(முன்னிதழ்த் தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 4
சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். . நுஃமான்

(4)

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கெனத் தனிப்பட்ட வரலாறு உண்டென்பதும் அது தனியே ஆராயப்படவேண்டியதென்பதும் இந்நூற்றாண்டின் பிற்பாதியிலேயே அழுத்தம் பெற்றது. தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டு இலக்கியமாகவே நோக்கப்பட்டு வந்த நிலை மாறி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழத்தின் பங்கும் வற்புறுத்தப்பட்டது இதன் பின்னரேயாகும். எனினும் ஈழத்தவர், ஈழத்து இலக்கியம் என்ற பற்றுணர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டது எனலாம். ஈழத்துத் தமிழரின் சமய பண்பாட்டுத் தனித்துவத்தைப் பேணுவதில் முழுமூச்சாக ஈடுபட்ட ஆறுமுகநாவலர் ஈழத்து இலக்கியப் பற்றுக் கொண்டிருந்தவர். 1856ஆம் ஆண்டு இவர் வௌியிட்ட நல்லறிவுச் சுடர் கொழுத்தல் என்ற வெளியீட்டில் இதனை அவதானிக்கலாம். சி.வை. தமோதரம்பிள்ளைக் கெதிராகத் தமிழ்நாட்டைச்சேர்ந்த வீராசாமி (முதலியார்) வௌியிட்ட ஒரு வெளியீட்டில் ஈழத்தவர் பற்றி இழித்துக் கூறப்பட்டதைக் கண்ணுற்றே நல்லறிவுச் சுடர் கொழுத்தலில் ஈழத்தவர் தமிழ் மொழிக்காற்றிய தொண்டினையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் நாவலர் எடுத்துக் கூறியிருந்தார்.

இருப்பினும் 1950ஆம் ஆண்டுகளில் பிற்பகுதியில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டைப் பரவலாக்கியதுடன்தான் எழுத்தாளர், வாசகர், விமரிசகர் ஆகிய மூன்று மட்டங்களிலும் இவ்வுணர்வு செறிந்து பிரபலம் பெற்றது. இக்காலக் கட்டத்தில் இலங்கையின் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இக்கோட்பாட்டின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவின. தேசிய நலனை அபிவிருத்தி பண்ணும் வகையிலேயே சகல நடவடிக்கைகளும் அமையவேண்டும் என்ற அரசின் கொள்கை கலாசாரத் துறையில் தேசியக்கலை இலக்கியங்களின் வளர்ச்சிக்கு உதவிற்று, ஈழத்து இலக்கியத்தில் வெறும் பற்று மட்டும் அன்றி இலக்கியம் தேசியச் சிக்கல்களை எடுத்தாளவேண்டும் என்றும்; குறிப்பாக அடிநிலை மக்களின் வாழ்க்கை இலக்கியப் பொருளாக வேண்டும் என்றும் இத்தேசிய இலக்கியக் கோட்பாடு வற்புறுத்திற்று. இக்கருத்தைப்பற்றிய பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. எனினும் தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு பெற்ற இம்முக்கியத்துவம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஈழத்துத்தமிழிலக்கியப் போக்கைக் குறிப்பிடத்தக்களவு வழிநடத்தியுள்ளது.

(5)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் அதற்கு முற்பட்ட இலக்கியத்தில் இருந்து வேறுபட்ட சில பொதுப் பண்புகளைக் கொண்டுள்ளது. இக்காலத்தில் நிகழ்ந்தேறிய பாரிய சமூக மாற்றங்களே இதற்குக் காரணமாக அமைந்தன. பிரித்தானியரின் வருகையினாலும் அவர்கள் இங்கு புகுத்திய வருத்தகப் பொருளாதார முறையினாலும் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவந்த நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு சிதைவடைய, அதன் சிதைவில் இருந்து தோன்றி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூக முறையும், அதன் விளைவான நவீன மயமாதலும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்களுமே இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் இயக்கு சக்தியாக அமைந்தன.

19ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவ சமூக கலாசாரத்தின் அடிப்படை அம்சமான சமயமே இலக்கியத்தின் உள்ளடக்கமாக அமைந்தது. சாதாரண மனிதனும் அவனது அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளும் இலக்கியத்துக்குப் புறம்பாகவே இருந்தன. முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் சாதாரண மனிதன் பொது வாழ்வில் முக்கியத்துவம் பெறத் தொடங்க 20ஆம் நூற்றாண்டு இலக்கியம் சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வைப் பொருளாகக் கொள்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதாவது தெய்வங்களும், திருத்தலங்களும், சமயானுஷ்டானங்களும் பெற்ற இடத்தை பொதுமனிதனும், நடைமுறைவாழ்வும் பெற்றன. சுருக்கமாகச் சொல்வதானால் இலக்கியம் சமய நெறியில் இருந்து சமூகநெறிக்கு மாறியது. இது 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஒரு முதன்மைப் பண்பாகும்.

இலக்கியத்தின் உள்ளடக்கத்தில் மாற்றம் ஏற்படும் போது அதன் உருவத்தில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. இதனாலேயே 19ஆம் நூற்றாண்டுவரை வழக்கில் இருந்துவந்த உலா, பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி போன்ற பிரபந்த வடிவங்களும் புராணங்களும் வழக்கிறக்க நவீன ஆக்க இலக்கிய வடிவங்களான புதினம்,சிறுகதை, நாடகம், (நவீனக்) கவிதை போன்றன தோன்றின. இவை ஈழத்தமிழ்ப் பண்பாட்டோடு இயைந்த வளர்ச்சி பெற்றன. ஆரம்பத்தில் இவற்றை இலக்கியங்களாக அங்கீகரிக்காத பண்டித மரபினர்கூட இன்று இவற்றின் இலக்கியத் தகுதியை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஈழத்து மொழிவழக்குகளும் ஈழத்துப் பண்பாட்டு அம்சங்களும் 20ஆம் நூற்றாண்டிலேயே இலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கின. முந்திய நூற்றாண்டுகளில் தோன்றிய இலக்கியங்களில் மிக அரிதாகக் காணப்பட்ட இத்தனித்துவக்கூறுகள், இந்த நூற்றாண்டு ஈழத்து இலக்கியத்தின் மிகப்பிரதான அம்சமாக மாறின. இவை தமிழக இலக்கியத்திலிருந்து ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை வேறுபடுத்தி அதற்கு ஒரு தேசியத் தன்மையை வழங்கின.

இந்த நூற்றாண்டின் பின்பகுதியில் அதாவது 1950-க்குப் பிறகு இந்நாட்டில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சமூக அரசியல் பிரக்ஞையை அளித்தன. இக்காலப்பகுதியில், பொருளாதார விடுதலையும், சம உடைமைச் சமூக அமைப்பும் கோரிய அடிநிலை மக்களின் அரசியல் விளிப்புணர்வு, மார்க்சீயக் கட்சிகளை மட்டுமன்றி எல்லா அரசியல் கட்சிகளையும் தவிர்க்கமுடியாதவாறு சோசலிசக் கோட்பாட்டை கொள்கையளவிலேனும் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்தித்தது. இலக்கியமும் சமூக அரசியல் பிரக்ஞையில் இருந்து பிரிந்து ஒதுங்கமுடியாது போயிற்று. இந்நாட்டின் முதன்மையான எழுத்தாளர்களில் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் அவர்களின் சிக்கல்களையே தங்கள் படைப்புகளின் பொருளாகக் கொண்டனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தே சில எழுத்தாளர்களும் தோன்றினர். இவ்வகையில் முற்போக்கு இலக்கியம் இந்நாட்டின் பிரதான இலக்கிய நெறியாக மாறியது. முற்போக்கு இலக்கியக்கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத எழுத்தாளர் பலர் இங்கே இருப்பினும் இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பிரதான போக்காக இருப்பது முற்போக்கு நெறியே என்பதை அழுத்திக் கூறலாம். இடதுசாரி இயக்கத்தில் அரசியல் பிளவுகள் ஏற்பட்ட போதிலும் கூட இஃது இலக்கியு நெறியை அதிகம் பாதிக்கவில்லை. மறுவகையில் இலக்கியத்தின் சமூகப்பெறுமானத்துக்குக் கொடுக்கப்பட்ட அதிக முக்கியத்துவம் சிலவேளை அதன் கலைப் பெறுமானத்தைப் பாதித்துள்ள நிலையையும் இங்கு அவதானிக்க முடிகின்றது. சமீபகாலத்தில் இது பற்றிய சர்ச்சைகள் ஈழத்து இலக்கிய உலகில் அதிகம் நடை பெற்றுள்ளன. இலக்கியத்தின் சமூகப் பெறுமானமும் கலைப்பெறுமானமும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதை இன்று, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் அதிகம் உணர்ந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ள இம்முற்போக்கு இலக்கிய நெறி தமிழக இலக்கியத்தைப் பொறுத்தவரை மிகப் பிற்பட்ட வளர்ச்சியே என்பதும் மனங் கொள்ளத்தக்கது.

20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத் தக்க பிறிதொரு அம்சம் வர்த்தக மயமாகாமை எனலாம். தமிழ்நாட்டைவிட ஈழத்தில் எழுத்தறிவு விகிதம் மிக அதிகம் எனினும் இங்கு வர்த்தகரீதியான பெரும் சஞ்சிகைகள் வளர்ச்சியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென் இந்திய வர்த்தக சஞ்சிகைகளின் சந்தையாக ஈழம் தொடர்ந்தும் இருந்து வருவதே இதன் காரணம் எனலாம். மலிவான ரசனைக்குத் தீனிபோடும் பொழுது போக்கு ரகக் கதைகள் தமிழகத்தில் மலிவாக உற்பத்தி செய்யப்பட்டு இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. நூல்வௌியீட்டு வசதியும், நூல் சந்தைப்படுத்தல் முறையும் விருத்தி அடையாத நிலையில் அவற்றோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு இங்கு வருத்தக இலக்கியம் வளர்ச்சி அடைய முடியவில்லை. சிங்கள மொழியில் வருத்தக இலக்கியங்கள் பெருகியதைப் போன்று இலங்கைத் தமிழில் பெருகாமைக்கும் இதுவே காரணம் எனலாம். இவ்வாறு கூறுவதனால் ஈழத்துத் தமிழில் வருத்தக முறையிலான இலக்கியேமா, சஞ்சிகைகளோ இல்லையென்று பொருள்படாது. 1970 க்குப் பின்னர் சுமார் ஏழு ஆண்டுகாலம் இந்தியப் புத்தகங்கள், சஞ்சிகைகள் இறக்குமதிக்கு இருந்த தடையைப் பயன்படுத்தி, வீரகேசரி, சனமித்திரன் போன்ற வருத்தக முறையிலான வௌியீட்டு நிறுவனங்கள் தோன்றி ஈழத்துத் தமிழ் இலக்கியம் வருத்தக மயமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் காணப்படுவது போல் வருத்தக இலக்கியத்துக்கும் உயர் இலக்கியத்துக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவௌி ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நூல்வௌியீட்டு வசதியும், நூல் சந்தைப்படுத்தும் முறையும் வளர்ச்சியடையாமையால் வருத்தக இலக்கியத்தின் எழுச்சி தடைப்பட்டிருப்பது மட்டுமன்றி காத்திரமான இலக்கிய முயற்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் மனம் கொள்ளத்தக்கது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் காணப்படும் பொதுவான மந்தநிலைக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்களின் சிறந்த படைப்புகள் பல இன்னும் வௌியிடப்படாமலேயே உள்ளன. பிரசுர வசதிக் குறைவினால் எழுத்தார்வம் மறைமுகமாகத் தடை செய்யப்படுகின்றது. எனினும் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், வாசகர் சங்கம், முத்தமிழ் வௌியீட்டுக் கழகம், யாழ். இலக்கிய வட்டம் போன்ற எழுத்தாளர் கூட்டுப் பதிப்பு முயற்சிகள் நம்பிக்கை தருவதாக உள்ளன.

(தொடரும்)


சிமௌனகுருமௌசித்திரலேகா & எம்நுஃமான்