தலைப்பு-புறநானூற்றுச்சொற்கள்-அ.மோகனா : thalaippu_puranaanutrusorkal_mohana

1

  சங்க இலக்கியங்களை முன்வைத்து இன்று தமிழ்மொழியின் தொன்மை உலக அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. தொகுப்பு நூல்களான அவ்விலக்கியங்கள் காலந்தோறும் பல்வேறு வகையான வாசிப்புகளை வேண்டி நிற்கின்றன. பெரும்பாலான வாசிப்புகள் அவற்றின் தனித்தன்மையை உணர்த்துவனவாகவும் நிலைபேற்றை மதிப்பிடுவனவாகவும் அமைந்துள்ளன. அவற்றுள்ளும் புறநானூற்றின் வாசிப்பும் அதன் மீதான ஆய்வுகளும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன. மு. இராகவையங்காரின் ‘வீரத்தாய்மார்’ தொடங்கி க.கைலாசபதியின் ‘தமிழ் வீரநிலைக்கவிதை’ வரை புறநானூறு தமிழ்பேசும் மக்கள் கூட்டத்தின் வீர வாழ்வை, உணர்வை வெளிப்படுத்தும் இலக்கியமாக மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அக இலக்கியங்களைவிட புறஇலக்கியங்களே மனித வாழ்க்கையின் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக உள்ளன. இது குறித்துத் தமிழண்ணல் கூறியுள்ள கருத்து கவனத்திற்குரியது.

  புறம் பாடிய புலவர்கள் தம் வாழ்வில் நிகழ்ந்த உண்மையான நிகழ்ச்சிகளையே பெரும்பாலும் எடுத்துரைக்கின்றனர். எனவே புறப்பாடல்கள் புலவர்களின் உள்ளத்திலிருந்து  இயல்பாகப் பீறிட்டெழுந்த வலிமைமிக்க உணர்ச்சிகளாகும். அவை புலவர்கள் தம் சொந்த வாழ்வில் துய்த்த இன்பதுன்பங்களின் வலிமைமிக்க வெளிப்பாடுகளாகும். இத்தகைய வெளிப் பாட்டில் அகப்பாடல்களைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட அளவு வீரியமும் உணர்ச்சியும் மிக்க வகையில் புறப்பாடல்களைப் பாடியுள்ளனர். (சங்கமரபு: 2009: 263)

  இவ்வாறு பாடினோரின் தன்னுணர்ச்சிப் பாடல்களின் தொகுப்பாக அமைந்த புறநானூற்றின் அழகியல், அமைப்பு, தொகுப்புகுறித்துப் பல்வேறு ஆய்வுகள் வெவ்வேறு தளங்களில் நடைபெற்றுள்ளன. இவற்றிலிருந்து சற்று மாறுபட்டு புறநானூற்றுப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சொற்களைக் குறித்த சில விவாதங்களை முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

  1894இல் உ.வே.சா.வால் பதிப்பிக்கப்பட்ட புறநானூற்றின் முகப்புப் பக்கங்களில் ‘இந்நூலிலும் உரையிலுங்கண்ட அரியசொற்கள்’ என்ற தலைப்பில் சில சொற்கள் உ.வே.சா.வால் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில புறநானூற்று நூலுக்குள் மட்டுமே பயின்றுவந்துள்ளன; பிற சங்க இலக்கியங்களில் அவற்றைக் காண முடியவில்லை. இதனைத் தொடர்ந்து பெ.மாதையனின் ‘சங்க இலக்கியச் சொல்லடைவு’ என்னும் கருவிநூலின் துணை கொண்டு ஆராயும் போது பிற சங்க இலக்கியப் பிரதிகளில் பயின்று வராத 1500க்கும்  மேற்பட்ட சொற்கள் புறநானூற்றில் பயின்று வந்துள்ளது வியப்பளிப்பதாக உள்ளது.

  கால மாற்றமும் கவிதையின் பொருண்மையும் புதிய புதிய சொற்களுக்கான தேவையை இலக்கியப் பரப்பில் சாத்தியப்படுத்தியிருப்பதைப் புறநானூறும் உறுதி செய்துள்ளது. இவ்வாறு இலக்கியங்களுள் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்ற சொற்களைக் குறித்த ஆய்வை மேற்கொண்டவர் பா.ரா.சுப்பிரமணியம். திருக்குறளில் அத்தகைய ஆய்வொன்றை அவர் நிகழ்த்தியுள்ளார். சில சங்க இலக்கியச் சொற்களையும் அதற்குச் சான்றுகாட்டி விளக்கியுள்ளார். ‘வீரர்’ என்ற சொல் அகநானூற்றில் நக்கீரராலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி இத்தகு ஆய்வின் பயன் குறித்து அவர் கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கது.

