ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக! – – இலக்குவனார்திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 29
ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!
காவல்,
குழவி கொள் பவரின், ஓம்புமதி!
காத்தற்குரிய நாட்டைக், குழந்தையைத் தாய் காப்பதுபோல் காத்திடுவாயாக!
– நரிவெரூஉத்தலையார்
புறநானூறு 5, அடிகள் 6-7
திணை: பாடாண் திணை
துறை:செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட பொழுது, நரிவெரூஉத் தலையார் பாடியது.
முழுப்பாடல்:
எருமை அன்ன கருங்கல் இடை தோறு,
ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை!நீயோ, பெரும!
நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள் பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.
பதவுரை:
எருமை – எருமை மாடுகள், அன்ன – போன்ற, கருங்கல் – கரிய கற்கள், இடைதோறும் – இடங்கள் எல்லாம், ஆனின் – மாடுகளைப் போல், பரக்கும் – பரவியிருக்கும், யானைய – யானைகள் உடைய,
முன்பின் – வலிமையான, கானக – காடுகளை அகத்தே கொண்ட, நாடனை – நாட்டினை உடையவனாய், நீயோ – நீ தான், பெரும – பெருமகனே, நீயோர் ஆகலின் – நீ இவ்வாறு இருப்பதால், நின் – உனக்கு, ஒன்று – ஒன்று மொழிவல் – சொல்கிறேன்,
அருளும் – நெஞ்சில் அருள் உள்ளமும், அன்பும் – அன்பு உணர்வும், நீக்கி – விலக்கி, நீங்கா – நீங்காத, நிரயம் – நரகம், கொள்பவரொடு – இடமாகக் கொள்பவரோடு, ஒன்றாது – சேராமல்,
காவல் – காக்கும் நாட்டை, காவல் – காக்கப்படும் நாட்டிற்கு, குழவி – குழந்தை, கொள்பவரின் – வளர்ப்பவர்களைப் போல், ஓம்புமதி – பாதுகாப்பாயாக!
அளிதோ தானே – அளிக்கத் தக்கது அக்காவல் தானே – தான், அது பெறல் – அத்தகைய காக்கும் வாய்ப்பைப் பெறுவது, அருங்குரைத்தே – அரியது ஆகும்.
*முன்பின் என்றால், முந்தியும் பிந்தியும் எனப் பொருள் உள்ளதை யாவரும் அறிவர். ஆனால், வலிமை என்றும் பொருள் உண்டு. அப்பொருளிலேயே இங்கே பயன்படுத்தப்பெற்றுள்ளது.*
பொருளுரை:
எருமைகள் போன்ற தோற்றத்தையுடைய கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடம் எங்கும் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே!
நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக!
அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உன் நாட்டை, குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக.
அத்தகைய நாட்டுக் காவலே அளிக்கத்தக்கதாகும். அவ்வாறான சிறந்த காக்கும் வாய்ப்பைப் பெறுவது அரியதாகும்.
நாட்டை எவ்வாறு காக்க வேண்டும் எனப் புலவர் நரிவெரூஉத்தலையார் ஆள்வோர்க்குத் தக்க அறிவுரை வழங்கியுள்ளார்.
நாட்டை மட்டுமல்ல, கட்சி, நிறுவனம், அமைப்பு என எதுவாக இருந்தாலும் அதனைப் பேணும் பொறுப்பில் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரை இது.
ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!
– இலக்குவனார் திருவள்ளுவன்
தாய், பிப்பிரவரி 05.02.2026






Leave a Reply