தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பியமும் பாணினியமும்
2
பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள்
எட்டு அத்தியாயங்களை உடைய நூல் என்னும் பொருளில் பாணினி தன் நூலுக்கு அட்டாத்தியாயி என்று பெயர் வைத்தார். தமிழில் அட்டம் என்றால் எட்டைக் குறிக்கும். எட்டுபோல் காலைக் குறுக்கே மடக்கி அமர்வதை அட்டக்கால் என்று இன்றும் கூறிவருகிறோம். தமிழ் அட்டத்திலிருந்து வந்ததே சமற்கிருத அசுட்டம். எனவே, எட்டு அத்தியாயங்களைக் கொண்டது என்னும் பொருளில் அட்டகம் என்றும் கூறுகின்றனர். இதனைத் தமிழில் வேறுவகையில் குறிப்பிடுவதானால் எண்(8) இயல்கள் பகுக்கப்பட்டுள்ள நூல் என்ற பொருளில் எண்ணியல் என்றும் சொல்லலாம். இங்கே எண் என்பது எட்டு என்னும் இலக்கத்தைக் குறிப்பிடுவதே. ஒவ்வோர் அத்தியாயமும் 4 உட்பிரிவுகளை உடையது. மொத்தம் கிட்டத்தட்ட 4000 சூத்திரங்களை உடையது எனச் சொல்லப்பட்டாலும் இதில் 3,959 சூத்திரங்களே உள்ளன.
. ஒவ்வோர் அத்தியாயத்திலும் விளக்கவெடுத்துக் கொண்ட தலைப்பு, அத்தியாயங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வகைமுறை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வோர் அத்தியாயத்திலும் காணப்படும் சூத்திரங்களின் எண்ணிக்கை வேறுபடும். அவை வருமாறு:
அட்டாத்தியாயி சூத்திர எண்ணிக்கை
இயல் எண் | முதல் பிரிவு | இரண்டாம் பிரிவு | மூன்றாம் பிரிவு | நான்காம் பிரிவு | மொத்தம் |
1 | 75 | 73 | 93 | 110 | 351 |
2 | 72 | 38 | 73 | 85 | 268 |
3 | 150 | 188 | 176 | 117 | 631 |
4 | 178 | 145 | 168 | 144 | 635 |
5 | 176 | 146 | 119 | 160 | 601 |
6 | 223 | 199 | 189 | 175 | 736 |
7 | 103 | 118 | 120 | 97 | 438 |
8 | 74 | 108 | 119 | 68 | 369 |
ஆக மொத்தம் | 4029 |
இஃது அதிகமாகக் கூறப்படும் எண்ணிக்கை. 5 ஆம் பிரிவில் 555 சூத்திரங்கள் உள்ளன என்றே பெரும்பான்மையர் கூறுகின்றனர். இதன்படி 3983 நூற்பாக்கள் உள்ளன என்றாகிறது. ஆனால், பழைய கணக்குப்படி 3959 நூற்பாக்கள்தாம் உள்ளன. பிற இடைச்செருகல்களே!
பாணினியத்தின் சூத்திரங்களோடு இணைந்தமையாத ஆனால், அச்சூத்திரங்களைப் புரிந்து கொள்ள இன்றியமையாதவையாகக் கருதப்படும் . தனித்தனியாக அமைந்துள்ள, சில துணை நூல்கள் வருமாறு (1)சிவசூத்திரம் (2) தாதுபாடம் (3) கணபாடம் (4)உணாதிசூத்திரம் (5) பிட் சூத்திரம் (6) (இ)லிங்கானு சாசனம் (7) சிட்சா. இந்நூல்களின் ஆசிரியர் பாணிணியா அல்லது வேறு ஒருவரா என்று முடிவாக எதுவும் கூறமுடியாதபோதிலும் பாணினியின் இலக்கணத்தோடு இவற்றுக்குள்ள நெருங்கிய தொடர்பு பற்றியோ அவ்விலக்கணத்தை எளிதில் புரிந்து கொள்ள இந்நூல்களின் அவசியத்தைப் பற்றியோ எந்தவிதக் கருத்து வேறுபாடோ சந்தேகமோ இல்லை. (முனைவர் கு . மீனாட்சி)
தொல்காப்பியம் எழுதிய நூல் தொல்காப்பியம் எனப் பெயர் பெற்றது என்று ஒரு சாராரும் தொல்காப்பியத்தை எழுதியமையால் தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றார் என ஒரு சாராரும் கருதுகின்றனர்.தொனமையான காப்பியக்குடியில் பிறந்தவர் என்பதால் தொல்காப்பியன் > தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றார் என்பர். காப்பிக்காடு என்னும் ஊரில் பிறந்ததால் இப்பெயர் பெற்றார் என்றும் சொல்வர். தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான ‘வினைமுதல் உரைக்கும் கிளவி’ என்பதற்குத் ‘தொல்காப்பியம்’ என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) சிறப்புப் பாயிரத்தில் ‘தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி’எனப் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். எனவே, தொன்மையைக் காத்து இயம்புவதற்காகப் புனை பெயராக தொல்காப்பியன் எனத் தன் பெயரை வைத்துக் கொண்டார் எனலாம்.
பாணின் என்பவின் மகன் அல்லது பணின் என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் எனப் பலவைகாயக் கூறுகின்றனர். தாட்சி என்பவரின் மகன் என்பதால் தாயின் பெயரால் தாட்சிபுத்திர என்றும் கூறுகின்ற்னர். சாலாதூர என்ற ஊரில் பாணினி பிறந்ததால் சாலாதூர அல்லது சாலாதூரீய என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வூர் இப்போது பாக்கித்தானில் உள்ள இலாகூர் பகுதியாக இருக்கும் என்கின்றனர்.
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply