடைபெற்றுள்ள காணொலி ஆவணப் படப்பிடிப்பு ‘பட்டறிவு (அனுபவம்) புதுமை’ என்கிற தலைப்பில் படமாக்கப்படுகிறது. இளம் மாணவர்களுக்குக் கல்வியின் துய்ப்பு புதுமையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் கடந்த ஓராண்டுக்கும் முன்பு இப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பதவி ஏற்றுக் கொண்டேன்.

பொதுவாக, மாணவர்களை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைக்கக் கூடாது. மாணவர்களுடைய பரந்த பார்வையானது நூல்களுக்குள் மட்டும் முடிந்து விடக்கூடாது. அதையும் தாண்டி, கற்றலானது ஒவ்வொரு வகையிலும் துய்க்கப்படுவதாக இருக்க வேண்டும்; புதியதாக இருக்க வேண்டும்; புதுமையானதாக இருக்க வேண்டும்.