சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – இலக்குவனார்திருவள்ளுவன்

(பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : தொடர்ச்சி)
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22
ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே!
“…பெரியோர்
நாடி நட்பின் அல்லது,
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே…”
– கபிலர், நற்றிணை 32: 7 – 9
பதவுரை: நாடி = ஆராய்ந்து; நட்பின் = நட்பு கொள்வது ; நட்டு = நட்புகொண்டு; நாடார் = ஆராயார்; ஒட்டியோர் = நட்பு கொண்டோர்
ஒருவரின் பண்பு, செயல், ஒழுக்கம் முதலியவற்றை ஆராய்ந்து நட்புகொள்ள வேண்டுமேயன்றி ஆராயாமல் நட்பு கொண்டு பின்னர் ஆராயக் கூடாது என்பது பெரியோர் வாக்கு என்கிறாள் தோழி.
தலைவியிடம், நீ முதலில் தலைவனுடன் நட்பு கொண்டு பின்னர் மாறுபடுவது தவறு எனச் சொல்லும் தோழி பெரியோர் கூற்றைத் தெரிவிக்கிறாள்.
ஒருவருடன் நட்பு கொண்ட பின் அதிலிருந்து விடுபட முடியாது. எனவே ஒருவரின் பண்பு நலன்களை ஆராயாமல் நட்பு கொண்டால் அதுபோல் கேடு தருவது வேறில்லை என்கிறார் திருவள்ளுவரும்.
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
– திருக்குறள் , ௭௱௯௰௧ – 791
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும் என்று விளக்குகிறார் கலைஞர் மு.கருணாநிதி. ஆராயாமல் மேற்கொள்ளும் காதலும் அப்படித்தானே!
காதலித்தவன் கயவன் என்று தெரிந்த பின், கேடுகள் விளைவிக்கும் தவறான காதலைக் கைவிடவும் முடியாமல், காதலைத் தொடரவும் முடியாமல் காதலி தவிப்பது இயற்கைதானே!
கண்டதும் காதல், முதல் பார்வையிலேயே காதல் என்றெல்லாம் சொல்வார்கள். காதலும் நட்புபோல்தான்.
காதலிக்க விரும்பும் முன், அவன் ஏற்றவன்தானா? நற்குணங்கள் நிறைந்தவான்தானா? ஏமாற்றிக் கைவிட்டுச் சென்று விடுவானா? கடைசிவரை உடனிருப்பவனா?
வாழ்விலும் தாழ்விலும் உற்ற துணைவனாக இருப்பானா என்றெல்லாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகத் தோழி, பெரியோர் கூறுவதுபோல் ஆராயாமல் நட்பு கொள்ளக் கூடாது, காதலிக்கக் கூடாது என்கிறாள்.
காதலித்தபின் கைவிட்டால் அதைப்போல் கேடு தருவது வேறில்லை என்கிறாள்.
நட்பின் நிலைப்பாட்டைக் கூறுவதன் மூலம் காதலின் நிலைப்பாட்டைக் கூறுகிறாள் தோழி.
மேலே குறிப்பிட்டுள்ள கடைசி மூன்று அடிகளின் முந்தைய அடிகள் (நற்றிணை 32, அடி1-7) வருமாறு,
”மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன்” என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி,
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு
அரிய வாழி, தோழி!
(வரை = மலை; கவாஅன் = மலைப்பக்கம்)
இதன் பொருள் வருமாறு:
வாலியோன் போன்ற வெண்ணிற அருவி உள்ள மாயோன் போன்ற பெரிய மலைக்கு உரிய அவன், உன்மீது அன்புகொண்டு அது கிடைக்கப்பெறாமல் வருந்துகிறான்.
நீயும் இசைந்து பேசு. உன் குடும்பத்தினருடன் கலந்து பேசி, அவனைக் கண்டு, அவனுடன் அளவளாவ வேண்டும். இதனை மறுத்தற்கு ஒன்றுமில்லை.
தோழி ஆராய்ந்தறிந்து அவன் நல்லவன் என உணர்ந்து அவனுடன் பேசுமாறு கூறுகிறாள்.
நாமும் சங்கப் புலவர்கள் பொன்னுரையைப் பின்பற்றி, நட்பு கொண்ட பின் ஆராய்ந்து பயனில்லை. ஆதலின் ஆராயாமல் நட்பு கொள்ள வேண்டா!
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply