thirukkural_vanigaviyal01

1.0. நுழைவாயில்

                எல்லார்க்கும் எல்லாமும் [0582] சொல்ல வேண்டியவற்றை நல்ல வகையில்- வெல்லும் வகையில் சொல்லும் சொல்லாற்றல் மிக்கவர் அருந்திறல் பெருந்தகையர் திருவள்ளுவர். தனிமனிதனுக்கும் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் சொல்ல வேண்டிய இன்றியமையா அனைத்தையும் சொல்லியுள்ளார். அவற்றுள் ஒரு தலைப்பே உலகு தழீஇய பொதுமைச் சிறப்பு மிக்க தலைப்பாகிய ‘வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள்’ என்பது. இத் தலைப்பும், திருவள்ளுவர் எத்துணைப் பெரிய பெருமையும் அருமையும் பொலியும் தொலைநோக்குப் பார்வையர் என்பதைப் புலப்படுத்தும். இனி அவை பற்றி நீடு நினைந்து ஆழச் சிந்திப்பது இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கு.

2.0. பொருளின் இன்றியமையாமை    

            நீர்இன்றி அமையாது உலகு [0120] என்பது போலப், பொருள்இன்றி அமையாது உலகு. பொருள் இல்லார்க்கு இவ்உலகு இல் [0247] என்பதும் திருவள்ளுவரின் பெருவாக்கு. பொருளின் இன்றியமையாமையைத் தொலைநோக்கால் நனிஉணர்ந்த திருவள்ளுவர் பொருள் செயல் வகை [076] என்னும் அதிகாரத்தைப் பொருள்பொதிய வரைந்தார்.

3.0. பொருள் உள்ள வாழ்க்கை

      உழவுத் தொழில், நெசவுத் தொழில், வணிகத் தொழில், முதலான பல்வேறு தொழில்கள், பதவி, வேலை, கூலி வேலை முதலான எண்ணரிய வழிகளில் பொருளைத் திரட்டலாம்.

     பொருள் உள்ள வாழ்க்கை வணிகத்திலும் இருத்தல் வேண்டும். பொருளுக்காக வணிகம் செய்யலாம்; பொருளுக்காவே வணிகம் செய்தால், அதில் பொருள் இருக்காது. இதைச் சிந்தித்த பொருள்வள்ளல் திருவள்ளுவர் உலகப் பொதுமையை உள்ளடக்கிய வகையில், வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகளைத் தொகுத்தும் பகுத்தும் வகுத்தும் வழங்கியுள்ளார்.

4.0. வணிகம்ஒரு விளக்கம்

   மனிதனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவது வணிகம். அது ஆதாய(இலாப) நோக்கு உள்ளதாகவும் இருக்கலாம்; இல்லதாகவும் இருக்கலாம். இவ் வகைப் பொருளாதார நடவடிக்கையே வணிகம் [TRADE, COMMERCE, BUSINESS]  எனப்படும்.

5.0. எத் தொழிலும் எவ் வணிகமும் சிறப்பினதே

     பிறப்[பு]ஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்[பு]ஒவ்வா

    செய்தொழில் வேற்றுமை யான்.           [0972]

  •      செய்யும் தொழிலில், வணிகத்தில் சிறப்பு உள்ளது, சிறப்பு இல்லது என வேறுபாடுகள் ஏதும் இல்லை.
  •   செய்யும் தொழிலில் / வணிகத்தில் காட்டும் வேறுபாட்டுத் திறன்களால்தான் சிறப்புக்களும், சிறப்பு இன்மைகளும் ஏற்படுகின்றன.

6.0. முதற்கட்ட வணிகவியல் ஆய்வு மேலாண்மை

       வினை [வணிகம்] செயல் வகை

    பொருள்கருவி காலம் வினைஇடனொ[டு] ஐந்தும்

      இருள்தீர எண்ணிச் செயல்.       [0675]

     இத் திருக்குறட்பா பொதுமைக் கருத்தாக்கத்தைக் கொண்டது.. அனைத்து வகைத் தொழில்களுக்கும் பொருந்தும் திருக்குறட் பா.

