****

இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய

கொடுத்தவை தாவென் சொல்லினும்

இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே.

        – சாத்தனார், குறுந்தொகை 349, அடிகள் 5-7

தலைவி கூற்று

திணை: நெய்தல்

கொடைத்தன்மை குறித்த பண்பாட்டை உணர்த்துவது இப்பாடல் வரிகள்.

பொருள்:

தாம் அடைந்த வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி, நம்மிடம் இரப்பவர்க்கு அவர் விரும்பிய பொருளையும் அவருக்குத் தேவையானவற்றையும் கொடுத்து, அதன்பின், அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித் தருமாறு சொல்லுதலைக் காட்டிலும், நமது இனிய உயிரை இழத்தல், துன்பமுடையதாகுமோ? ஆகாது. (எனவே, கொடுத்ததை மீண்டும் தருமாறு கேட்கக் கூடாது.)

பதவுரை:

இடுக்கண் அஞ்சி=தமக்கு நேர்ந்த துன்பத்தினால் வருந்தி; இரந்தோர் வேண்டிய=இரந்தவர் கேட்டவற்றை; கொடுத்தவை=கொடுத்து, அதன் பின் அவற்றை; தாவென்=எனக்குத் திரும்பவும் தா என்று சொல்லினும்=சொல்வதைவிட; இன்னா தோ=துன்பம் தருவதோ நம் இன்னுயிர் இழப்பே=நம இனிய உயிரை இழப்பது. ( இல்லை)

“கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை” என்பது பழமொழி. நாம் கடனானவோ, இரவலாகவோ, அன்பாகவோ ஒருவருக்குக் கொடுத்ததை மீண்டும் கேட்கும் பொழுது பகை உண்டாவதைக் குறிக்கிறது.

“கடன் அன்பை முறிக்கும்” என்றும் சொல்வர். இதையே, “வாங்கும்போது இனிப்பு; கொடுக்கும்போது கசப்பு” என்றும் சொல்வர்.

ஒரு பொருளை வாங்கும்போது வாங்குபவர் மகிழ்ச்சியாகக் கருதுகிறார். அவரிடம் அதைத் திருப்பிக் கேட்கும் பொழுது கசப்புணர்வு கொள்கிறார்.

முற்றிலும் உரிமையாக இல்லாமல் கடனாவோ, இரவலாகவோ கொடுத்தைத் தன் தேவை கருதி மீண்டும் தருமாறு கேட்டால், அவ்வாறு தருவதே தம் கடமை என அறிந்தும் கசப்புணர்வு கொள்வோர் மிகுதியாக உள்ளனர்.

இவையெல்லாம் இயல்பான வாழ்வில் ஏற்படும் நடைமுறைகள். ஆனால், இப்பாடல் பண்பாட்டின் சிறப்பைக் குறிக்கிறது.

வறுமையினால் ஒருவர் வந்து கேட்கும் பொழுது அல்லது துன்பம் வந்த பொழுது அதனைப் போக்க உதவ, வேண்டியதை அன்புள்ளத்துடன் கொடுத்து அவர் துன்பத்தைப் போக்குவது சிறப்பாகும்.

பிறருக்கு உதவுவதன் மூலம் தன் கொடைத்தன்மையை வெளிப்படுத்தி விட்டுப் பின்னர் அவருடன் ஏற்பட்ட முரண்பாட்டினாலோ தன் தேவை கருதியோ “கொடுத்ததை மீளக் கேட்பதை விட உயிரை இழப்பது துன்பமானது இல்லை அல்லவா” எனக் கேட்கிறார் புலவர்.

இறப்பது என்பது துன்பமானது. அத்துன்பமும் கொடுத்ததை மீளக் கேட்கும் துன்பத்தினும் மிகுதியானது இல்லை அல்லவா?

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை. (திருக்குறள், ௨௱௩௰ – 230)

என்று திருவள்ளுவரும் சாதலைவிடத் துன்பமானது வேறு இல்லை என்கிறார்.

எனினும் அத்துன்பமானது ஒருவர் கேட்கும் பொழுது கேட்டதைக் கொடுக்க முடியாமல் போகும்போது அதுவும் இனியதே என்கிறார்.

கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதும் ஈகை இயலாமையைக் குறிப்பதே!

எனவேதான் சங்கப் புலவர் சாத்தனார், “கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதைவிட இறப்பது மேல்” என்கிறார்.

நாமும் யாருக்கும் எதையும் கொடுத்தபின் திரும்பக் கேட்காமல் இருப்போம்!

தாய், 19.02.26