தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 6 : பாணினியத்தின் சிறப்பு?!-தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும்
7
தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே
தமிழ் நூல்களைக் காப்பதற்காக இயற்றப் பெற்ற தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தமிழ்ச்சொற்களைக் கையாள்வதுதானே முறை. தமிழ் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவும் சமற்கிருதத்தை உயர்த்தும் நோக்கிலும் வையாபுரி போன்றோர் பல சொற்களையும் சமற்கிருதமாகத் தவறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்தில் எழுத்தமைப்பு உருவாக்கி அதன்பின் சொல் வளத்தை உருவாக்கிய சமற்கிருதச் சொற்கள் எங்ஙனம் தொல்காப்பியத்தில் இடம் பெற இயலும்? தமிழ் இலக்கணம் வகுக்க வந்த தொல்காப்பியர் எதற்கு வளமில்லாத பிற மொழியாகிய சமற்கிருதச் சொற்களைக் கையாள வேண்டும்? இது குறித்துத் தொல்காப்பிய அறிஞர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் (பழந்தமிழ்)பின் வருமாறு தெரிவிக்கிறார்:
நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து திகழ்ந்த தமிழர்க்கான காப்பியம் என்பதால் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தும் சிறப்பு என்பது இதன் தளமாக அமைந்துள்ளது. தமிழ்ச்சொற்களாகிய கவி, இபம், அகில், அரிசி, கருவப்பட்டை, பாண்டியன், கேரலர் (சேரலர்), சோழர், தமிழ், தொண்டி, கடத்தநாடு, சங்காடம் (மலையாளச் சொல் – படகு என்னும் பொருளினது), கோட்டாறு, குமரி, பெருங்கரை, பொதிகை, கொற்கை, கோடி, கள்ளிமேடு, மலை, ஊர் முதலிய சொற்கள் கிரேக்கம் முதலிய மேலை நாட்டு மொழிகளுள் இடம் பெற்றுள்ளமையை அறிஞர் காலுடுவல் அவர்கள் ஆராய்ந்து எடுத்துக் காட்டியுள்ளார். வையாபுரி(ப்பிள்ளையவர்கள்) அரிசி, அகில் முதலிய சொல் பற்றிய அறிஞர் காலுடுவல் ஆராய்ச்சியை, ஆராய்ச்சி முறைக்கு ஒவ்வாத முறையில் மறுத்துரைக்கின்றார். அரிசி எனும் தூய தமிழ்ச்சொல் விரீகி எனும் ஆரிய மொழியிலிருந்து தோன்றியதென^ அவர் கூறுவதிலிருந்து அவருடைய ஆராய்ச்சியின் போக்கு எத்தகையது எனத் தெள்ளிதில் புலப்படும். அவர் ஆராய்ச்சியைப் புறத்தே தள்ளுதலே ஆராய்ச்சியாளர் கடனாகும். கபி என்னும் சொல் கவி என்னும் சொல்லின் திரிபாகும். கவி என்பது குரங்கைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லேயாகும். மனிதனைப் போன்று வடிவம் பெற்றுள்ள குரங்கு கவிழ்ந்து நடக்கின்ற காரணத்தால் கவி என்று தமிழர் அமைத்துள்ளனர். கவிதல் என்னும் சொல்லினது முதனிலைத் தொழிற்பெயரே கவி என்பதாகும்.
தொல்காப்பியத்தில் பயின்றுள்ள தூய தமிழ்ச் சொற்களை வடமொழிச் சொற்களின் மொழிபெயர்ப்பு என்று வையாபுரி கூறுவதுதான் நகைப்புக்கிடமாய் உள்ளது. தாமரை, வேற்றுமை, அவையல்கிளவி, நூல் முதலியன வடமொழிச் சொற்களின் மொழிபெயர்ப்பு என அவர் கூறியுள்ளமையை என்னென்பது! தாமரைக்குத் தமிழ் நாட்டில் எல்லோரும் அறிந்த வேறுபெயர் யாது உளது? ஒன்றுமில்லையே. தாமரை தமிழ்நாட்டில் என்றும் உள்ளதுதானே? வடமொழித் தொடர் ஏற்படுவதற்கு முன்னர்த் தாமரையை என்ன பெயர் கூறித் தமிழர் அழைத்தனர்? கமலம் என்பதாவது எம்மொழிக்குரிய சொல் என்பதில் கருத்து வேறுபாடுகொள்ள இடம் உண்டு. தனித்தமிழ்த் தாமரைச் சொல்லை வடமொழியின் மொழி பெயர்ப்பு என்பார் அறிவை என்னென்றழைப்பது?
