இந்தி நுழைவை எந்நாளும் தடுப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தி நுழைவை எந்நாளும் தடுப்போம்!
“இந்தியை அல்ல, இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்” என நம்மைத் தலைவர்கள் ஏமாற்றுகிறார்கள். நாமும் “ஆமாம், ஆமாம்” என்று சொல்லி இந்தித் திணிப்பிற்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் மாநிலங்களில் இந்திப் பயன்பாட்டை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கு அப்பால் பிற மக்களின் மீது, நம் மக்களின் மீது இந்தியை நுழைப்பதே திணிப்பதுதான்.
பள்ளிகளில் இளமழலை(L.K.G.) வகுப்பிலிருந்தே இந்தி திணிக்கப்பட்டுக் கற்பிக்கப்படுகிறது. கேட்டால் விருப்பப் பாடம் என்கிறார்கள். விருப்பப்பாடம் என்றால் வேறு மொழிகளும் விருப்பப்பாடப் பட்டியலில் இருக்கிறதா என்றால் இல்லை. விருப்பப்பாடம் என்றால் யார் விருப்பத்தில் கற்பிக்கப்படுகிறது? படிப்பவர்கள் விருப்பத்திலா? இல்லை! படிப்பவர்களின் பெற்றோர்கள் விருப்பத்திலா? இல்லவே இல்லை! அவ்வாறென்றால் இந்தியைத் திணிப்பதாகக் கூறும் தமிழ்நாட்டின் அரசு யார் விருப்பம் என்று கூறி இந்தியைத் திணிக்கிறது? இந்தித்திணிப்பை எதிர்ப்பதாகக் கூறும் கட்சிகள் அனைத்தும் வாய்மூடி அமைதியாக இருப்பது ஏன்? இந்தியைத் திணிப்பதை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே மெல்ல மெல்ல-அல்ல, அல்ல விரைவாக இந்தியை நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருப்பது ஏன்? பள்ளிகளில் இருந்து இந்தியை அடியோடு நீக்கும் துணிவு அரசிற்கு உள்ளதா? அதனை ஒப்புக்கொள்ளும் தமிழ்க்காப்புணர்வு பிற கட்சிகளுக்கு உள்ளதா?
அரசு என்றால் இன்றைய அரசு மட்டும் அல்ல. இந்தியை எதிர்த்து ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளையும்தான் குறிப்பிடுகிறோம். பல நல்ல திட்டங்களைச் செயற்படுத்தும் அரசு, இந்தி நுழைவு ஒழிப்பையும் ஒரு திட்டமாகக் கொண்டு செயலாற்றினால் என்ன? எவ்வகை விருப்பத் தெரிவுமின்றி இந்தியை வல்லடியாகப் படிக்கச் சொல்வதை நிறுத்தினால்தான் என்ன?
இந்தி எதிர்ப்பால் ஆட்சிக்கு வந்தவர்கள் குடும்பத்தினர் கோடியில் புரள்கின்றனர். ஆனால் இந்தி எதிர்ப்பில் உயிரிழந்தவர்கள், தண்டனை பெற்றவர்கள், துன்புற்றவர்கள் குடும்பத்தினர், அவர்கள் வழி வந்தோர் தெருக்கோடியில் அல்லலுறும் நிலையில் இருப்பது ஏன்?
1930 இல் மொழிப்போராட்டம் தொடங்கி நூறாண்டு நெருங்க உள்ளது. 1965 மொழிப்போர் நிகழ்ந்து 60 ஆணடு ஆகிறது. ஆனால் இன்றும் நாளும் இந்தித் திணிப்புகள் உள்ளன. அலைபேசி வழியாக இந்தித் திணிப்பு! முழக்கங்கள் வாயிலாக இந்தித் திணிப்பு! திட்டங்களின் பெயர்கள் வாயிலாக இந்தித் திணிப்பு! பெயர்கள் வாயிலாக இந்தித் திணிப்பு! திரைப்படங்கள் வாயிலாக இந்தித் திணிப்பு! தொலைக்காட்சிகள் வாயிலாக இந்தித் திணிப்பு! என எங்கும் எதிலும் இந்தித் திணிப்பு அரங்கேறிக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என நாளும் வெற்று முழக்கம்!
எப்பொழுது, தமிழ்நாட்டில் நுழைந்துள்ள, மேலும் நுழையப் பார்க்கிற இந்தியை அடியோடு எதிர்க்கிறோம் என முழங்கி அதனைச் செயற்படுத்துகிறார்களோ, அப்போதுதான் இந்தித் திணிப்பு நிற்கும்; மக்களும் பயனடைவார்கள்.
மாநில உரிமைக்குக் குரல் கொடுத்து வரும் அரசு, நவோதயா பள்ளிகள் வாயிலாகவும் மத்திய அரசு கல்விவாரியப்பள்ளிகள் வாயிலாகவும் படைத்துறைப் பள்ளிகள் வாயிலாகவும் பிற கல்விநிலையங்கள் வாயிலாகவும் இந்தித்திணிப்பை அடியோடு நிறுத்த வேண்டும். அதற்கு முன்னோடியாக முதலில் தமிழ்நாட்டரசின் பள்ளிகளின் வாயிலாகவும் இந்தித் திணிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்
ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளிலும் ஒன்றிய அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நிறுவனங்களிலும் ஒன்றியம் சார் துறைகளிலும் இந்தி அடிப்படைத் தகுதியாக உள்ளது. இதனால் தமிழர்களுக்கும் இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிறருக்கும் வேலை உரிமை மறுக்கப்படுகிறது. எனவே, இதனை மாற்ற வேண்டும். அதற்கு ஒன்றிய அரசின் அலுவல் மொழியாகத் தமிழும் ஆக்கப்பட வேண்டும்.
இந்தியைத் தேசியமொழியாகவும் பெரும்பான்மையர் பேசும் மொழியாகவும் தகவல் திரிப்பு செய்வோரைத் தண்டனைக்குரியவர்களாக அறிவிக்க வேண்டும். அத்தகையோருக்குத் தண்டனை வழங்கத் தவறக் கூடாது.
வாய்ச்சொல்லில் வீரராக இல்லாமல், மக்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்லறிஞர்களாகத் திகழ, நமக்குத் தேவை தாய்மொழிவழிக் கல்வியே! எனவே, எல்லா நிலைகளிலும தாய்மொழியாம் தமிழ் வழிக்கல்வியே திகழ வகை செய்ய வேண்டும்.
ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே மொழிப்பாடமாக இருக்க வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம் கற்றுத்தரப்பட வேண்டும். .பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் பிற மொழிக்கல்வியில் தொடக்கநிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண்களைத் தொடக்கதிலிருந்து தமிழைப் படிக்கும் பாடத்திட்டத்திற்கு இணையாகக் கருதக் கூடாது. பன்னிரண்டாம் வகுப்புவரை யாவரும் தமிழைக் கற்றே ஆக வேண்டும் பிற மொழிக் கல்வியைக் கற்றால் கூடுதல் கல்வியாகத்தான் கருதவேண்டும். இவ்வாறு நடைமுறைப்படுத்தினால்தான் பள்ளிகளில் இருந்து இந்தியை ஒழிக்க முடியும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் இந்தித்திணிப்பைத் தடுக்க முடியும்.
இவ்வாறு எங்கெல்லாம் இந்திப் பயன்பாடு இருக்கிறதோ அங்கெல்லாம் இந்திப் பயன்பாட்டை நிறுத்துவதுடன் அது நுழையும் வாயிலையும் அடைக்க வேண்டும். இந்தி நமக்குப் பகை என்பதை உணர்த்தும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்தியும் பிறமொழிகளை ஈர்த்து உருவாக்கப்பட்ட புனைவு இந்தியும் பேசப்படும் மாநிலங்கள் எட்டு மட்டுமே. பிற மொழிகளைத் தாய்மொழியாக உள்ள மாநிலங்கள், ஒன்றியங்கள் மொத்த எண்ணிக்கை 36 பிற மொழி மாநிலங்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாகப் பேசப்படும் இந்திக்காகப் பிறமொழி அனைத்திற்கும் செலவழிக்கும் தொகையைவிடப் பன்மடங்கு செலவழிக்கும் அநீதியைத் துடைக்க வேண்டும்.
அதே போல் பத்தாயிரம் அளவில் பேசப்படும் சமற்கிருத மொழிக்குப் பல ஆயிரம கோடி செலவழிப்பதையும் நிறுத்த வேண்டும்.
இத்தொகைகளெல்லாம் பிற மொழிகளுக்கு மொழி பேசுநர் எண்ணிக்கை அடிப்படையிலும் மொழியின் வளத்தின் அடிப்படையிலும் பிரித்து ஒதுக்க வேண்டும்.
தமழ்நாட்டிலுள்ள இந்திப்பரப்புரை அவையை– இந்திப்பிரச்சார சபையை — இழுத்து மூட வேண்டும்.
இவ்வாறெல்லாம் செய்தால்தான் இந்தித்திணிப்பு என்பது இல்லாமல் போகும்.
எனவே, அரசும் கட்சிகளும் அமைப்புகளும் மக்களும் தங்களால் இயன்ற வகைகளில் எல்லாம் இந்தி நுழைவைத் தடுக்க வேண்டும். இந்தியை எதிர்த்து உயிர் நித்தவர்களையும் சிறைப்பட்டவர்களையும் வதைப்படடவர்களையும் நாம் மதிக்கிறோம் என்றால் இந்தியைத் தடுத்திடுவோம்!.தமிழ்மொழியை வளர்த்திடுவோம்!
இந்தி எதிர்த்திட வாரீர் — நம்
இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்! – பாவேந்தர் பாரதிதாசன்
- இலக்குவனார் திருவள்ளுவன்








Leave a Reply