செய்திகள்

மருந்துகளைத் தெளித்து மீன்களைப் பிடிக்கும் மருமக் கும்பல்-நோய்கள் பரவும் பேரிடர்

52deadfishes

  தேனிப் பகுதியில் மருந்துகள் தெளித்து மயக்கமடையச் செய்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உடலுக்குக் கேடு விளையும் கண்டம் உள்ளது.

 தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், முதலக்கம்பட்டி பகுதிகளில் ஆறுகளில் உள்ள பாறைகள், பாறைகளின் இடுக்குகள், ஆறு, கண்மாய், ஓடைகளில் உள்ள சந்து பொந்துகளில் குரவை மீன்களும் வேறு சில வகை மீன்களும் வாழுகின்றன. இவ்வகை மீன்களை வலைவீசியோ தூண்டில் போட்டோ பிடிக்க முடியாது. இவ்வகை மீன்கள் விலையும் அதிகம்.

 இதனால் இவ்வகை மீன்கள் வாழும் இடத்தைக் கண்டறிந்து மீன்கள் வாழும் இடத்தில் பயிர்களுக்குத் தெளிக்கப்படும் ‘பால்டாயில்’, தென்னை மரத்திற்கு வைக்கப்படும் மாத்திரைகள், ‘நுவாக்ரான்’ போன்ற மருந்துகளை அவ்வகைத்தண்ணீரில் ஊற்றிவிடுகிறார்கள். அப்பொழுது மருந்தின் நெடி தாங்காமல் மீன்கள் மயக்கநிலை அடைந்து மேலே வரும்பொழுது மீன்களைப் பிடிக்கின்றனர். சில மீன்கள் நெடி தாங்காமல் இறந்து மிதக்கும்பொழுது அவ்வகை மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

அசைவ உணவுகளில் மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படுவது மீன் மட்டும் தான். ஆடு, கோழி, மாட்டிறைச்சிகள் உடலுக்கு உகந்தது அல்ல என்றும் அவ்வகை அசைவ உணவுகளில் உடலுக்குக் கேடு என்பதால் மீன்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

  கடந்த மூன்று ஆண்டுகாலமாக இப்பகுதியில் மழை இல்லாததால் மீன்பிரியர்கள் கடல் மீன்களை வாங்கிச் சமைத்தனர். தற்பொழுது ஆறு, ஏரி, கண்மாய்களில் நீர் நிறைந்து இருப்பதால் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன என நினைத்து இவ்வகையான மீன்களை வாங்குகின்றனர்.

  உணவு – கலப்படத்தடைச்சட்டத்தின் கீழ் ஆடு, மாடு, கோழி, பால் போன்றவற்றை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகள் உள்ளனர். ஆனால் மீன்களை ஆய்வு செய்வதற்கு எந்த அதிகாரிகளும் முன்வருவதில்லை.

  இவ்வகையான மீன்களை உண்பதால் வயிற்றுப்போக்கு முதலான பல்வேறு உடல்தொந்தரவுகள் வருகின்றன. எனவே மீன்களை வாங்கும்பொழுது மீன்பிரியர்கள் எச்சரிக்கையுடன் வாங்கி உண்ணவேண்டும். இல்லையெனில் காசு கொடுத்து நோயை விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும் என அச்சப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

52vaigaianisu_name

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *