ஆரியப் பார்ப்பனர் சூழ்ச்சிகளை உரைப்பின் மிக விரியும் – மறைமலை அடிகள்
இவ்வாரியப் பார்ப்பனர் தமிழையும் தமிழ் நூல்களையும், தமிழரையும், தமிழ்ப் பெரியாரையும், தமிழ்த் தெய்வத்தையும் தாழ்வுபடுத்தி விடும் சூழ்ச்சிகளை எல்லாம் ஈண்டுரைக்கப் புகின் இது மிக விரியும். பொதுவாகத் தமிழ்த் தொடர்புடைய எதனையும் இகழ்ந்தொதுக்குதலே இவர்தம் கடப்பாடு. தாம் அங்ஙனம் ஒதுக்குதற்கு ஏலாமல் ஏற்பதற்குரியது மிகச் சிறந்தது ஏதேனும் ஒன்றைத் தமிழிற் கண்டால் உடனே அஃது ஆரியராகிய தம்மவரிடமிருந்து வந்ததென நாட்டுதற்குத் தக்க ஏற்பாடுகளை எல்லாம் எப்படியோ செய்து வைப்பர். – மறைமலை அடிகள்: வேளாளர் நாகரிகம்:பக்கம் – 21
தமிழின் சிறப்பை மறக்கச் செய்தனர் – மொ.அ.துரை அரங்கசாமி
… எனினும், அவர்தம் செல்வாக்கின் பயனாய் ஆரிய மொழியிலிருந்தே தமிழ் மொழி பிறந்ததென்றும், தமிழ்மொழியிலுள்ள பல சொற்கள் ஆரிய மொழியின் சொற்களிலுள்ள முதனிலைகளைக் கொண்டே பிறந்தனவென்றும், தமிழர் ஆரியரிடமிருந்தே நாகரிகம் கடவுட் கொள்கைகள் பிற எல்லாம் கடன் வாங்கிக் கொண்டனர் என்றும் பிறவாறும் கூறித் தமிழைத் தனித்தியங்க வல்ல மொழி என்பதைத் தமிழ்மொழி வல்லாரும் மறந்து விடும்படிச் செய்து விட்டனர். அறிஞர் மொ.அ.துரை அரங்கசாமி: பண்டைத் தமிழ்நெறி : பக்கம்-3
