1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 1 : தொடர்ச்சி)
இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் நிவேதிதா உலூயிசு எழுதிய
‘1938 முதல் மொழிப்போரில் பெண்கள்’ நூலாய்வு 2
இந்தி எதிர்ப்பு, பெரியார், தன்னாட்சி வருமாயின் தன்மொழியும் வேண்டாவோ, தமிழ்நாடு தமிழருக்கே ஆகிய நான்கு அம்மானைப்பாடல்களுடன் நூலைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டுரையான அறிமுகத்தில் இவற்றைக் காணலாம்.
வீட்டுச் சிறையில் இருந்த பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டக்களத்தில் இறங்கிச் சிறை புகுந்ததை இந்நூல் கூறுகிறது. உலகெங்கும் வாக்குரிமை, அதிகாரம், சம ஊதியம் தொடர்பில் ஏற்பட்ட பெண்கள் எழுச்சியையும் தமிழ் நாட்டில் மொழி காக்க எழுந்த பெண்கள் எழுச்சியையும் விளக்குவதைக் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகளில் கட்டாய இந்திப்பாடம் 21.04.1938 ஆம் நாளிட்ட அரசாணை மூலம் புகுத்தப்பட்டது. அதற்கு முன்பே 24.08.1937 இல் தஞ்சையில் முதல் இந்தி எதிர்ப்புக் குரல் எழுந்ததைக் குறிப்பிடுகிறார்.
இக்கட்டுரை இந்நூலின் செய்திகளின் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது.
போராட்டக் களத்தில் பெண்கள் பங்கேற்பு குறித்து இரண்டாவது கட்டுரை விளக்குகிறது.
முதன்முறையாகக் கைதாகிச் சிறை சென்றவர் பெரியார் ஈ.வெ.இராமசாமியின் தங்கை சா.இரா.கண்ணம்மாள் என்பதைக் குறிப்பிடுகிறார். 24.10.1937 இல் இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்று தலையங்கம் எழுதியதால் பெரியாரும் பதிப்பாளர் என்ற முறையில் தங்கை கண்ணம்மாவும் தண்டிக்கப் பெற்றுள்ளனர். இவர், புரட்சி, குடியரசு ஆகிய இதழ்களின் பதிப்பாசிரியராக இருந்தார்.
பேராயம்பட்டுத் தோழர் டி.இரங்கம்மாள், 28.01.1938 ஆம் நாளிட்ட ‘புரட்சி’ இதழில், “திருவண்ணாமலை இரகசியம்- பார்ப்பனர்களின் கொண்டாட்டமும் பாமரர்களின் திண்டாட்டமும்” என்னும் கட்டுரையில் திருவண்ணாமலை தீபத்தின்பொழுது பெண்கள்படும் இன்னல்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளார். பெண்கள் பொதுவெளிக்கு வருவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்தே பெரியார் இயக்கம் நடத்தும் கூட்டங்கள், மாநாடுகளில் பெண்களுக்கென்று தனியிடம் ஒதுக்கப்பட்டது. பல மாநாடுகளில் பெண்களின் தலைமையுரை, தொடக்கவுரை, மாநாட்டுத்திறப்புரை, எழுச்சியுரை முதலியவை இடம் பெற்றமையை இக்கட்டுரையில் விளக்குகிறார். நீலாம்பிகை அம்மையார், காந்தி பெண்களின் நிலையை உணராமையைக் குறிப்பிட்டுச் சாடியுள்ளமையை எடுத்துரைக்கிறார்(புரட்சி 04.02.1938).
மூன்றாம் கட்டுரையில் நீலாவதி அம்மையார் காந்தியடிகளிடம் கேட்ட கேள்விகள் குறித்து எழுதியுள்ளார். காந்தியடிகளின் மதவாதப்போக்கிற்கு எதிராகக் கேள்விகள் கேட்ட அவர், அவரது அறிவுரையால் தேசத்தொண்டிலும் அடி எடுத்து வைத்தார். குமுக நீதிக்கும் தன்மதிப்பிற்கும் சான்றாக நீலாம்பிகை அம்மையார் விளங்கியதை இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.
