அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ

 தாம் செல்லும் இடங்களில் எல்லாம் ஒல்லும் வகையெல்லாம் தமிழ் பரப்பும் பெருந்தகை பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ. அயல்நாட்டில் இருந்து தமிழைப்போற்றித் தமிழைப் பரப்பும் சிலருள் இவரும் ஒருவர்.

திருவாளர் செவாலியே தியாகு இலெபோ – திருவாட்டி அன்னம்மாள் இலெபோ இணையர் திருமுகனாக  ஐப்பசி 18, 1978 / 03.11.1947 அன்று பிறந்தார். இவர் மனைவி இலெபோ உலூசியா, இவரைப்போலவே தமிழார்வமும் தமிழ்த்தொண்டுச் செயற்பாடுகளும் மிக்கவர்.  இவர்களுக்கு மணவாழ்க்கையை எதிர்நோக்கும் மகன் ஒருவரும் பெண்மக்கள் இருவரும் அவர்கள் வழி ஒவ்வொரு பெயர்த்தியும் உள்ளனர்.

பாரதியார் 1908 இல் புதுவைக்கு வந்தபோது அவரைக் கைது செய்து சென்னைக்கு அனுப்பும்படி ஆங்கிலேய அரசு புதுவையில் இருந்த பிரஞ்சு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தது. அவ்வாறு அனுப்பாமல் இருக்க வேண்டுமானால் ஆவணச் சான்றுரைஞர்(notary  public) ஐவரின் நன்னடத்தைப் பொறுப்பு ஒப்பம் தேவைப்பட்டது. அவ்வாறு கையொப்பமிட்ட ஐவருள் ஒருவர் இவரின் தந்தை வழித் தாத்தா இலெபோ(LE  BEAU) ஆவார். இக்குடும்ப மரபில் வந்த இவருக்குத் தமிழ்ப்பணியிலும் பொதுப்பணியிலும் ஆர்வம் வந்ததில் வியப்பில்லை.

கல்வி :

–           – சென்னை இலயோலா கல்லூரியில்  இயற்பியல் துறையில் இளம் அறிவியல்(B.Sc – Physics) பட்டம் பெற்றவர். இவர் மாணவப்பருவத்தில் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் பங்கேற்றுத் தன் திறமையை வெளிப்படுத்தினார். எனவே, தமிழ் ஆர்வமும் இதன் காரணமாக ஆங்கில ஆர்வமும் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தமையால் பிரெஞ்சு மொழி ஆர்வமும் கொண்டு விளங்கினார். எனவே, தமிழ்(சென்னை பச்சையப்பன் கல்லூரி), ஆங்கிலம்(திருப்பதி வேங்கடேசுவரா பல்கலைக்கழகம்), பிரெஞ்சு(பிரெஞ்ச கல்வியியல் கழகம்/Académie Fraçaise, புதுதில்லி) என மும்மொழிகளிலும் முதுகலைப்பட்டங்கள் பெற்றார்.

மும்மொழிப் புலமை மிக்க இவர் மின்னியல் (Diploma in Electronics, பிரித்தானியப் பொறியியல் தொழில் நுட்பப்பயிலகம்/British Institute of Engineering and Technology,மும்பை) மொழியியல் (Diploma în Linguistics, கேரளா பல்கலைக்கழகம்) பட்டயங்கள் பெற்றவர். கணிணி இயலிலும் எழுநிலைச்சான்றிதழ் பெற்று வல்லமை மிக்கவர். வெவ்வேறு நகரங்களில் கல்வி கற்றமையும் அறிஞர் மு.வரதராசனார், அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் முதலான அறிஞர்களின்மாணாக்கர்களாகத் திகழ்ந்தமையும் இவருக்கு விரிந்துபரந்துபட்ட அறிவு பெற வாயிலாக அமைந்தன.