  சங்கக் காலத்தை ஒட்டி எழுந்த, ஓர் ஆசிரியரால் இயற்றப்பட்ட, ஒரு நூலில் இடம்பெற்றிருக்கும் சொற்களில், புதிய சொற்களின் வரவை எளிதாகக் கண்டு கொள்ளலாம். சங்க இலக்கியச் சொற்களஞ்சியத்தின் தொடர்ச்சியையும் தம் கருத்தாக்கங்களுக்கு வேண்டிய புது வரவுகளையும் அந்நூலில் காண இயலும். தமிழ்மொழியின் சொற்கோவை எவ்வாறு விரிவடைகிறது என்பதையும் காணமுடியும்(சொல்வலை வேட்டுவன்: 2009:287)

  இப்பின்புலத்தில் புறநானூற்றில் மட்டும் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில சொற்களை ஆராய்வதன் மூலம் தொகுப்பு நூலான புறநானூற்றின் தனித்தப் பண்புகளை விளங்கிக் கொள்ள முடியும்.

 ‘சொல்’ குறித்த ஆய்வு எனும் போது சோசுயுரின் மொழிக்கோட்பாடு கவனத்திற்குரியதாக உள்ளது. வடிவத்துக்கும் பொருளுக்கும் உள்ள உறவு மரபை (பழக்கத்தை)ச் சார்ந்துதான் உள்ளது (சானதன்கல்லர் இலக்கியக்கோட்பாடு: மிகச்சுருக்கமான அறிமுகம்:2005:91). எந்த ஒரு மொழியிலும் ஒருசொல் திடீரென்று தோன்றிவிடுவது கிடையாது. தொடர்ச்சியான புழக்கத்தினாலும், தொடர்ந்து வருகின்ற மரபினாலும் ஒரு பொருண்மை குறிப்பிட்ட, வரையறுத்த ஒரு சொல் வடிவத்தை ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வொரு மொழிபேசும் மக்கள் கூட்டத்திடமும் ஒரே பொருண்மைக்கு வெவ்வேறு வகையான சொற்கள் வழங்கப்படுவதற்குக் காரணம் இதுதான். அது அவரவர் மரபைச் சார்ந்த வடிவத்தைப் பெற்றுவிடுகின்றது. ஒரே மொழி பேசுகின்ற மக்கள் கூட்டத்திடமும் வட்டாரத் தன்மை சார்ந்து ஒரே பொருண்மைக்கு வெவ்வேறு சொல்வடிவங்கள் வழங்கப்பெறுவதையும் காணமுடியும். எவ்வாறிருப்பினும் ஒரு மொழியில் வழங்கும் சொல்குறித்த ஆய்வை மேற்கொள்ளும் போது அது அச்சமூகத்தின் பண்பாட்டினூடாகவே பயணப்படும். பண்பாடு என்பது நம்பிக்கைகளையும், சடங்குகளையும், வளமையையும் கொண்டு கட்டமைக்கப் படுவது.

  இந்த ஆய்வுப் பின்புலத்தில் புறநானூற்றுப் புலவர்களால் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள சொற்களைச் சில தருக்கங்களின் அடிப்படையில் அணுக முடியும். அச்சொற்களை வசதி கருதிக் கீழ்வருமாறு வகைபடுத்தலாம்.

  • புழங்குபொருள்களைக் குறிக்கின்ற சொற்கள்
  • கலைஞர்களைக் குறிக்கின்ற சொற்கள்
  • இனக்குழுவினரைக் குறிக்கின்ற சொற்கள்
  • பெண்களைக் குறிக்கின்ற சொற்கள்
  • இலக்கியம், கலைகள், தொல்லியல் தொடர்பான சொற்கள்
  • நம்பிக்கைகள் சார்ந்த சொற்கள்

இவ்வாறு வகைபடுத்தப்பட்ட இச்சொற்களின் மீதான ஆய்வைக் கீழ்வரு நிலைகளில் பகுத்துக்கொள்ளலாம்.