இதில் ஒரு வணிகத்தைத் தொடங்கும்முன் எவற்றையெல்லாம் அடிப்படை ஆய்வுகளாகச் செய்ய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் ஆழமாக ஆராய்ந்து வரிசைப்படுத்தியிருக்கிறார்.

6.1. வினை: என்ன வணிகம் செய்தால் தமக்குப் பொருந்தும் என்பதை ஆராய்ந்து, அதைத் தெளிந்து தேர்வு செய்தல் வேண்டும்.

  •  தெரிந்த வணிகத்தை விட்டவனும் கெட்டான்

         தெரியாத வணிகத்தை தொட்டவனும் கெட்டான்.

         ஒல்வ[து] அறிவ[து] அறிந்[து]அதன் கண்தங்கிச்

         செல்வார்க்குச் செல்லாத[து] இல்.     [0472]

எது முடியுமோ அது பற்றி அறிய வேண்டியன அறிந்து, அதிலேயே உறுதியாக நின்று நடத்திச் செல்வார்க்கு எல்லாம் வெற்றியாகும்.

6.2. பொருள்: தம்மால் எவ்வளவு தொகையை முதலீடாகப் போட முடியும் என்பதை நீள நினைந்து ஆழ ஆராய வேண்டும்.

        அள[வு]அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

        இல்ஆகித் தோன்றாக் கெடும்   [0479]

      தம் பொருள் அளவை நன்கு ஆராய்ந்த பின்னரே, முதலீடு பற்றிச் சிந்திக்க வேண்டும்;

6.3. காலம்: கோடைக் காலம், மழைக் காலம், ஐப்பசி அடைமழைக் காலம் முதலான கால நேரங்களை ஆராய்ந்து அவ்அவ் காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற வணிகத்தைத் தொடங்க வேண்டும்.

         பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

         தீராமை ஆர்க்கும் கயிறு       [0482]

      காலத்தோடு பொருந்தும் வணிகம் செய்க. அதுவே பொருள் செய்யும்.

6.4. கருவி: வணிகத்தோடு தொடர்புடைய கருவிகள் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவை கிடைக்கும் இடம், அவற்றின் விலை, உழைக்கும் காலம் செயல்திறன் முதலானவற்றை ஆய்வு செய்தல் வேண்டும்.

        அறி[வு]அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்

         உள்அழிக்கல் ஆகா அரண்.         [0421]

      அறிவு எனும் கருவிக்கு அழிவைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. பகைவராலும் / போட்டி வணிகராலும் அழிக்க முடியாத உள்பாதுகாப்புக் கருவியாகும் அறிவு.

     அறிவோடு சிந்தித்து அறச் செறிவோடு வணிகம் செய்வார் வெல்வர்.

6.5. இடம்: இடத் தேர்வு மிகவும் இன்றியமையாதது. மக்கள் எளிதில் வந்து செல்லும் இடமாக இருக்க வேண்டும்.

            காலம் கருதினும் கைகூடும் காலம்

            கருதி இடத்தால் செயின்.   [0484]

     எக் காலத்தில் எவ் வணிகத்தைச் செய்ய வேண்டும் என ஆராய்ந்து, அதை இடத்தொடு பொருந்தச் செய்வார்க்கு உலகமே கிடைக்கும்.

  •         இருள்தீர எண்ணிச் செயல்
  •       செய்ய இருக்கும் வணிகத்தில் உள்ளிருக்கும் இருட்பகுதிகள் ஆகிய தோல்வி வாய்ப்புக்கள், இழப்புக்கள், நடைமுறைச் சிக்கல்கள் உதவிகள் போன்ற அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து வணிகத்தைச் தொடங்க வேண்டும்.

7.0. வணிகவியல் மேலாண்மை நடவடிக்கைகள்

7.1. வினைத் திட்பம்

  •        எண்ணித் துணிக கருமம்   [0666]
  •       எச் செயலாயினும், எத் தொழிலாயினும், எவ் வணிகமாயினும் முழுதுறக் கூர்ந்து ஆராய வேண்டும். அவ் ஆய்வின் பின்னரே அதைத் தொடங்கத் துணிய வேண்டும்

7.2. தெரிந்து செயல் வகை

  •        தேர்ந்[து]எண்ணிச் செய்தல் வேண்டும்   [0462]
  •       பொருந்தும் வணிகத்தை மட்டுமே தேர்ந்து எடுக்க வேண்டும். தேர்ந்து எடுத்த பின்னரே அவ் வணிகத்தைச் செய்ய வேண்டும்.

8.0. வணிக முதலீடு

  •        முதல்இல்லார்க்[கு] ஊதிய இல்லை [0449]

எவ் வணிகமானாலும் முதலீட்டைப் போட வேண்டும். முதலீடு இல்லாத வணிகத்தால் ஊதியமும் / வருவாயும் இல்லை. இத் தொடரில் முதலீட்டின் இன்றியமையாமையை முப்பாலார் செப்புகிறார்.

8.1. பாதுகாப்பான முதலீடு

        குன்[று]ஏறி யானைப்போர் கண்[டு]அற்றால், கைத்[து]ஒன்[று]

         உண்டாகச் செய்வான் வினை.     [0758]

  •       தரையில் நடைபெறும் யானைப் போரைப் பார்க்க வேண்டு மென்றால், அருகில் இருக்கும் குன்றின்மேல் ஏறி நின்றுகொண்டு பார்க்க வேண்டும். அதுதான் பார்ப்போரின் உயிருக்குப் பாதுகாப்பு.
  •       அதைப் போலவே, தாம் போடும் முதலீட்டிற்கும் பாதுகாப்பு வேண்டுமென்றால், தேர்ந்தெடுத்த வணிகம் செய்ய முனைவோர் தம் கையில் உள்ள பொருளைப் போட்டு வணிகத்தைத் தொடங்க வேண்டும்

9.0. ஊக்க மேலாண்மை

      ஆதாயமும்(இலாபமும்) இழப்பும் வணிகத்தில் இயல்பானவை. ஒரு வேளை இழப்பு ஏற்பட்டாலும், அது கண்டு கலங்காது ஊக்கமுடன் செயல்பட்டால் இழந்தவற்றை மீண்டும் பெறுவர். ஊக்க மேலாண்மையர் மீண்டும் ஆக்கம் பெறுவர். அவ் ஆக்கமே மேன்மேலும் ஊக்கத்தை ஊட்டும்.

  •     பொருள்அற்றார் பூப்பர் ஒருகால்           [0248]
    •     ஆக்கம் இழந்தே[ம்எ]ன்[று] அல்லாவார், ஊக்கம்

                      ஒருவந்தம் கைத்[து]உடை யார்.        [0593]

  •     சிதைவிடத்[து] ஒல்கார் உரவோர்          [0597]
    •     அருமை உடைத்[து]என்[று] அசாவாமை வேண்டும்

                     பெருமை முயற்சி தரும்.                     [0611]

   கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

         தூக்கம் கடிந்து செயல்.        [0668]

   ஆய்வு செய்து தேர்ந்து எடுத்த செயலில் / வணிகத்தில் குழப்பம், காலத் தாழ்வு இல்லாமல், செய்தல் வேண்டும். முடியாது என முடங்காது; முடியும் என முயல வேண்டும்.

  •     அரும்பொருள் யா[து]ஒன்றும் இல். [0462]
  •     அருவினை என்ப உளவோ….?       [0483]
  •     அரியஎன்[று] ஆகாத இல்லை        [0537]
  •    எண்ணிய எண்ணியாங்[கு] எய்துப, எண்ணியார்

            திண்ணியர் ஆகப் பெறின்              [0666]

  •          பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

                அருமை உடைய செயல்.           [0975]

     எச் சூழலிலும் கலங்காது, உள்ள உறுதியோடு, முடியும் எனும் நம்பிக்கையோடு, மனத் திண்மையோடு, காலம் தாழ்த்தாது செய்தால் எதிலும் எங்கும் எப்போதும் வெற்றிதான்.. வணிகத்திலும் வெற்றிதான். இவ்வளவு ஆழமாகத் திருவள்ளுவர் ஆங்காங்கே ஊக்க மேலாண்மையை விதைத்துள்ளதை வணிகர் மேற்கொள்ளல் வேண்டும்.

10.0. விளம்பரமும் வணிக முதலீடே

      விளம்பரங்களை நேர்முக விளம்பரங்கள், மறைமுக விளம்பரங்கள் இரு வகைப்படுத்தலாம்.

10.1. நேர்முக விளம்பரங்கள்

      பலகைகள், செய்தித்தாள்கள், அனைத்துவகை இதழ்கள், தொலைக்காட்சிகள், பதாகைகள், கையடக்கத் தாளில் அச்சடித்து வழங்கல் முதலானவற்றின்வழி செய்யப்படும் விளம்பரங்களைச் செயற்கை விளம்பரங்கள் எனலாம்..

10.2. மறைமுக விளம்பரங்கள்

     நேர்மை, பொருள்களின் தரம், குறைந்த விலை, இனிய பேச்சு, நல்ல அணுகுமுறை முதலான வணிகவியல் நடவடிக்கைகளை வணிகர் மேற்கொண்டால், அவை நுகர்வோரை ஈர்க்கும். மகிழ்ச்சியைச் சேர்க்கும். அவர், தம் மகிழ்ச்சியைப் பலரிடம் பகிர்வார். இப்படியே சங்கிலித் தொடர்போல் தகவல்கள் பரவும். இவைதான் செலவில்லா மறைமுக விளம்பரங்கள். இவைதான் இயற்கை விளம்பரங்கள். இவற்றைத் திருவள்ளுவர் சிந்தித்துள்ளாரா….?

    தாம்இன்[பு] உறுவ[து], உல[கு]இன் [பு]உறக்கண்டு  

      காம்உறுவர் கற்[று]அறிந் தார்.           [0399]

இத் திருக்குறட்பா அதிகாரப் புறநிலைப் பொருள்கோளாகக் கொள்ளப்பட்டுள்ளது.

    இத் திருக்குறளில் அமைந்துள்ள ‘தாம் இன்பு உறுவது உலகு இன்பு உறக் காணல்எனும் தொடரில், தமக்கு எது இன்பத்தை /மகிழ்ச்சியைக் கொடுத்ததோ, அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வர். அப்போது மற்றவர்கள் மகிழ்வது கண்டு தாமும் மகிழ்வர். இது அதிகார அகநிலைப் பொருள்கோள் உரை.

     அதையே, விளம்பரத்திற்குப் பொருத்திப் பார்க்கலாம். ஒருவர் ஒரு கடையில் பொருள்களை வாங்குகிறார். அதில் அவர் முழுமன நிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறார். உடனே அவற்றைத் தம் நண்பர்களுடன் பகிர்கிறார். அவர் அக் கடையின் வாடிக்கையாளர் ஆகிறார். அவர் அக் கடையின் வாடிக்கையாளர் ஆகி மகிழ்வது கண்டு இவர் மகிழ்கிறார். இப்படியே அது சங்கிலித் தொடர்நிகழ்வு ஆகிறது. அக் கடைக்கு வாடிக்கையாளர்கள் பெருகுகிறார்கள். வணிகம் பெருகுகிறது.

 

(தொடரும்)

 – வெ.அரங்கராசன்