சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 2: மறைமலை இலக்குவனார்
போராரவாரம்:
பேராரவாரம் மிக்க சூழல்களையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய சங்கச் சான்றோர்கள் போராரவங்களையும் பதிவு செய்துள்ளனர். புறப்பாடல்களைவிட மிகுதியாக அகப்பாடல்களில் இவை நுவலப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊரார் அலர் தூற்றலின் கொடுமையால் துன்புறும் தலைவியும் தோழியும், அலரினால் எழுந்த ஆரவாரம் போராரவாரத்தைக் காட்டிலும் பெரிதாக விளங்கியதாக எடுத்துக்கூறும் வகையில் இப் பாடல்கள் அமைந்துள்ளன.
“அன்னி என்பவன் குறுக்கைப் போர்க்களத்தில் திதியன் என்பவனது தொன்மையான புன்னை மரத்தின் பெரிய அடியை வெட்டித் துண்டித்தபொழுது கூத்தர் அவனைப் போற்றிச் செய்த இன்னிசை முழக்கத்தை விடப் பெரிய ஆரவாரம் மிக்கதாக அலர் விளங்கியது.”11என்கிறார் வெள்ளிவீதியார்.
“அஃதை தந்தையாகிய அடுபோர்ச்சோழர்,பருவூர்ப் போர்க்களத்தில் சேரர்,பாண்டியராகிய இருபெரும் வேந்தரும் அழியும்படிப் போரிட்ட பின்னர் பகையரசர்களின் களிறுகளைக் கவரும்பொழுது ஏற்பட்ட பேராரவாரத்தை விடப் பெரிய ஆரவாரமாக அலர் எழுந்தது”12 என்கிறார் மருதம் பாடிய இளங்கடுங்கோ.
“பாண்டியன் நெடுஞ்செழியன்,தலையானங்கானம் என்னுமிடத்தில் கடுமையாகப் போர் புரிந்துசேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், இயல்தேர்ப்பொருநன் ஆகிய ஏழு பேரையும் ஒருபகற்பொழுதில் வென்று அவர்தம் வெண்கொற்றக்குடைகளைக் கைப்பற்றி உலகோரால் புகழப்பட்டான்.அப் போரில் பகைப்புலத்தரசர் தம் படைகளைக் கொன்று களவேள்வி செய்த ஞான்று அவனுடைய வீரர்கள் ஆர்த்த ஆர்ப்பினும் பெரிதாக அலர் ஆரவாரம் இருந்தது”13 என்கிறார் நக்கீரர்.
மறப் போரில் வல்ல செழியன் கூடல் என்னும் போர்க்களத்தில் சேரரும் சோழரும் மாறுபட்டுப் போர் புரியவந்தபொழுது அவர்தம் கடல் போன்ற பெரிய படையை அவர் கலங்குமாறு தாக்கிச் சேரரும் சோழரும் தமது முரசங்களை விடுத்துத் தோற்றோடுமாறு செய்தபொழுது வெற்றிச் சிறப்புமிக்க அப் போர்க்களத்தில் எழுந்த ஆரவரத்தைக் காட்டிலும் மிகப் பெரும் ஆரவாரத்துடன் அலர் எழுந்துள்ளது’14என்கிறார் பரணர்.
பாண்டியன் நெடுஞ்செழியன் பகைத்துப் போருக்கு வந்த ஏழு பகைமன்னர்களையும் வீழ்த்தி வெற்றிகொண்டவேளையில் ஆலங்கானப் போர்க்களத்தில் எழுந்த பேராரவாரத்தைவிடப் பெரிய ஆரவாரத்துடன் அலர் எழுந்தது’15என்கிறார் கல்லாடனார்.
“வாகை என்னும் இடத்திலமைந்த போர்க்களத்தில் கொங்கர் மீது பசும்புண்பாண்டியன் தொடுத்த போரில் பாண்டியன் சார்பாகப் போரை நடத்திச் சென்ற அதிகன் உயிரிழந்து களிறொடு வீழ்ந்தகாலைக் கொங்கரிடையே எழுந்த ஆரவாரத்தை விட அலர் மிகப் பேராரவாரம் கொண்டதாக விளங்கியது”16 என்கிறார், பரணர்.
இங்ஙனம் அலரால் எழுந்த ஆரவாரத்துடன் போர் ஆரவாரத்தை ஒப்பபிடும் பாடல்கள் அனைத்தையும் விரித்துரைத்தலோ இப் போர்களைக் குறித்த ஆராய்ச்சியோ இக் கட்டுரையின் நோக்கத்திற்குப் பொருந்தாதன.
மக்கள் திரளாகக் கூடி எழுப்பும் ஆரவாரம் என்னும் வகையில்,அக் காலத்தில் போர்க்களத்தில் எழும் ஆரவாரத்தை மட்டுமே கூறமுடியும் என்னும் நிலையிருந்தமைக்கு இப் பாடல்கள் சான்றளிக்கின்றன.
தன்மைநவிற்சியையே அணிகலனாகக் கொண்டிருந்த சங்க இலக்கியத்தில் புலவர்களின் கற்பனைத் திறன் வெளிப்படும் உயர்வுநவிற்சியாகவே இத்தகைய ஒப்பீடுகள்(அலரினால் ஏற்பட்ட ஆரவாரம்=போர்க்களத்தில் நிகழும் ஆரவாரம்)அமைந்துள்ளன எனலாம்.
ஆரவாரம் மிக்க அலர், தலைவிக்கும் தோழிக்கும் துன்பம் விளைத்தலைப் போன்றே, போரினால் ஏற்படும் ஆரவாரம் மன்பதைக்கு-மனிதநேயம் போற்றுவோர்க்குத்- துன்பம் விளைவிப்பது எனப் புலவர் கருதியிருக்கக் கூடும்.அத்தகைய தம் குறிப்பை இவ்வொப்பீடுகள் வழி சமுதாயத்திற்கு உணர்த்த விரும்பியிருக்கக் கூடும் எனக் கருத இடமுள்ளது.
முரண் ஒலி அல்லது மாறுபட்ட ஒலிகள்
முரண்பட்ட ஒலிகளைத் தொகுத்து வழங்கி, அம் முரண் மூலம் கலைத்திறனை வெளிப்படுத்தும் உத்தியைச் செவ்வேள் குறித்து நல்லழிசியார் இயற்றிய ஒரு பரிபாடல் செய்யுள் மூலம் அறிகிறோம். திருப்பரங்குன்றத்தில் ஒன்றினுக்கொன்று மாறுபட்ட, நயமிகு ஒலிகள் பல நிறைந்திருக்கும் என்று நல்லழிசியார் தமது பாடலில் குறிப்பிடுகிறார். “பாணருடைய இனிய யாழிசை ஒரு புறமும்,வண்டுகள் இமிரும் இசை மற்றொரு புறமும்,வேய்ங்குழலின் உள்ளங்கரைக்கும் இசை ஒரு புறமும், தும்பிகளின் பண்ணார் இசை மற்றொரு புறமும், முழவின் முழக்கம் ஒரு புறமும், அருவியின் ஆர்ப்பரிப்பு மற்றொரு புறமும், பாடல் வல்ல விறலியர் ஒருபுறம் ஆடிடவும், மற்றொரு புறம் காற்றின் அசைவினால் பூங்கொடி அசைந்தாடுதல் மற்றொரு புறமும், பாண்மகள் பாலைப்பண்ணை அழகுறப் பாடுவது ஒருபுறமும், ஆடுகின்ற மயிலின் அரிந்த குரல் மற்றொரு புறமும் என வேறுவேறான இசைமாறுபாடுகள் ஒருங்கு திருப்பரங்குன்றத்தில் ஒலித்துக்கொண்டிருந்தன”17 என அவர் பாடலில் கலைநயந்தோன்றக் குறிப்பிடுகிறார்.
யாழிசை-வண்டிசை, குழலிசை-தும்பியிசை, விறலிஆடல்-பூங்கொடி அசைந்தாடல், பாடினியின் பாலைப் பண்-மயிலின் அரிந்த குரல் என முரண்களை நிரல்படுத்தி, ‘மாறு அட்டான் குன்று’17அ எனப் புகழப்படும் திருப்பரங்குன்றத்தில் இத்தகைய மாறுபாடுகளைக் கலைக்கண்ணுடன் ஏற்றுக்கொள்ளும் மக்களின் கலையார்வத்தைப் புலப்படுத்துகிறார் எனக் கொள்ளலாம்.
அடிக்குறிப்புகள்
11. அகநானூறு-:45
12. அகநானூறு-96
13. அகநானூறு-36
14. அகநானூறு -116
15. அகநானூறு-209
16. குறுந்தொகை-393
17. பரிபாடல்-17
17அ. மேற்படி.அடி.21
(தொடரும்)
– முனைவர் மறைமலை இலக்குவனார்
செம்மொழி மாநாட்டுக் கட்டுரை
Leave a Reply