போராட்டத்துக்கு உரமிட்ட தலைவர்களை நான்காம் கட்டுரையில் விளக்குகிறார். தமிழர் கழகம் அமைப்பின் தொடக்க விழாவில்(04.09.1938) தலைமையுரையாற்றிய மீனாம்பாள் சிவராசு, பெரியாராலும் அண்ணாவாலும் பாராட்டப்பெற்ற ‘அன்னை’ இதழின் ஆசிரியர் சத்தியவாணிமுத்து, 01.09.1938 இல் நடைபெற்ற மாதர் சங்கப் பொதுக் கூட்டத்தில் பண்டிதை நாராயணி அம்மையார் அமிழ் பாதை ஊர்தி(டிராம்), பேருந்து முதலியவற்றில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் இருப்பதைத் தமிழுக்கு மாற்ற வேண்டும் என்னும் தீர்மானம், 03.09.1938 அன்று தோழர் பார்வதி அம்மையார் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட இந்தி எதிர்ப்பு ஊர்வலம், 09.09.1938 அன்று சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் நடைபெற்ற தோழர் மீனாம்பாள் சிவராசு தலைமையிலான பெரும் இந்திஎதிர்ப்புப் போராட்டம் முதலிய பல போராட்டங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
1938 பெண்கள் மாநாடு முதல் அறிவிப்பு குறித்து ஐந்தாம் கட்டுரை விளக்குகிறது.
இவ்வறிவிப்பின் மூலம் இதுவரை சலசாட்சி, சரசுவதி, புட்பவதி ஆகிய பெண் தலைவர்களின் பெயர்கள், தாமரைக்கண்ணம்மையார், கலைமகளம்மையார், மலர் முகத்தம்மையார் எனத் தனித்தமிழ்ப் பெயர்களாக மாறியமையைச் சுட்டிக் காட்டுகிறார்.
பெண்கள் மாநாட்டுக்குத் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரைத் தலைவராக்கியது தமிழ் இயக்க மக்களை ஒரு குடையின் கீழ் ஒன்று திரட்ட உதவும் என வீரத்தமிழன்னை தருமாம்பாள் கணக்கிட்டது மிகச் சரியானது என்கிறார். எனவேதான் இந்தி எதிரப்பு என்பது வெறும் இந்தி எதிர்ப்பாக மட்டுமல்லாமல் தனித்தமிழ்க்காப்பாகவும் சிறந்து விளங்கியது.
தோழர் பார்வதியம்மாள் மூவேந்தர் கொடியின் தொன்மை, சிறப்பு ஆகியவற்றை விளக்கி, தமிழ் மக்கள் தமிழ்க்கொடியை ஏற்ற வேண்டிய இன்றையமையாமையையும் வலியுறுத்தி, தமிழ்க்கொடியை ஏற்றி வைத்தார். தமிழர் இயக்கம் வகுப்புவாதமற்றது என்பதை இராசகோபாலாச்சாரி புரிந்துகொள்ள வேண்டும் என்றவர், தமிழர்கட்கு, தமிழ்நாட்டிற்கு வெற்றி வெற்றி என்று வலுத்த கைதட்டுதலுக்கிடையே தமிழ்க்கொடியை ஏற்றியுள்ளார்.
சிலர் திரு.வி.க.விற்கு எதிராகக் குரல் எழுப்பியதையும் அதற்கு அவர் தக்கவிடையிறுத்ததையும் பதிந்துள்ளார். பெண்கள் மாநாட்டிற்காகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்தமையை விளக்கி இதன் சிறப்பான ஒழுங்கு முறையைப் பாராட்டியுள்ளார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
தை 25, 2057 / 07.02.2026 அன்று தமிழ்க்காப்புக் கழகத்தின் ஆளுமையர் உரையின் பொழுது ஆற்றிய நூலுரை







Leave a Reply