  • புதிய சொற்களைப் பயன்படுத்திய புலவர்களின் சமூகம், அவர்கள் அச்சொற்களைக் கையாள வேண்டியதன் தேவை குறித்த தேடல்
  • அச்சொற்களின் வடிவம் பிற சங்க இலக்கியங்களில் இல்லாதிருந்தாலும் அதற்கான பொருண்மை வேறுவடிவத்தில் வழங்கப்பட்டிருப்பின் பாடிய புலவரின் வட்டாரத்தில் வழங்கப்பட்ட சொல்லாக அச்சொல் அமைய வாய்ப்புண்டு. இதன்மூலம் அக்குறிப்பிட்ட சொல்லின் வட்டாரத் தன்மையை அறுதியிடுதல்.
  • குறிப்பிட்ட அச்சொல் மக்களின் சடங்குகளிலிருந்து, கலைகளிலிருந்து, நம்பிக்கைகளிலிருந்து பெறப்பட்டதா என்பது குறித்த புரிதல்
  • இன்று தொல்லியல் சான்றுகளின்வழி நிறுவப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளையும் கவனத்தில் கொண்டு புறநானூற்றின் அகச்சான்றின்வழி அவை குறித்த சில கவனத்தை ஏற்படுத்துதல். அவ்வாறே வரலாறு, மானுடவியல் முடிவுகளையும் கவனத்தில் கொள்ளுதல்.

  மேற்குறித்த நிலைகளில் அப்புதிய சொற்களை அணுகுவது புறநானூறு போன்ற தொல்நூலின் பன்முகத்தன்மையை உணர்த்த மிகவும் இன்றியமையாத ஒன்று. எடுத்துக்காட்டிற்கு முன்னர்க் குறிப்பிட்ட வகைமையில், வகைமாதிரியாகச் சில சொற்களை மட்டும் இக்கட்டுரை முன்வைக்கின்றது.

  புழங்குபொருளைக் குறிக்கின்ற சொல் எனும்போது, வெள்ளைக்குடி நாகனார் ‘உழுபடை’ என்ற சொல்லை முதன் முதல் புறநானூற்றில் அறிமுகப்படுத்தியுள்ளார். வெள்ளைக்குடி என்னும் ஊரைச்சேர்ந்த நாகனாரால் ‘உழுபடை’ என்ற புதிய சொல் கலப்பைக்குரியதாகக் கையாளப்பட்டிருப்பதைப் புறநானூற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. உழுபடை என்பது ஒரு வட்டார வழக்குச் சொல் என்று கொள்ளமுடியும். இச்சொல்லை இவர் பயன்படுத்த செய்யுளின் ஓசைநலனும் ஒரு காரணமாக இருக்கிறது. பொருபடை என்பது முதற்சீராக அமைய உழுபடை என்பது இறுதிச்சீராக இவ்வடியில் அமைந்து ஓசைநலத்தைத் தருகின்றன. அவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிப் பழஞ்செய்க்கடன் வீடுகொண்டதாகக் குறிப்பும் உள்ளது.  ‘பொருபடை தரூஉங்  கொற்றமு முழுபடை’ (புறம்:35:25) என்கிற அடியில் கலப்பையைக் குறிப்பதாக இச்சொல் பயின்றுவந்துள்ளது. அக்கருவியைக் குறிக்க ‘கலப்பை’ என்ற சொல் கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பாடப்பெற்ற பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி (பெரும்பாணாற்றுப்படை:188). உருத்திரங்கண்ணனார் இன்று திருநெல்வேலி என்று கூறப்படுகின்ற நிலப்பகுதியைச் சார்ந்தவர்; அவர் வழங்கிய கலப்பை என்ற சொல்லே இன்றும் புழக்கத்தில் உள்ளது. இவ்வாறு புழங்கு பொருள்கள் குறித்த சொற்களின் அறிமுகத்தைத் வேறு சில சொற்களைக் கொண்டும் தொடர்ச்சியாகக் கவனப்படுத்த இயலும்.

(தொடரும்)

முனைவர் அ.மோகனா

உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை

http://tctamildepartment.blogspot.in/2015/10/blog-post_27.html

வலை முகப்பு - தியாகராசர் கல்லூரித்தமிழ்த்துறை : mukappu_thiayakarasarkalluuri_thamizhthurai