(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 43/69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

44/69

 

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

ஆறாவது கட்டுரை அசுவகோசரின் புத்தசரிதம் குறித்தது.

அசுவகோசர் சமற்கிருதத்தில் எழுதிய 28 காண்டங்கள் கொண்ட புத்த சரிதத்தில் இப்பொழுது 14 காண்டங்கள்தாம் கிடைக்கின்றன. எஞ்சிய பதினான்கும் சீன, திபேத்திய மொழிகளில் மட்டும் கிடைப்பதால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இந்நூலில் புத்த சமயம் புறக்கணித்த மகாபாரத, இராமாயணக்கதைகள் பெரிதும் சுட்டப்படுகின்றன. ஒழுக்கத்திற்குத் தலையாய இடம் தரவேண்டுமென்ற புத்தரின் வரலாற்றில் பல இழிகாம(ஆபாச)க்கதைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. கண்டிக்கப்பட வேண்டிய, பிறன்மனை நயந்த கயவர்களெல்லாம் பெரியோர்களாகப் பேசப்படும் கதைகள்  பின்பற்றப்படவேண்டிய சான்றுகளாகக் காட்டப்படுகின்றன. புத்தர் காலத்திற்குப் பிற்பட்டது இராமனின் காலம் எனஅயோத்திதாசர் முதலானவர்கள் நிறுவியுள்ளனர். ஆனால், இராமாயணப்பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் புத்த சரிதத்தில் இடம் பெறுகின்றன.

அமரபாலி என்னும் பரத்தைக்குக் கெளதமர்  அறிவுரை கூறும் காண்டத்தில் புத்தத்திற்கு எதிராகப் பெண்களை இழித்துப் பேசும் கருத்துகள் உள்ளன. பெண் அனித்தியமானவள்,பாம்பைப் போன்று துன்பம் தருபவள், தன்னுணர்வு அற்றவள், தூய்மை கெட்டவள், இளம்பெண் அறநெறி யற்றவள், என்பனபோன்ற பல கருத்துகள் சொல்லப்படுகின்றன. மனுநீதி முதலான பின்வந்த சமற்கிருத நூல்களில் உள்ளவை எல்லாம் இதில் காணப்படுகின்றன. புத்தரைப் பிராமண மதகுருபோல் பல இடங்களில் காட்டுகிறார். இவ்வாறாகப் பலவற்றையும் எடுத்துக் கூறுகிறார் பேரா.ப.ம.நா. வேசப்பிராமணர்கள் எழுதியவற்றைப் பொய்வரலாறு என நீக்க வேண்டும் என அயோத்திதாசரின் ‘ஆதிவேதம்’ கூறுவதுபோல்   அசுவகோசரின் புத்தசரிதமும் நீக்கப்படவேண்டியதே என்கிறார்.

‘புத்தசமய வடமொழி நூல்கள்’ என்பது ஏழாம் கட்டுரையின் தலைப்பு.

சாதகமாலா, சுபசிதா, பாரமிதாசமாசா, மகா வத்து, இலலித வித்தரா, நிதானகதா, புத்தானுசுமிருதி, தேததானுசுமிருதி, உலோகானந்தா, நாகானந்தா, சிசுயலேக தருமகாவியா முதலான நூல்களைப்பற்றி இக்கட்டுரையில் காணலாம். பல நூல்கள் புத்தசமயக் கலப்பு சமற்கிருத(Buddhist Hybrid Sanskrit) மொழியில் எழுதப்பட்டவை. எல்லாம் இடைச்செருகல்கள் கொண்டவை; புத்த நெறிக்கு மாறான கருத்துகளைக் கூறுபவை. புத்த சமய இலக்கியங்களில் வடமொழியில் உள்ளவையும் வடமொழிக்கலப்பு மொழிகளில் உள்ளவையும் பலவாயினும் அவற்றில் ஒன்றும் மணிமேகலைக்கு ஈடாகாது என்கிறார் பேரா.ப.ம.நா. மேலும், புத்தசமய இலக்கியங்கள் அக்காலக் குமுகாய வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவதில் பெறும் வெற்றியைப் பிராமண இல்க்கியங்கள் பெறவில்லை. அறத்தையோ மெய்ப்பொருளையோ கவிதை ஆக்கும் கலையைச் சமற்கிருத நூலார் அறிந்திலர் என்பதற்கு எல்லா நூல்களுமே சான்றாகின்றன.

எட்டாம் கட்டுரை அவதான சகம் குறித்தது. இந்நூல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் கலப்பு சமற்கிருத மொழியில் எழுதப்பட்டது. இதில் பத்துப்பத்துக் கதைப்பிரிவுகளைக் கொண்ட நூறு கதைகள் உள்ளன. ஒவ்வொன்றின் தொடக்கம், முடிவுகளில் ஒரேமாதிரியான தொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன.உரையாடல்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் பொருத்தமாகவும் அமைந்துள்ளன. எனினும் இலக்கியத்தரமற்றவையாக உள்ளன. இக்கதைகளுள் பல சிற்சில வேறுபாடுகளுடன் பாலி மொழியில் உள்ளன.

கவிதையிலும் உரைநடையிலும் சொல்லப்படும் அவதானங்களை அடக்கிய பகுதிகள் பல இருப்பினும் அவை யாவும், குறிப்பிடத்தக்க சிறப்பு எதுவும் பெறவில்லை. எனவே, சமற்கிருத இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இவற்றைப் பட்டியலிடுவதில்லை. ஆகவே, இந்நூலும் செவ்வியல் இலக்கியத்தரமற்றது எனத் தனியே கூறவேண்டிய தேவை இல்லை அல்லவா?

தமிழிலும் இந்தோ ஆரிய மொழிகளிலும் குறிப்பு எனும் உத்தி எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதை ஒன்பதாம் கட்டுரை விளக்குகிறது.

சங்கப்பாடல்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்திருக்கக் காரணம் அவை கையாளும் உத்திகளே. அவற்றில் ஒன்று மேலையோரால் குறிப்பு(Suggestion) என்று அழைக்கப் பெறுவதும் ஒன்று. சமற்கிருத நூல்களுடனும் பிற மொழி நூல்களுடனும் தமிழ்ச்சங்கப்பாடல்களை ஒப்பிட்டு, குறிப்பால் பொருள் உணர்த்துவதில் சங்கப்புலவர்களுக்கு ஈடானவர் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை என்று பன்மொழி யறிஞர் சியார்சு ஆர்த்து கூறியுள்ளதைப் பேரா.ப.ம.நா. சில பாடல்களை எடுத்துக்காட்டாகக் கூறி இக்கட்டுரையில் விளக்கியுள்ளார். இத்தகைய குறிப்பு உத்தியைத்தான் தொனி என ஆனந்தவருத்தனர் தமது ‘தொனிலோகம்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.அதற்குச் சமற்கிருதப் பாடல்களையும் சான்றாகத் தருகிறார். ஆனால், அவை யாவற்றையும் விடச் சங்கப்பாடல்களே  தொனிக்கு எடுத்துக் காட்டாகும் என்று மேலை அநிஞர் நிறுவக் காணலாம்.

சமற்கிருத இலக்கியம் அறிந்தோர், அவற்றில் குறிப்பும் படிமமும்(suggestion and symbolism) கவிதை யுத்திகளாகச் சிறப்பாகக் கையாளப்படவில்லை யென்பதை அறிவர் என்று சியார்சு ஆர்த்து கூறுவதை எடுத்துக்காட்டாகத் தருகிறார். சமற்கிருத, பிராகிருத இலக்கியங்களில் இடம்பெறுவதற்கு முன்னரே தமிழில் இடம் பெற்றுள்ளமையால் தமிழ் இலக்கியங்களில் இருந்தே வடமொழி இலக்கியங்களுக்கு இவை சென்றன என்பதே வரலாற்று உண்மை.

தமிழின் உட்பகைவர்கள் ஏற்கெனவே இவ்வுத்தி வடநூல்களில் கையாளப்பட்டுள்ளது என்று அறியாமை காரணமாகவும் கவிதையுணர்வு இல்லாமையாலும் கூறுவதற்கு விடையாக அமையும் வண்ணம் தக்க எடுத்துக்காட்டுப் பாடல்கள் மகாபாரதம், இராமாயணம், புத்த சரிதம் ஆகியவற்றிலிருந்து தரப்படுகின்றன.

சங்கப்பாடல்களில் இறைச்சி, உள்ளுறை மூலம் காட்டப்படும் பொருள்கள் பலவாய் இன்பம் தரக்கூடிய அளவில் உள்ளன. வடமொழி நூல்களில் அத்தகைய பாடல்களைக் காண முடியாது. அவற்றில் காணப்பெறும் வருணனைகளின் செயற்கைகத்தன்மையும் வலிந்து பொருள் கொள்ள வேண்டிய நிலைமையும் நகைப்பிற்குரியன, நயம் பாராட்டத்தக்கன அல்ல என்றும் அந்தப் பன்மொழி அறிஞர் நன்கு விளக்கியுள்ளார்.

தமிழ் அகக்கவிதை மரபுகளும் அணிகளும் இந்தோ ஆரிய மொழிகளில் முதன்முதலாகத் தோற்றம் தருவது சத்தசாயி நூலில்; இது எழுதப்பட்ட மகாராட்டிர மொழி தெற்கத்திய பிராகிருதம் எனப்படும்; இவ்வாறு ஆர்த்து தெரிவிப்பதன் அடிப்படையில், தமிழ்க்கவிதை மரபு மகாராட்டரி பிராகிருதம் மூலமாகக் காளிதாசனுக்கும் பிற வடமொழிக் கவிஞர்களுக்கும் சென்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

சத்தசாயி மூலம் வடமொழியில் நுழைந்த தமிழ்க்கவிதை மரபைக் காளிதாசன் முழுக்க முழுக்கப்பயன்படுத்திக்கொள்கிறான் என்பதற்கு ஆர்த்து பல சான்றுகளை அளித்துள்ளார். சத்தசாயியில் இடம் பெறும் வருணனைகளில்கூடக், குறிப்பு, தமிழ் அகஇலக்கியங்களைப் போன்று அவ்வளவு நுட்பமாகக் கையாள்படவில்லை என்பதையும் அவர் தெரிவிக்கிறார். காளிதாசன் தமிழ் அகமரபின் தாக்கத்தைப் பெற்றதற்கும் சான்றுகள் தரப்படுகின்றன.

சமற்கிருத அறிஞரான ஆர்த்து, கிரேக்கம், இலத்தீன் போன்ற செவ்வியல் இலக்கியங்களையும கற்றவர்; சங்கப்பாடல்களுடன் ஒப்பிட்டு, இன்றைய மொழிகளிலும் பிற செவ்வியல் மொழிகளிலும் உள்ள பாடல்களெல்லாம் எவ்வாறு தரத்தால் தாழ்ந்தவை என மெய்ப்பித்துள்ளார். இதனை நமக்குத் தெரியச் செய்வதன்மூலம் பேரா.ப.ம.நா., தரந்தாழ்ந்த இலக்கியங்கள் உள்ள சமற்கிருத மொழியை எவ்வாறு செம்மொழியாகச் சொல்ல இயலும் எனச் சொல்லாமல் சொல்கிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 45/69)