அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்!

முகநூலில்  சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில் சொல்லாக்கக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை சொற்பெருக்கத்திற்குத் துணை நின்று தமிழ் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இப்பொழுது புதியதாக ஒரு குழுவும் இணைந்துள்ளது. அது கலைச்சொல்லாக்கம் தொடர்பான பல கருத்துகளைத் திரட்டித் தரும் நற்பணி புரிகின்றது. ஆனால், இதன் மூலம், தமிழ்ச்சொற்களை மட்டுமே பயன்படுத்தும் அறிவியல் புலமை உள்ளவர்களும் இன்றைக்கு ஒலி பெயர்ப்புச் சொற்களை இறக்குமதி செய்ய விரும்பும் வேதனையான நிகழ்வு நடைபெற்றுவருகிறது.

ஒலி பெயர்ப்புச் சொற்கள் அயற்சொற்களின் தமிழ் வடிவம் என்ற உண்மையை வெளிப்படுத்தித்தான் அறிமுகப்படுத்தப்படவேண்டும். உரிய தமிழ்ச்சொற்கள் உருவாகும் பொழுது இவை அகற்றப்பட வேண்டும். 

தமிழில் கலந்து விட்ட அயற்சொற்களைத் தமிழ் என்றே நம்பிப் பலரும் பயன்படுத்துகின்றனர். இது குறித்து விழிப்படைந்து வருபவர்களிடம் ஒலி பெயர்ப்புச் சொற்களைத் தமிழ்ச்சொற்களாகக் காட்டினால் தமிழ் எங்ஙனம் வளரும்? என்னிடம் ஆசிரியர்களே ஒன், டூ  முதலிய ஆங்கில எண்ணுப்பெயர்களைத் தமிழ் என்றும் டவுன், பீரோ முதலான ஆங்கிலச் சொற்களைத் தமிழ் என்றும் கருதிப் பேசியுள்ளார்கள். அப்படி என்றால் மாணாக்கர்கள், பொதுமக்கள் நிலை என்னவாறு இருக்கும் எனப் புரிந்து கொள்ளலாம்?

அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களிலேயே இத்தகைய தடுமாற்றம் இருக்கும் பொழுது அறிவியல் சொற்களில் ஒலி பெயர்ப்புச் சொற்களைத் தமிழ்ச்சொற்கள் போல் பயன்படுத்தித் தமிழ்மயமாக்குவது மிகப் பெருந் தவறல்லவா?

ஒலி பெயர்ப்பு குறித்து நான் இப்பொழுதுதான் தெரிவிக்கிறேன் என்று எண்ணக்கூடாது. இதற்கு முன்னர்க் கருத்தரங்கங்கள் மூலமும் கூட்டங்கள் மூலமும் கட்டுரைகள் மூலமும் தெரிவித்துள்ளேன். கணிப்பித்துறையில் இடம் பெறும் ஒலி பெயர்ப்புக்கேற்ற தமிழ்ச்சொற்களைக் குறிப்பிட்டு அத்துறையிலும் ஒலி பெயர்ப்புச் சொற்கள்  கோலோச்ச இடம் தரக் கூடாது எனத் தெரிவித்துள்ளேன்.

“ஒலிபெயர்ப்பில் சீர்மை நிலவுவதற்காகவும் தனிப்பட்டவர்கள் இது தொடர்பில் தத்தம் விருப்பம்போல் முடிவெடுப்பதை நிறுத்துவதற்காகவும் தமிழக அரசு உடனே தமிழுக்கான ஒலி பெயர்ப்பு வரையறைக் குழுவை அமர்த்திச் சீரான ஒலி   பெயர்ப்புகளுக்கான ஆணையைப் பிறப்பிக்க” அரசிடம் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியுள்ளோம்(2014, 2015).

தமிழ்ப்பல்கலைக்கழகத்திடம் பொறுப்பை ஒப்படைக்கலாமா எனக் கேட்டு அவ்வாறே  குழு ஒன்று அமைப்பதாகவும் அரசில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில சூழல் மாற்றங்களால் அது தடைப்பட்டு விட்டது.

எனவே, ஒலி பெயர்ப்புச் சொற்கள் தொடர்பான நல்லறிஞர்கள் கருத்துகளுக்கிணங்க நானும் அதனை வலியுறுத்துவதால் என் நம்பிக்கையே ஒலி பெயர்ப்புச் சொற்களின் பரவலாக்கம் தமிழுக்குக் கேடு தரும் என்பதுதான். அதற்கிணங்கவே நான் கருத்தைத் தெரிவித்துள்ளேன்.

பல்வேறு விளக்கங்களுக்காகவும் கருத்தில் கேட்கும் ஐயங்களுக்காகவும் நானும் பதிய எண்ணுவேன். நேரம் இருப்பதில்லை. பொதுவாக யாரேனும்  சரியாக மறுமொழி அளிப்பார்கள் என்று நம்பும் சூழல்களில் நான் எதுவும் தெரிவிப்பதில்லை. சான்றாகத் தனிக்குறில் அடுத்து ‘ ர் ‘ வரக்கூடாது என்பதைப் புரிந்து கொள்ளாமல் சொல்லின் இடையே ‘ ர் ‘ வரும் சொற்கள் தமிழல்லவா என்னும் தொனியில் ஒருவர் கேட்டிருந்தார். பேரா.தெய்வசுந்தரம் இதற்கு உரிய விடை யளித்திருந்தார்.  எனவே, நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. மேலும் என் கணிப்பொறியில் , முகநூலில் நேரடியாகப் பதிய இயலாமல் வேறொரு தளத்தில் பதிந்து படி எடுத்து ஒட்ட வேண்டும் என்பதனாலும் என் பின்னூட்டங்கள் குறைவாகத்தான் இருக்கும்.

ஆதலின், பின்வரும் இரு பின்னூட்டக் கருத்துகளைத்தான் அம்முகநூல் குழுவில் பதிந்துள்ளேன்.

14.05.2020 : ஒலி பெயர்ப்புச் சொற்களையும் ஒலித்தழுவல் சொற்களையும் அவ்வாறே குறிப்பிட்டு இடைக்காலமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அவற்றைப் புதுச் சொல்லாக்கம் எனக்கூறி மக்களை ஏமாற்றக் கூடாது.

17.05.2020 : ஒலி பெயர்ப்புச் சொற்களைக் கலைச்சொற்களாக ஏற்பது தமிழ்க்கலைச்சொல் பெருக்கத்திற்கு உதவாது

 என் கலைச்சொற்கள் கட்டுரைகள் சிலவற்றை அதில் பகிர்ந்தேன். ஆனால், கலைச்சொற்கள் தேவையில்லை, அது குறித்த ஆய்வுதான் நோக்கம் என்றதால் அதனை நிறுத்தி விட்டேன்.

தமிழில் பெரனி, அலுமினியம், கோப்பை, திசு, போத்தல், ஈப்பு முதலான பல சொற்கள் ஒலி பெயர்ப்பு அடிப்படையில் தமிழ் வடிவமாக்கப்பட்டுத் தமிழ்ச் சொற்கள் என்றே மக்கள் நம்பும் வகையில் பயன்பாட்டில் உள்ளன. சிலர் ஒலி பெயர்ப்புச் சொற்களை எல்லாம் நல்ல தமிழ்ச்சொற்கள் என ஊடகங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். தமிழல்லாதவற்றைத் தமிழ் என்று நம்ப வைத்துப் பின்னர் அவை தவறு எனத் தெரிவது ஏமாற்றம் தருவதல்லவா? இதனைத்தான் ஏமாற்றக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தேன்.

எனினும் சிறுபான்மையர் வாக்கு எண்ணிக்கையில் ஒலி பெயர்ப்புச் சொற்களை ஏற்பது தவறு எனச் சுட்டிக்காட்டுவதற்காக நான் குழுவாட்சியர் ஏற்பிற்கான பதிவில் என் கருத்தைத் தெரிவித்தேன். பொதுவாக வெளியிட வேண்டும் என்றால் பின்னூட்டத்திலேயே தெரிவித்திருப்பேன். அவர் ஏற்பதாக இருந்தால் வெளியிட்டு அவர் கருத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றுதான் அவருக்கு அனுப்பினேன். அவற்றுள் சில வருமாறு :

“குழுவாட்சியர் மீது மதிப்பும் அன்பும் உள்ளவன்; பல நேரங்களில் அவரது விரிந்த புலமையை அறிந்து வியந்து மகிழ்கின்றவன் நான். கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற அவரது உறுதியும் பிறருக்கு வழிகாட்டும் முயற்சிகளும் பெரிதும் பாராட்டிற்குரியன. ஆனால், அதனாலேயே அவரது எல்லாக் கருத்துகளும் ஏற்கத்தக்கனவாக இருக்க வேண்டும் என்று இல்லை. அவர் சில வகைச் சொற்களைத் தமிழில் குறிக்காமல் அவ்வாறே எழுத வேண்டும் என்பார். இதில்தான் நான் அவரிடமிருந்து வேறுபடுகிறேன். அவர் தனிமங்கள்பற்றிச் செந்தரப்படுத்துதல் என்று குறிப்பிட்டு எழுதுவது ஏற்கத்தக்கது அல்ல. இதனை அவரின் ஒப்பாய்வுக் கட்டுரை என்று சொல்லாம்; அந்த வகையில் வெளியிடலாம். மாறாக அவரது கருத்தைச் செந்தரப்படுத்துவதாகக் கூறுவது தவறு. அதுவும் ஒலிபெயர்ப்புச் சொற்களை வாக்குகள் அடிப்படையில் முடிவெடுப்பது தமிழுக்குப் பெருங்கேடு விளைவிக்கும். நம் முன்னோர் பின்பற்றிய வழியில் ஒலி பெயர்ப்புச் சொற்களை அமைக்க வேண்டும். “

“குழுவாட்சியர் சில வகைச் சொற்களை ஒலிபெயர்ப்பில்தான் குறிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். எனவே, இதிலே நல்ல தமிழ்ச்சொற்கள் இருப்பினும் அவற்றைப் புறக்கணித்துத் தன் பரிந்துரையாக ஒலிபெயர்ப்புச் சொற்களையே கூறுகின்றார். இவ்வாறு தனிப்பட்டவர் இம்முயற்சியில் இறங்குவது ஒருதலைச் சார்பாகத்தான் இருக்கும். பொதுவான பல்கலைக்கழகம் அல்லது அரசு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளுக்கு நாம் துணை நிற்கலாம். “

“எனவே, யார் வேண்டுமென்றாலும் ஒப்பாய்வு முறையில் சொல்லாக்கக் கட்டுரைகளை அளிக்கலாம். இதுதான் உண்மையான நடைமுறையுமாகும்.  ஆனால், அவற்றைச் செந்தரமாக்கப்பட்டன என்பது கலைச்சொல்லாக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பதை உணர வேண்டும்.

எனவே, இனிமேல் ஒப்பாய்வுக் கட்டுரை அல்லது கருத்து என்ற முறையில் வெளியிட வேண்டுகிறேன். “ இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

இவற்றுள் என்ன தவறு? ஆனால், இவற்றிற்கான மறுமொழி அவரிடம் இன்மையால் இதனை வெளியிடவில்லை.

மேலும் குழு உறுப்பினர்களின் தன்னறிமுகத்தை வெளியிட்டு வந்தமையால் என்னைப்பற்றிய கலைச்சொற்கள் தொடர்பான பணியறிவைக் குறிப்பிட்டு அறிமுகச் சுருக்கம் அனுப்பி வைத்தேன். அவர் வெளியிடுவார் என்ற நம்பிக்கையில் அல்ல.  அவரைப்போல் மாணாக்க நிலையிலிருந்தே  நான் சொல்லாக்கத்தில் ஈடுபட்டு வருகிறேன் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அவர் இதனை ஏற்காதவர் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், ஆனால் அவர் பின்வருமாறு முகநூல் செய்தியகத்தில் எனக்கு மடல் அனுப்பியிருந்தார்.

  “என்னையோ பிறரையோ தனிப்பட குறித்துக் கருத்திடாமல் நன்முறையில் மன்றத்தில் நடந்துகொள்வீர்களா என்று அறிய விழைகின்றேன். ஒற்றுமையாக, இணக்கமாக வளர்முக நல் உரையாடல்களைக் கைக்கொண்டு தொடர்வீர்கள் என்றால் உங்களின் தன்னறிமுகத்தை இந்த அறிவியல் குழுவில் வெளிட ஒப்புவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

 என்னைப்பற்றி வெளியிட எனது இணைய இதழ்கள் உள்ளன. வலைக்குழுக்கள் உள்ளன.என்னை மதிக்கும் நண்பர்களின் இதழ்கள் உள்ளன. இப்படி மண்டியிட்டு வெளியிடச்செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை.

