தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 3 தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும்
4
தொல்காப்பியம் தமிழர்க்குக் கிடைத்த முதலாவது நூலே தவிர, அதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் அல்ல. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி , பக்கம்: 10) பின் வருமாறு உரைக்கிறார்:
“தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது. தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில. ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எம்மொழியிலும் இலக்கியம் தோன்றி வளர்ந்த பின்னரே இலக்கணம் தோன்றும். இதற்குத் தமிழ் மொழியும் புறம்பன்று. தமிழிலும் இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணங்கள் தோன்றியுள்ளன. தொல்காப்பியமும், இலக்கியங்கள் மட்டுமன்றி இலக்கணங்களும் பல தோன்றிய பின்னரே இயற்றப்பட்டுள்ளது என்பதைத் தொல்காப்பியமே தெற்றெனப் புலப்படுத்துகின்றது. ஆதலின் தொல்காப்பியம் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முற்பட்டதேயன்றி, அதுதான் தமிழின் முதல் நூல் என்று கருதிவிடுதல் கூடாது.”
“நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியமே முதல் நூலாகும். தொல்காப்பியத்துக்கு முன் தமிழில் பல்வகை இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்றும் அவற்றையும் தம் கருத்துகளுக்குத் துணையாகத் தொல்காப்பியர் பயன்படுத்திக் கொண்டுள்ளா ரென்பதும் அவர்தம் நூலில் பற்பல இடங்களிலும் என்ப, என்மனார், என்றிசினோர் என்பனபோலக் கூறியுள்ளமையால் புலப்படும் உண்மையாகும். தமிழரின் மொழி, பண்பாடு, வாழ்வு போன்ற அனைத்தையும் ஓரளவேனும் அறிந்து கொள்ள உதவும் சில்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சரியான ஆதாரம் அது என்பதையும் நாம் புறக்கணித்து விடக் கூடாது. அதற்குத் துணை செய்யும் வகையில் தொல்காப்பியக் கருத்துகள் நாட்டில் பரவவேண்டும்” என்றும் பேராசிரியர் புலவர் மா.நன்னன் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம்.23) குறிப்பிடுகிறார்.
வேதவிற்பன்னர் சுந்தர் இராசு தமது இருக்குவேத ஆய்வுகள்(Rig Vedic Studies) என்னும் நூலில் தமிழ்-சமற்கிருத உறவு குறித்துக் கூறுகிறார். ஆரியர்களும் ஆரியச் சார்பினரும் ஐந்திரம் என்னும் தமிழ் நூலைச் சமற்கிருத நூலாகக் கற்பித்தும் ஐந்திரம், பாணினியம் முதலான சமற்கிருத நூல்களின் வழியேதான் தொல்காப்பியத்தை எழுதினார் எனவும். என்ப, என்மனார் முதலான முந்து நூலினரைக் குறிப்பிடுவது சமற்கிருத நூல்களைத்தான் என்றும் தவறாகத் திரித்துக் கூறுகின்றனர். “சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே; வேதங்களில் தமிழின் தாக்கம் பெரிது; இருக்கு வேதத்தில் கையாளப் பெற்றுள்ள சமற்கிருதம் தமிழர்களின் மொழியால்தான் உருப்பெற்றது; வேதத்தின் மொழியைப் படைத்த பிருகற்பதி, பழந்தமிழிலிருந்து எழுத்துகளை எடுத்துக் கொண்டு சில மாற்றங்களைச் செய்து சமற்கிருத எழுத்துகளை உருவாக்கினார்; கி.பி.முதல் நூற்றாண்டிற்குப் பிறகுதான் சமற்கிருத எழுத்துகள் உருவாக்கப்பட்டன; தமிழ் எழுத்துகளோ கிறித்துவிற்குப் பல நூற்றாண்டுகள் முன்னமேயே வழக்கில் இருந்தன” இத்தகைய பிற்பட்ட வரலாறு உடைய சமற்கிருதத்தின் இலக்கண நூல்களைத் தொல்காப்பியர் உள்ளவாங்கியுள்ளார் எனக் கூறுவது எத்தகைய அறியாமை? தொல்காப்பியம் இப்பொருண்மையில் எழுதப்பெற்ற முதனூலே.
தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன
இது குறித்து அறிஞர் கா.பொ. இரத்தினம், (அகநானூற்றுச் சொற்பொழிவுகள் : பக். 43-44) பின்வருமாறு விளக்குகிறார்.
“தொல்காப்பியத்துள்,
“என்மனார் புலவர்”
“என மொழிப, உணர்ந்திசி னோரே
“பாடலுட் பயின்றவை நாடுங் காலை”
“சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
” மொழிப, புலன்நன் குணர்ந்த புலமையோரே”
“நல்லிசைப் புலவர், , , , வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனரே”
“நேரிதி னணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”
“நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே”
என்றிவ்வாறு காணப்படுகின்ற சொற்றொடர்கள், தொல்காப்பியர் காலத்தில் பல தமிழ் நூல்கள் பெருவழக்கிலிருந்தன என்பதைப் புலப்படுத்துகின்றன, தொல்காப்பியம் இயற்றப்படு முன் அந் நூல்கள் எவ்வளவு ஆண்டுகளாக விளங்கிவந்தன என்பதற்கு விடை காண முடியாதிருக்கிறது, தொல்காப்பியத்துக்குப் பின்னெழுந்த பல இலக்கண நூல்களுள் ஒன்றாகிய நன்னூலுக்கும் தொல்காப்பியத்திற்கு மிடையிலேயே ஆயிரத்திற்கு மேற்பட்ட வருடங்கள் கழிந்தனவெனில் தொல்காப்பியத்திற்கும் அதற்கு முன்னிருந்த இலக்கண நூல்களுக்குமிடையில் எவ்வளவாயிர வருடங்கள் கழிந்திருக்கும்? தொல்காப்பிய இலக்கணம் தோன்றிய காலத்திருந்த பல நூல்கள்கூட நமக்குக் கிடைக்கவில்லை, தொல்காப்பியம் கூறும் சில இலக்கணங்களுக்குரிய இலக்கியங்கள மறைந்து விட்டன.
“தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே”
எனுமித் தொல்காப்பியச் சூத்திரத்தில் வழிநூல்கள் செய்யும் முறை நான்காக வகுக்கப் பட்டிருக்கிறது. தொகுத்தும், விரித்தும், தொகுத்து விரித்தும், மொழி பெயர்த்தும் செய்யப்பட்ட நூல்கள் தொல்காப்பியர் காலத்திலிருந்தன. இந் நூல்களைப் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள முடியாதிருக்கிறது. “
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply