இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்

1. முன்னுரை


இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின், இன்று வரையுள்ள பொதுவான வளர்ச்சிப் போக்குகளைத் திரட்டிக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும். பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் ஈழத்து இலக்கியத்தில் அக்கறையுள்ள பொது வாசகர்களுக்கும், ஈழத்து நவீனத் தமிழ் இலக்கியம் பற்றி அறியும் ஆர்வம் உடைய ஈழத்தவர் அல்லாத தமிழ் வாசகர்களுக்கும் பயன்படத்தக்க வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

ஈழத்தில் தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான திசையில் வளர்ச்சியடைந்துள்ளது‘ என்ற ஒரு பொதுவான கருத்து இன்று நிலவுகின்றது. தமிழகத்தில் ஈழத்து இலக்கியம் பற்றி அறியும் ஆர்வம் பரவலாகக் காணப்படுகின்றது. ஆயினும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றையும், வளர்ச்சி நிலைகளையும் முழுமையாகக் கூறும் நூல் எதுவும் இன்று வரை தோன்றவில்லை. எனினும் அத்தகைய முழுமையான நூல் ஒன்று எழுதப்படுவதற்கான சான்றுகளையும், தகவல்களையும் திரட்டிக் கூறும் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் இங்கே வௌிவந்துள்ளன.பொதுவாக இவற்றை நாம் மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம்.

1. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் எழுதிய நூல்கள் பற்றிய குறிப்புகளையும் தருவன. 1856ல் வௌிவந்த சைமன் காசி(ச் செட்டி)யின் ‘தமிழ் புளூட்டாக்’ முதல் 1967ல் வௌிவந்த மு.கணபதி(ப்பிள்ளை)யின் ‘ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்’ வரை இப்பிரிவில் அடங்கும்.

2. ஈழத்தவரின் தமிழ்தொண்டுபற்றியன. தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஈழத்தவரின் பங்கு, பதிப்புப் பணியில் ஈழத்தவரின் இடம், முசுலீம்களின் தமிழ்த்தொண்டு போன்ற விசயங்களை மதிப்பிடும் முயற்சிகள் இவற்றுள் அடங்கும். பேராசிரியர்கள் க. கணபதி(ப்பிள்ளை), வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன், கலாநிதி பொ. பூலோகசிங்கம், எம்.எம்.உவைசு, எசு.எம். கமால்தீன் முதலியோர் இத்துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். பொ. பூலோகசிங்கத்தின் ‘தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெரு முயற்சிகள்’ இவ்வகையில் முதன்மைத்துவம் உடைய நூலாகும்.

3. வரலாற்று நோக்கில் வெவ்வேறு காலக் கட்டங்களுக்குரிய ஈழத்து இலக்கிய முயற்சிகள்பற்றி இலக்கியவடிவ வழியிலும் பொதுவாகவும் தொகுத்துக் கூறுவன. பேராசிரியர். ஆ.சதாசிவம் தொகுத்த ‘ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம் ‘(1966) முதல், பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஈழத்தில் தமிழ் இலக்கியம் வரை இப்பிரிவில் அடங்கும். பேராசிரியர் க. கைலாசபதியும் இவ்வகையில் அநேகக் கட்டுரைகள்எழுதியுள்ளார்.

இவ்வாறு, ஈழத்துத் தமிழ் இலக்கியம்பற்றி வௌிவந்த நூல்கள், முதன்மையான கட்டுரைகள் பல இடம்பெற்ற சிறப்பிதழ்கள்பற்றியவிவரங்களை இந்நூலின் இறுதியில் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளோம். மேற்குறிப்பிட்ட வகையான ஆய்வு நூல்கள் இன்னும் பல வௌிவர வேண்டும். இவ்வாறு பல்வேறு ஆய்வுகளும் வௌிவந்து ஈழத்துத் தமிழ் இலக்கியம்பற்றிய ஐயப்பாடுகள் தௌிவான நிலையில்தான் ஈழத்து இலக்கியம் பற்றிய முழுமையான வரலாற்று நூல் எழுதப்படுதல் சாத்தியமாகும். இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சி நெறிகளைத் தொகுத்துக் கூறும் இந்நூல் அத்தகைய ஒரு முழுமையான வரலாற்று நூல் உருவாகுவதற்குப் பயன்படக்கூடிய முதன்மையான நூல்களுள் ஒன்றாக அமையும் என நம்புகிறோம்.

இந்நூல் ஆறு அத்தியாயங்களாக அமைந்துள்ளது. முதல் அத்தியாயம் ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு ஓர் அறிமுகமாக அமைவதோடு, இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியத்தின் சிறப்பான சில பொதுப் பண்புகளையும் திரட்டிக் கூறுகிறது. அடுத்துவரும் அத்தியாங்களில் கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், திறனாய்வு ஆகிய துறைகளில் காணப்படும் வளர்ச்சிப் போக்குகள் தனித்தனியாக ஆராயப்படுகின்றன. நாடகம் முற்றிலும் இலக்கிய வடிவம் அல்ல; அஃது ஓர் அரங்கக் கலையும் ஆகும். ஆகவே நாடக வளர்ச்சிபற்றிய கட்டுரையில் நாடக அரங்க மேம்பாடுகளும் இணைத்து நோக்கப்பட்டுள்ளன.

இலக்கியம் குமுகாய நடைமுறையின் ஓர் வௌிப்பாடு ஆகும். குமுகாய வளர்ச்சிப் போக்குகளே இலக்கிய வளர்ச்சிப் போக்குகளை இறுதியாக வரையறுக்கின்றன. அவ்வகையில் இந்த நூற்றாண்டின் ஈழத்து குமுக, அரசியல் வளர்ச்சிப் போக்குகளின் பின்னணியிலேயே இந்நூலின் ஈழத்து இலக்கியம் நோக்கப்பட்டுள்ளது. இலக்கிய வளர்ச்சி தனித்தனி வடிவங்களின் அடிப்படையில் நோக்கப்பட்டதால் சமுதாயப் பின்னணி பற்றிய குறிப்புகள் திரும்பத் திரும்ப இடம் பெறுவது தவிர்க்க முடியாததே. ஓரு வகையில் இலக்கியத்தின் குமுகாய அடிப்படையை அது மேலும் வலியுறுத்துவதாகவும் அமையும்.

சமகால ஈழத்து இலக்கியத்தில் ஏதோ ஒரு துறையிலேனும் ஈடுபாடு கொண்டுள்ள படைப்பாளிகள் அநேகர் உள்ளனர். குறிப்பாகக் கவிதை, சிறுகதைத் துறைகளில் இவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளது. இவர்கள் எல்லாருடைய பெயர்களும் இந்நூலில் இடம் பெறுவது சாத்தியமல்ல; அது தேவையுமல்ல. ஆயினும் பெயர்களை முடிந்த அளவு குறைத்து பொதுப்பண்புகளை மட்டும் சுட்டிச் செல்வதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எழுத்தாளர்கள் இல்லாமல் இலக்கியப் பண்புகளும் இல்லை. ஆகவே ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்கள் என்று கருதக்கூடியவர்களின் பெயர்கள் இந்நூலில் சற்றுக் கூடுதலாகவே இடம் பெற்றுள்ளன. இடம் பெறாதவர்கள் இடம் பெறத்தகாதவர்கள் என்று பொருளாகாது. இந்நூலில் குறைபாடுகள் இருக்கலாம். அவை சுட்டப்படும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுவோம். ஆயினும் இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கத்தை இது நிறைவேற்றும் என்றே நம்புகின்றோம்.

இந்நூலாக்கத்தைத் தொடக்கத்தில் இருந்தே ஊக்கப்படுத்தி உதவிகள் புரிந்த நண்பர் மு. நித்தியானந்தன், ஏ.சே. கனகரத்தினா ஆகியோருக்கும் அட்டை அமைப்பை வழங்கிய உ.சேரனுக்கும் அழகிய முறையில் இந்நூலை அச்சிட்டு உதவிய சித்திரா அச்சக உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் எமது நன்றிகள்.

ஆசிரியர்கள்

 

(தொடரும்)