நான் இரு கருத்துகள்தான் பதிந்துள்ளேன். அவற்றுள் யாரைத் தாக்கியுள்ளேன். மாறுபட்டகருத்தை வெளிப்படுத்துவது அல்லது ஒத்த கருத்தின்மை எப்படி ஒற்றுமையின்மை ஆகும்? இணக்கமாகத்தான் எழுத வேண்டும் என்றால் பொதுவில் ஏன் கலைச்சொற்களை முன்வைக்க வேண்டும். தன் கருத்தை உலகம் ஏற்கிறது என்று காட்டவா? நன்முறையில் மன்றத்தில் நடந்து கொள்வீர்களா எனக் கேட்டு என்னைப்பற்றி நன்முறையில் நடக்காதவன் என்ற இழிவை அல்லவா சுமத்துகிறார். எனக்கு மட்டுமல்ல, அவருக்கும் தோழமைக்கும் அஃது இழுக்கல்லவா? நேர்மையாகவும் நாணயமாகவும் ஒழுக்கமாகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னரும் அதே வழியில் நடைபெறுகிறவன் நான். தங்கக்காசுகள் நிறைந்த தங்கப்பெட்டியே தருவதாகச் சொன்னபொழுதும் தடம் மாறாதவன் நான்.  ஒலிபெயர்ப்புச் சொற்களைத் தமிழ்க்கலைச்சொற்களாக ஏற்பது தமிழ் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல எனச் சுட்டிகாட்டினால் நான் நன் முறையில் நடக்காதவன் எனப் பொருளா?

நான் ஒரு கருத்தைப் பாராட்டுகிறேன் என்றால் அதற்குரியவரைப் பாராட்டுகிறேன் என்றோ கருத்தை மறுக்கிறேன் என்றால் அவ்வாறு சொன்னவரை வெறுக்கிறேன் என்று பொருளல்ல. இது வரையிலும் நான் யாரையும் வெறுத்தவனுமல்லன். ஆனால், அவர் கருத்து மறுப்புகளைத் தனிப்பட்ட எதிர்ப்பாக ஏற்றுக் கொண்டுள்ளார்.  கருத்தை மறுப்பதே தவறு என்றால் இனி, “நான் நன்முறையில் நடந்துகொள்வேன் எனத் தெரிவிக்க வேண்டும்” என்ற நிபந்தனை விதித்து இழிவுபடுத்துவதும் தவறல்லவா?

அறிவியல் உண்மைகளைப் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்க இயலாது. அவ்வாறு பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தமையால்தான், 220 நீதிக்குழு உறுப்பினர்கள் மெய்யியல் அறிஞர் சாக்கரட்டீசை மன்னிக்கத் தெரிவித்தும் 281 உறுப்பினர்கள் பரிந்துரைக்கிணங்க அவருக்கு மரணத்தண்டனை அளிக்கப்பட்டது. பெரும்பான்மையர் உலகைத் தட்டை வடிவம் என நம்பியதால், அறிவியலறிஞர் கலிலியோவிற்கு வாணாள் சிறைத்தண்டையும் வீட்டுச் சிறையும் அளித்தனர். இப்படிப் பலச்சான்றுகள் உள்ளன. அறிவியல் எப்படியோ அப்படித்தான் அதை உணர்த்தும் சொற்களையும் வாக்களிப்பு அடிப்படையில் முடிவெடுக்க இயலாது. இதைக் குறிப்பிட்டால் நன்முறையில் நடக்காதவனா?

எவ்வாறிருப்பினும் ஒலி பெயர்ப்புச் சொற்களை மூலப்பொருள் அறிந்து தமிழில் குறிக்க வேண்டும், தேவையான இடங்களில் அடைப்பிற்குள் ஒலிச்சொற்களை இடலாம், சொற்களை உண்மைப்பொருளை உணராமல் வாக்கு அடிப்படையில் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழக அரசு அயற்சொற்களைத் தமிழில் குறிப்பதற்கும் தமிழ் எழுத்துகளை ஆங்கிலத்தில் குறிப்பதற்கும் சீர்மை வரையறைக் குழுவை அமைக்க வேண்டும். இவையே அறிவியல் தமிழை மேலும் மேம்படுத்தும்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து (திருவள்ளுவர்,திருக்குறள் 645)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல