ஆழிப் பேரலையா? எமனின் கூலிப் படையா? – ப.மு.நடராசன்
ஆழிப் பேரலையா? எமனின் கூலிப் படையா?
நானூற்று அறுபது கோடி அகவை மூதாட்டி பூமித்தாய்
பூமியும் கடலும் பெற்ற குழந்தைகள் ஏராளம் ஏராளம்
தாய் என்று கும்பிட யாருமில்லையே அவற்றிற்கு
மனிதன் பிறந்த பிறகு கிடைத்த மதிப்பு தாய்ப்பட்டம்
கடலன்னையின் சீர்வரிசை
குடிநீரையே சிக்கனப் படுத்தத் தெரியாத
ஊதாரி மனிதனுக்கு
எத்தனை முறைதான் தூது விடுவது மேகத்தை?
வெள்ளத்தை விழுங்கிப் பூமியைக் காப்பதும்
பகைவர் தீண்டாது பாதுகாப்பதும்
இப்படியாகக் கடலன்னையின் சீர்வரிசை எத்தனையோ!
தத்துப்பிள்ளையின் வெகுமதி
கருவைச் சிதைத்து முத்தைக் களவாடுவதும்
காலைக்கடன் முடிக்கக் கடற்கரையைத்
தேசியக் கழிப்பறையாக்குவதும்
சூரியக் குளியல் என்ற பெயரில்
அரை அம்மணமாகி அவளை முகம் சுழிக்கவைப்பதும்
சராசரி மனிதனின் வெகுமதி இதுதான்
கடலன்னைக்கு – இதுமட்டுமா
சாமியாருக்குக் கூடக் குடும்பத்தான் ஆசை
தக்க வெகுமதி தந்தால் தாயையும் வெட்டுவான்
பூமியிலிலே அவன் பிறந்த இரு நூறு ஆயிரம் ஆண்டுகளாய்
சராசரி மனிதன் தருமமே அதருமம்தானே!
மனிதன் மனிதன்தானே
அவன் அப்படித்தான் இருப்பான்
இயேசு பிறந்த மறுநாள் இதற்காகத்தான்
படையெடுத்தாயோ அவன்மேல்?
அசிங்கமாக இல்லை உனக்கு?
எத்தனை பெண்டிரின் தாலியைப் பறித்தாய்
எத்தனை பேரின் குழந்தையைப் பறித்தாய்
எத்தனை குடும்பத்தை வேரோடு சாய்த்தாய்
திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம், பிணவாடை
எஞ்சியோர் முகத்திலும் மரணக் கலைதான்
அரைகுறை ஆடையில் உன் எல்லையில் வலம் வந்ததும்
உன்னை அருவருப்பு ஆக்கியதும் உண்மைதான் – அதற்காக
எங்கள் ஆவியைப்பறித்த பின்பு அம்மணம் ஆக்கினாயோ?
வளர்ந்த பிள்ளைகளைப் பிறந்த மேனியில் பார்க்க
அருவருப் பா க இல்லை உனக்கு?
பிணம் தின்னிக் கழுகு
உன்மடிமேல் பிறந்த மீனை எங்கள் பசிக்குப்
புசித்தது உண்மைதான்
பலி தீர்க்க எங்கள் பச்சை இறைச்சியைப்
புசிக்க ஆசைப்பட்டாயோ?
அன்பு, முத்தம், பாசம், உணவு, உடை
குழந்தையின் எதிர்பார்ப்பு தாயிடம் இவைதானே
கோரக் கடல் அலைகளாலா முத்தமிடுவது?
முத்தமா அது? எங்கள் மூச்சையே
ஒட்டுமொத்தமாக நிறுத்தி விட்டதே!
தருமத்திற்குக் கட்டுப்பட்டு மரணத்தை நிகழ்த்தியதால்
எமன்கூட எமதருமராசா ஆனார் இங்கு
விதி முடிந்தோர்க்கு மட்டுமே
பாசக் கயிற்றை நீட்டினான் எமன்
அவன்மேல் என்ன தவறு கண்டாய்?
பதவி மாற்றம் செய்தாயோ – அவன்
பதவியையும் பறித்துக் கொண்டாயோ?
எமனையே மரித்துவிட்டாயோ?
நீ ஆழிப் பேரலையா எமனின் கூலிப் படையா?
பெண்கள் பொறுமையின் சின்னம், காக்கும் கடவுள்
நதி, நாடு, ஏன் உன்னையும் அன்னையென்று
அழைக்கின்றோம் அதனால்தான்
கடலன்னையா நீ? பிணம் தின்னிக் கழுகு!
குமுகாயச் சமத்துவம்
உன் கோரத் தாண்டவத்தால்
நீ புகட்டும் பாடம்தான் என்ன?
செல்வந்தருக்கும் ஏதுமிலிகளுக்கும்
சமபந்திச் சாப்பாடு செய்து
குமுகாயச் சமத்துவம் கண்டாய்
மத்த்திற்கும் சாதிக்கும் வெவ்வேறான இடுகாட்டைப் பொதுவுடைமை ஆக்கினாய்
மனிதச் சாதியை ஒட்டு மொத்தமாக
உதவிக் கரம் நீட்ட வைத்தாய்
இருப்போரையும் இல்லாரையும்
ஒரே குடிசையில் தங்க வைத்தாய்
உண்மைதான்
தண்டனை தந்து தத்துவம் சொல்பவள்
தாயாக முடியுமோ?
தவறுக் கெல்லாம் தண்டனை தந்தால்
பூமியில் மானிடர் மிஞ்சுவதே அரிது
தாயாக நடந்து கொள் இனியாவது
போட்டியோ போட்டி ஐம்பூதங்களுக்குள் மனிதரை மாய்க்க
மனித நாகரிகம் தோன்றிய காலம் தொட்டே
வணங்குகின்றோம் தாயென்று ஐம்பூதங்களை
நீ பெற்ற பிள்ளை சில தவறு செய்வது உண்மைதான்
கண்டிப்பதில் தவறேதும் இல்லை அவர்களை
ஒட்டு மொத்தமாகக் கழுவில் ஏற்றுவதா?
உன் வெறியாட்டத்தால் மரித்தது மனிதன் இல்லை
உன் மமதைதான்
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”
திருவள்ளுவர் வாசகம் தெரியாதா உனக்கு
சராசரித் தாயாக நடந்து கொள் இனியாவது!
முனைவர் ப.மு.நடராசன், அமெரிக்கா
(முன்னாள் இயக்குநர், பருவகால மாற்ற ஆய்வு மையம்
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், தஞ்சாவூர்)
Leave a Reply