அவை என்பதும் தூய தமிழ்ச்சொல். அதன் வடமொழி வடிவமே சபா என்பது. வேற்றுமை என்னும் சொல் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வழக்கிலிருந்த சொல்லாகும். வேற்றுமை தானே ஏழென மொழிப” என்று தொல்காப்பியர் கூறுவதனால் வேற்றுமை என்று பெயரிட்டது அவர் அல்லர் என்று நன்கு தெளியலாகும். நூல் என்பது வேறு; சூத்திரம் என்பது வேறு. நூற்பா என்பதுதான் சூத்திரத்திற்கு நேர் பொருளாகும். நூல் என்றும் நூலின் பாக்களை நூற்பா என்றும் தமிழர் அழைத்தனர். வடமொழியாளர் நூற்பாவையும் சூத்திரம் என்று கூறிக் கொண்டாலும் சூத்திரம் என்னும் வடசொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. ஆனால் நூற்பா என்னும் சொல்லுக்கு வேறு பொருளே கிடையாது. சூத்திரம் என்னும் சொல்லுக்கு நூல்-திரிக்கப்பட்ட நூல்-என்னும் பொருள் இருக்கலாம். ஆனால் புத்தகம் என்ற பொருளில் வழங்கும் நூல் என்னும் பொருள் பொருந்தாது; கிடையாது என்பதை வையாபுரியார் அறியார் போலும்.
ஆதலின், தொல்காப்பியப் பிறப்பியலின் முதல் நூற்பா பாணினியிலிருந்தும், மெய்ப்பாட்டியலின் மூன்றாம் நூற்பா பரதநாட்டிய சாத்திரத்திலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டன என்று கூறும் அவர் கூற்று எட்டுணையும் உண்மையன்று; இருமொழி நூல்களையும் தெளிவாகக் கற்றிலர் போலும் என்பது நன்கு புலப்படுகின்றது. (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்)
மேனாட்டு அறிஞர்கள் ஆய்வனவற்றை அன்றே தொல்காப்பியர் மேற்கொண்டுள்ளார்
இன்றைய மேனாட்டு அறிஞர்கள் ஆய்வனவற்றை அன்றே தொல்காப்பியர் மேற்கொண்டுள்ளார் என்பதைப் பின்வருமாறு இலக்குவனார் தெரிவிக்கிறார். “மேலை நாட்டு மொழி நூலறிஞர்கள் “Semantemes and morphemes’ என்னும் தலைப்பில் ஆராய்கின்றனவற்றை ஆசிரியர் தொல்காப்பினார் உரிச்சொல் இடைச்சொல் என்ற தலைப்புகளில் ஆராய்கின்றார்.(பேராசிரியர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆராய்ச்சி பக்-13)
தொல்காப்பியம் ஒரு விழுமிய நூல் என ஆராய்ச்சியாளர் மு.வை. அரவிந்தன் (உரையாசிரியர்கள்: பக்.140) பின் வருமாறு குறிப்பிடுகிறார்:
“தொல்காப்பியம் என்னும் பழம்பெரும் இலக்கணநூல் தமிழ்மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்குகின்றது. வளமாக வாழ்ந்த தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் இது ஒளிர்கின்றது. இதனை இயற்றிய தொல்காப்பியரின் குரல், காலத்தையும் இடத்தையும் கடந்து வந்து தெளிவாக ஒலிக்கின்றது. தொல்காப்பியம் தனக்குப் பின் தோன்றிய பல இலக்கண இலக்கியங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கி வழிகாட்டி நடத்திச் செல்லுகின்றது. தொல்காப்பியத்தின் கருத்தை உணரவும் உணர்த்தவும் புலவர் பெருமக்கள் காலந்தோறும் முயன்று வந்தனர். அம்முயற்சியின் விளைவாய் உரைகள் பல பெருகின. உரைவளம் கொண்ட பெருநூலாய்த் தொல்காப்பியம் திகழ்கின்றது.”
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply