(முன்னிதழ்த் தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 5

 

அத்தியாயம்  3. கவிதை

இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை என்று பேசும்போது நவீனத் தமிழ்க் கவிதையையே நாம் முதன்மையாகக் கருதுகின்றோம். ‘நவீன தமிழ்க்கவிதை அல்லது ‘தற்காலத் தமிழ்க்கவிதை’ என்ற ஒரு தொடரை இப்போதெல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். பழைய, பண்டித மரபு வழிப்பட்ட நிலப்பிரபுத்துவ வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்ட பிரபந்த இலக்கிய வகைகளிலிருந்து மாறுபட்டு,நிகழ்கால வாழ்க்கை நிலைமைகளையும், அதன் அடிப்பிறந்த வாழ்க்கை நோக்குகளையும் கருத்தோட்டங்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளையே நவீனக் கவிதை என்ற தொடர் குறிக்கின்றது. நவீன உள்ளடக்கத்துக்கு ஏற்ப அதன் வடிவ அமைப்பிலும் -சொற்கள், சொற் சேர்க்கைகள், ஓசை ஒழுங்கு, வௌிப்பாட்டு முறை போன்றவற்றிலும் – இக் கவிதை முறை பழைய செய்யுள் இலக்கியங்களிலிருந்து எவ்வளவோ மாறியுள்ளது என்பதையும் நாம் காண்கின்றோம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இப்புதிய கவிதை மரபு, ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்புதிய கவிதை மரபை அங்குத் தோற்றுவித்து வலுப்படுத்தியவன் பாரதியே என்பது இப்போது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் உண்மை.

‘தற்காலத் தமிழ்க்கவிதை’ என்று இனங் காணப்படுகின்ற இக்கவிதை மரபு தமிழ்நாட்டில் அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப தோன்றி வளர்ச்சி அடைந்ததைப் போன்றே, ஈழத்திலும் நமது நாட்டுக்கு உரிய சில தனிப் பண்புகளையும், பாதிப்புகளையும் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளதை நாம் இப்போது தௌிவாக இனம் கண்டு கொள்கின்றோம். ஈழத்தைப் பொறுத்தவரை இக்கவிதை மரபு சுமார் நாற்பது ஆண்டு கால வரலாற்றையே கொண்டுள்ளது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் ‘மறுமலர்ச்சிக் காலம்’ என்று சொல்லப்படுகின்ற 1940 ஆம் ஆண்டுகளிலேயே இங்கு இப்புதிய கவிதை மரபு தோன்றி வளர்ச்சியடையத் தொடங்கியது.

19ஆம் நூற்றாண்டின் மரபு வழிப்புலவர்கள் சிலர் இந்த நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளிலும் வாழ்ந்தனர். சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், க. மயில்வாகனப் புலவர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, நவநீதகிருட்டிணபாரதியார், அருள்வாக்கி அப்துல்காதிறுப் புலவர் முதலியோர் இவர்களுள் முதன்மையாகக் குறிப்பிடவேண்டியவர்கள். ஆயினும் இவர்கள் அனைவரையும் சென்ற உகத்தின் சார்பாளர்களாகவே கருதவேண்டும். இந்த நூற்றாண்டின் கவிதை மரபுடன் இவர்களைத் தொடர்புறுத்த முடியாது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த, பாரதியின் சம காலத்தவரான பாவலர் துரையப்பாபிள்ளை,சோம சுந்தரப்புலவர், விபுலானந்த அடிகள் ஆகியோரும் இந்த நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் அநேக கவிதைகளைப் படைத்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலச் சிந்தனைப் போக்குகள் சில இவர்களது கவிதைகளில் காணப்படினும் இன்றைய பொருளில் இவர்கள் ஈழத்து நவீன கவிதையின் முன்னோடிகள் என்று கருதப்படுபவர்கள் அல்லர். பழைய மரபுக்கும் புதிய மரபுக்கும் இடைப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

1940 ஆம் ஆண்டுக்குப்பின் குறிப்பாக 1942ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சில இலக்கிய ஆர்வம் உடைய இளைஞர்கள் சேர்ந்து ‘மறுமலர்ச்சிச் சங்கம்‘ என்ற ஒரு இலக்கிய நிறுவனத்தை அமைத்ததைத் தொடர்ந்து பாரதிதாசன், கலைவாணன் போன்ற அக்காலத்து தமிழ் நாட்டு முன்னணிக் கவிஞர்களின் செல்வாக்கினால் தூண்டப்பட்ட சில இளம் கவிஞர்களின் முயற்சியினாலேயே இங்கு நவீன கவிதைப் பாணி உருவாகி வளர்ச்சி அடையத் தொடங்கியது. நாவற் குழியூர் நடராசன், சோ. நடராசன், அ.ந. கந்தசாமி, மகாகவி, சாரதா, செ. கதிரேசபிள்ளை, யாழ்ப்பாணன் முதலியோர், இக்காலப் பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினர். இவர்களுள் நாவற்குழியூர் நடராசன், அ.ந. கந்தசாமி, மகாகவி ஆகிய மூவரும் இக்காலப்பிரிவில் தோன்றிய குறிப்பிடத்தக்க கவிஞர்களாவர்.

நாவற்குழியூர் நடராசன் மனோரதியப் பாங்கான கவிதைகளையே அதிகம் எழுதினார். பொருளைவிட ஒசைநயத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார். அவரது கவிதைகள் சில ‘சிலம்பொலி‘ என்ற பெயரில் நூல்வடிவம் பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் கவிதையில் இடதுசாரிச் சிந்தனை போக்கை முதலில் எதிரொலித்தவர் அ.ந. கந்தசாமியே ஆவர். ‘கவீந்திரன்’ என்ற புனைபெயரிலும் இவர் கவிதைகள் எழுதிவந்தார். ஏராளமாக எழுதாவிட்டாலும் வில்லூன்றி மயானம், துறவியும் குட்டரோகியும் போன்ற இவரது சில கவிதைகள் குறிப்பிடத்தக்கன.

இம்மூவருள்ளும் இலங்கைத் தமிழ்க் கவிதையில் அதிக பாதிப்பையும் பங்களிப்பையும் செய்தவர் மகாகவியே ஆவர். 1971 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும்வரை கிட்டத்தட்ட முப்பது ஆண்டுக் காலம் கவிதை எழுதி வந்தார். பல நூற்றுக் கணக்கான கவிதைகளும் சேனாபதி, பொய்மை, சிற்பி ஈன்ற முத்து, கோலம், திருவிழா, அடிக்கரும்பு முதலிய வானொலிப் பா நாடகங்களும், கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று முதலிய மேடைப் பா நாடகங்களும், கல்லழகி, சடங்கு, கந்தப்பசபதம், கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் முதலிய காவியங்களும் மானிலத்துப் பெரு வாழ்வு எனும் தலைப்பில் அமைந்த இசைப்பாடல்களும் பொருள்நூறு என்னும் சிறு கவிதைகளும் பிஞ்சுப் பாடல்கள் என்னும் சிறுவர் கவிதைகளும் அவரது படைப்புக்களாக உள்ளன. வள்ளி, குறும்பா, கோடை, கண்மணியாள்காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், வீடும் வௌியும், இருகாவியங்கள் ஆகிய அவரது ஏழு நூல்கள் இதுவரை வௌிவந்துள்ளன. நூல்வடிவம் பெறாதவை பல.

மகாகவி, யாழ்ப்பாணத்துச் சிற்றூர் மக்களின் வாழ்வையே தனது கவிதைப் பொருளாகக் கொண்டார். யதார்த்த நெறியைக் கவிதையில் கையாண்டார். பழைய யாப்பு வடிவங்களைப் பேச்சோசைப் பாங்கில் எளிமைப்படுத்தினார். சிற்றூர் வழக்குச் சொற்களைக் கவிதையில் தாராளமாகப் பயன்படுத்தினார். மனித வாழ்க்கையில் ஒரு ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் அவர்தன் கவிதைகளில் எதிரொலித்தார். தனக்குப்பின் வந்த பல கவிஞர்களில் அவர் கணிசமான பாதிப்பைச் செலுத்தினார். இக்காரணங்களால் ஈழத்து நவீனக் கவிதையில் ஒரு பெரிய ஆழுமையாக பல விமர்சகர்களால் மகாகவி கருதப்படுகின்றார்.

1950 ஆம் ஆண்டுகள் இலங்கை வரலாற்றில் முதன்மையான காலப் பிரிவாகும். கிடைத்த சுதந்திரத்தைப் பொருளுள்ளதாக்குவதற்கான முயற்சிகளும் போராட்டங்களும் இக்காலப் பிரிவிலேயே தொடங்கின. தேசியம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள் மயமாகத் தொடங்கிய காலப்பிரிவும் இதுவே. தேசிய இனச் சிக்கல் பெரிய அரசியல் சிக்கலாக மாறிய காலமும் இதுவே.

இக்காலப் பகுதியில் இலங்கைத் தமிழ்க் கவிதையில் பல புதியவர்களையும் சில புதிய போக்குகளையும் நாம் காண்கின்றோம். உண்மையில் இக்காலப் பகுதியிலேயே இலங்கையின் நவீன தமிழ்க் கவிதை வீறுடன் எழுச்சி பெற்றது எனலாம். நாம் முன்னர்க் குறிப்பிட்ட கவிஞர்களும் இக்காலப் பகுதியிலேயே முதிர்ச்சி பெற்றனர். முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன், இராசபாரதி, புரட்சிக்கமால், அண்ணல் முதலியோர் இக்காலப் பகுதியில் அதிகம் எழுதிப் புகழ் பெற்றவர்கள். ஆயினும் தங்கள் நோக்கிலும் போக்கிலும் இவர்கள் தனித்தன்மைகளைக் கொண்டிருந்தனர்.

விஞ்ஞானப் பட்டதாரியான முருகையனின் கவிதைகளில் சிந்தனைக் கனதியே முதன்மைத் தன்மையாகும். விஞ்ஞான அறிவின் செல்வாக்கை இவரது பல கவிதைகளில் காணலாம். கவிதைகளாகவும் பா நாடகங்களாகவும் காவியங்களாகவும் இவரது படைப்புகள் அதிகம் உள்ளன. நெடும்பகல் இவரது காவியமும் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு நூலாகும். வந்து சேர்ந்தன-தரிசனம், கோபுரவாசல் ஆகியன பாநாடக நூல்களாகும். ஆதிபகவன் என்ற காவிய நூல் அண்மையில் வௌிவந்துள்ளது. கடூழியம் என்னும் குறியீட்டுப் பாங்கான இவரது பாநாடகம் சமீபகாலத்தில் இலங்கையில் மேடையேற்றப்பட்ட முதன்மையான நாடகங்களுள் ஒன்றாகும். மகாகவியுடன் இவர் சேர்ந்து எழுதிய ‘தகனம்’ குறிப்பிடத்தக்க ஒரு பரிசோதனைக் காவியமாகும். ஒருவரம் இவர் மொழி பெயர்த்து வௌியிட்ட ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு.

50 களில் எழுதத் தொடங்கிய நீலாவணன் 1975 சனவரியில் மரணித்தார். அதுவரை அவர் ஏராளமான கவிதைகளையும் சில பா நாடகங்களையும் வேளாண்மை என்ற முடிவுறாத ஒரு காவியத்தையும் படைத்துள்ளார். ஆரம்பத்தில் அழகிய காதல் கவிதைகள் பலவற்றை எழுதிய நீலாவணன் 1960 களில் கிழக்கிலங்கைச் சிற்றூர்களின் வாழ்க்கை முரண்பாடுகளைத் தனது கவிதைகள் பலவற்றில் சித்திரமாக்கினார். ஆயினும் இவரது பிற்காலக் கவிதைகள் பலவற்றில் ஆன்மீக உணர்வே வௌிப்பாடு பெற்றுள்ளது. ‘வழி’ இவரது முதன்மையான கவிதைகள் சிலவற்றை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பாகும்.

சில்லையூர் செல்வராசன் (தான்தோன்றிக் கவிராயர்) அங்கதப் பாணியிலான கவிதைகள் எழுதுவதில் வல்லவராக விளங்கினார். சிறப்பாக இவர் ஒரு மேடைக்கவிஞரே எனலாம். கவியரங்குகளில் இவரது கவிதைகள் அதிகம் வரவேற்பைப் பெற்றன. பிற்காலத்திலே இவர் சிலேடை போன்ற மொழி வித்தைகளிலும் அக்கறை காட்டியுள்ளார். இவரது கவிதை நூல்கள் எதுவும் வௌிவரவில்லை.

இராச பாரதி, அண்ணல் ஆகியோர் முதன்மையாகக் காதல் கவிஞர்களே. ஓசைநயமும் உவமைச் சிறப்புமிக்க பல காதல் கவிதைகளை இவர்கள் எழுதியுள்ளனர். தீயுண்ட வீரமுனை என்ற இராச பாரதியின் சிறு கவிதை நூல் இனக்கலவரம் ஒன்றில் பாதிக்கப்பட்ட வீரமுனை என்ற சிற்றூரைப் பற்றியது. அண்ணலின் ‘அண்ணல்’ கவிதைகள் என்ற தொகுப்பும் வௌிவந்துள்ளது. ஐம்பதுகளில் வளர்ச்சியடைந்த முதன்மையான கவிஞர்களில் ஒருவரான புரட்சிக்கமால் பிற்காலத்தில் முற்றிலும் இசுலாமிய மரபுணர்ச்சிக் கவிஞராக மாறினார். ‘புரட்சிக்கமால் கவிதைகள்’ தொகுப்பாக வந்துள்ளது.

1950 களில், பரமஃகம்சதாசன், பார்வதிநாதசிவம், திமிலைத்துமிலன், அம்பி, சக்தி அ.பாலையா, எம்.சி.எம். சுபைர், யுவன் போன்ற இன்னும்பல குறிப்பிடத்தகுந்த கவிஞர்களும் வளர்ச்சி அடைந்துள்ளனர். ஆயினும் மகாகவி, முருகையன், நீலாவணன் ஆகிய மூவருமே 50 களிலும் 60 களிலும் கூட ஈழத்தின் தலைமையான மூத்த கவிஞர்களாக விளங்கினர்.

1950 ஆம் ஆண்டுகளின் ‘பின்பகுதி’ அரசியல் வழியில் இலங்கைத் தமிழ்க்கவிதையில் பெரிதும் செல்வாக்குச் செலுத்திய காலப்பிரிவாகும். இக்காலப் பகுதியே அரசியல் கவிதையின் தொடக்கக் காலமும் ஆகும். தென் இலங்கையில் சிங்களம் மட்டும் என்ற அரசியல் கோசத்தின் எதிரொலியாக தமிழ் மக்கள் மத்தியில் மொழி உணர்வும் இனமுறையான அரசியல் எழுச்சியும் தீவிரம் அடைந்தன. இயல்பாகவே மொழி உணர்வுடைய, ஆனால் அரசியல் வழியாக வெறுமையாக இருந்த பெரும்பாலான தமிழ்க் கவிஞர்கள் ‘தமிழ் அரசு’ இயக்கத்தால் எளிதில் ஈர்க்கப்பட்டார்கள். இன, மொழி உணர்வை உள்ளடக்கமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான கவிதைகள் இக்காலப் பகுதியில் எழுந்தன. தமிழரசுக்கட்சி சார்பான சுதந்திரன் பத்திரிகை இத்தகைய கவிதைகளின் முதன்மையான வௌியீட்டுக் களமாக அமைந்தது. செந்தமிழ்ச் செல்வம், உயிர்தமிழுக்கு, தமிழ் எங்கள் ஆயுதம் முதலிய தொகுப்பு நூல்களாகவும் தமிழ் இயக்கக் கவிதைகள் வௌிவந்தன. இந்த அரசியல் அலையில் இருந்து ஒதுங்கி நின்ற கவிஞர்கள் மிகச்சிலரே.

எனினும் 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரம் இக்கவிதைப் போக்கை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. இனவழியான அரசியல் எழுச்சியின் விளைவுகளை மனிதாபிமானமிக்க இக்கவிஞர்கள் நேரடியாகக் கண்டனர். பலர் அதில் இருந்து விடுபட்டனர். சிலர் புதியதொரு அரசியல் போக்குக்கான தேடலில் ஈடுபட்டனர். எனினும் தீர்த்து வைக்கப்படாத தேசிய இனச் சிக்கல், பெரும்பான்மை இன ஆளும் வருக்கத்தின் மேலாதிக்க வேட்கை ஆகியவற்றின் விளைவாக இன்றுவரை இக்கவிதைப் போக்கு சிறுபான்மையாக நீடித்து நிலவக் காணலாம். கவிஞர் காசி ஆனந்தன் இப்போக்கின் சிறந்த சார்பாளராக இருந்து வருகின்றார். அவரது உயிர் தமிழுக்கு, தமிழன் கனவு, தெருப்புலவர் சுவர்க்கவிகள் முதலியன இப்போக்கில் அமைந்த கவிதை நூல்களாகும்.

(தொடரும்)

சிமௌனகுருமௌசித்திரலேகா & எம்நுஃமான்