பணிகள் :

–           புதுச்சேரி தாகூர்க்  கலைக் கல்லூரியில் தமிழ்த் துணைப் பேராசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார் பேரா.பெஞ்சமின் இலெபோ. பின்னர் 14 ஆண்டுகள், கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் (சீபூத்தீ / Djibouti))  இந்தோசுயெசு வங்கி என்ற பிரஞ்சு வங்கியில் முது நிலை அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் 1990 முதல் பிரான்சு கிறித்தியான் இலக்ரூவா (Christian Lacroix ) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் செயல் அலுவலராகப் பணியாற்றி 2010 இல் பணி  நிறைவு பெற்றார்.

படைப்புப்பணி:

இவரது எழுத்தார்வம் மாணவப்பருவத்திலேயே சிறப்பாக மலர்ந்தது. புகுமுக மாணாக்கராக இருந்த பொழுது(1965) கல்லூரி மாணவர்க்கான ‘ஆக்க வேலையில்  அணுச்சக்தி’ என்னும் தலைப்பிலான கலைக்கதிர்  அறிவியல் கட்டுரைப்  போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

 அறிவியல் இளங்கலைப் படிப்பின் போது அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திருக்கரங்களால் சுழற்கோப்பை பெற்றார்.

இவரின் கலைச்சொல் ஆர்வம் பொறியியல் படிப்பில் நுழைந்ததுமே தொடங்கிவிட்டது. 1969-இல் கிண்டி பொறியியற் கல்லூரி நடத்திய கலைச்சொல்லாக்கப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். மூன்றாம் பரிசாக இருந்தாலும் கலைக்கல்லூரி நிலையில் முதலிடமாக இஃது அமைந்தது.

1992-இல் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலகளாவிய கட்டுரைப் போட்டி நடைபெற்றது. ‘கவிஞனின் காதலி’ என்னும் தலைப்பில் கட்டுரை அளித்து, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் திருக்கரங்களில் இருந்து முதல் பரிசு பெற்றார்.

தமிழ்க்காப்புக் குரல்:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில்  நடைபெற்றதல்லவா? அப்போது தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்கான சிதைவு முயற்சியும் நடைபெற்றது. அறிஞர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அது குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக இருந்தார். இதனால்,   நானும் ஒருங்கிணைப்பாளராக இருந்த தமிழ்எழுத்துப்பாதுகாப்பு இயக்கம் உருவாகிக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாகை சூடி அந்த அறிவிப்பை வெளிவராமல் செய்தது. இந்த இயக்கத்தில் பங்கேற்ற ஐரோப்பிய நாட்டவராக இவர் மட்டுமே இருந்தார். மேலும், இந்த மாநாட்டிற்கு அரசு சார்பில் அழைக்கப்பெற்ற ஐவருள் ஒருவராகவும் திகழ்ந்தார். இச்செம்மொழி மாநாட்டில் ‘தமிழ் எழுத்துச் சீர்திருத்தமா! தமிழுக்கது பொருத்தமா?’ என்ற ஆய்வுக் கட்டுரையையும் அளித்தார்.

விருதாளர் :

தமிழ்ப்பணிக்காக இவர் பெற்ற விருதுகளில் குறிக்கத்தக்கன வருமாறு:

      2015-2016 ஆம் ஆண்டிற்கான அயலகத்  தமிழறிஞர்கள் இலக்கண விருதை நூறு ஆயிரம் உரூபா பொற்கிழியுடன் முதல் முதலாகப் பெற்ற சிறப்பிற்குரியவர்.

கோலோன் பல்கலைக்கழகம்(Univeritat zu  KÖLN) பாரீசு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் [பெயர் மாற்றப்பட்ட பன்னாட்டு உயராய்வு நிறுவனம்(Institut International des Études Supérieures’ /International Institute of Higher Studies)] இணைந்து இவருக்குப் போப்பு விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

 பிரான்சில் தமிழ்ப்   பணிகள் :

 பிரான்சு கம்பன் கழகப் பொருளாளர் ஆகவும் செயலர் ஆகவும் இருந்து அம்மண்ணில் தமிழ்க்குரல் முழங்கச் செய்கிறார். அத்திசு மோன்சு(Athis-Mons) நகரின் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகம், முத்தமிழ் மன்றம்  முதலானவற்றின் அறிவுரைஞராக இருந்தும் பல சங்கங்களுக்கு வழி காட்டியாக இருந்தும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுத்தும்  பிறரின் தமிழ்ப்பணிகளுக்குத் தூண்டுகோலாக உள்ளார். 

 பிரான்சு கம்பன் கழகத்தின் மகளிர் அணிக்காக வலைப்பூ  (blog) உருவாக்கித் தந்ததுடன்  அதன் தொழில்நுட்ப வினைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

 இந்தியக் கத்தோலிக்கத் தமிழ் ஞானகத்தின் (Aumônerie Catholique Tamoule Indienne, Paris) மூத்த உறுப்பினர் என்ற பெருமைக்ககுரியவர். அதற்காக 2000 ஆம் ஆண்டு இணையத்தளம் உருவாக்கி இவரே 2019 வரை அதை நடத்தித்  தந்துள்ளார். அதன் வெளியீடான ‘ஞான தீபம்’ இதழைக்  கணிணியில் ஏற்றி 2018 வரை நடத்தி வந்துள்ளார். 

 இவர் எழுதியுள்ள இலக்கண,  இலக்கிய, அறிவியல் கட்டுரைகள் பலவாகும். யாவுமே தமிழ் நலம் சார்ந்தவை. எழுத்தாளராக மட்டுமல்லாமல் தலை சிறந்த  பேச்சாளராகவும் திகழ்கிறார். -ஆண்டு தோறும் இந்திய வருகையின் போது  புதுச்சேரித் தமிழ்ச் சங்கம், மதுரைத் தமிழ்ச் சங்கம், புதுவை, தமிழகக்  கல்லூரிகளில் தகைநிலைப்பேராசிரியராக(professor emeritus)உரை நிகழ்த்தி வருகிறார்.

 2010 இல் பாரீசில் இலக்கியத்தேடல் அமைப்பை உருவாக்கித் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

 பன்னாட்டுக் கருத்தரங்குகள், இணையத்தளக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆராய்ச்சி உரை வழங்கி வருகிறார்.

பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா, பட்டிமன்றம், கவியரங்கம் முதலான பொதுவான விழாக்களுடன் செந்தமிழ்க் காவலர் முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா, மு.வரதராசனார் நூற்றாண்டு விழா முதலான அறிஞர்கள் விழாக்களையும் கம்பன்கழகம் சிறப்பாக நடத்தி வருகிறது.  இதன்மூலம் பல்வேறு திசைகளிலிருந்தும் தமிழ்ப்பொழிவாளர்களை வரவழைத்து இலக்கிய இன்பங்களைப் பிரான்சுத்தமிழர்களுக்கு வழங்கி வருகிறது. மேடைவாய்ப்பு மூலம் உரையாளர்கள்,கவிஞர்கள், செயற்பாட்டாளர்களுக்கு வாய்ப்புகள் நல்கி அவர்கள் திறமைகளை மேம்படுத்தி வருகிறது. இதில் செயற்பாட்டாளர் பெஞ்சமின் இலெபோவிற்கும் முதன்மைப் பங்கு உள்ளது.

“உலகில் எங்கிருந்தாலும் தமிழன் தமிழன்தான்! தமிழ்ப்பணியை மூச்சாகக் கொள்பவன்தான்!” என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பிரான்சுநாட்டில் இருந்து பேச்சாலும் எழுத்தாலும் செயலாலும் அங்கும் எங்கும் தமிழ்ப்பணியாற்றும் பெருந்தகை பேரா.பெஞ்சமின் இலெபோ நூறாண்டு கடந்தும் வாழ்க! வாழ்கவே!

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல

 

உலூசியா இலெபோ( lucia lebo)