(முன்னிதழ்த் தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்

2. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு: ஓர் அறிமுகம்

 

ஈழத்துத் தமிழிலக்கியப்பரப்பு ஐந்துநூற்றாண்டு காலத் தொடர்ச்சியான பாரம்பரியத்தையுடையது. இவ்விலக்கியப் பாரம்பரியத்தினையும் அதனூடு காணப்படும் பல்வேறு போக்குகளையும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் நோக்குதல் அவைபற்றிய தௌிந்த விளக்கத்துக்கு உதவும். இக்காலத்தில் இலங்கையில் குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் நிலவிய சமூக சமய  பண்பாட்டு நிலைமைகள், அவற்றை ஊக்குவித்த அரசியல் பொருளாதாரக் காரணிகள் ஆகியவற்றின் விளக்கமும் இவ்விலக்கிய வரலாற்று விளக்கத்துக்கு உதவி புரிவதாகும். எனினும் 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ்ப்பகுதிகளின் வரலாறானது தயக்க மயக்கங்கட்கு இடமளிப்பதாகவே உள்ளது. இக்காலப் பகுதியில் மன்னர்களின் வரன்முறைபற்றிய தகவல்கள் கிடைத்தபோதிலும் சமூக முழுமைக்குமான வரலாற்றைத் தொகுத்துக் காண்பதற்கு உதவும் சான்றுகளும் அரிதாகவே காணப்படுகின்றன. வரலாற்றியலில் காணப்படும் இக்குறைபாடு இலக்கிய வரலாற்று மாணவனையும் பாதிக்கவே செய்கிறது.

இத்தகைய சிக்கல்கள் இருப்பினும் தற்போது கிடைக்கின்ற தகவல்களை அடிப்படையாக வைத்து ஈழத்து இலக்கியப் பரப்பினை இலக்கியப்பண்பு, இலக்கிய நெறி ஆகியவற்றின் அடிப்படையில் நோக்கி, தொடாச்சியான இலக்கியவரலாற்றை அமைத்துக் கொள்ளுதல்கூடும். இப்பணியைச் செய்யவே இக்கட்டுரை முயல்கிறது.

16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஈழத்தில் தமிழிலக்கிய முயற்சிகள் தொடச்சியாக நடைபெற்றிருப்பதை அவதானிக்கலாம். இதற்கு முன்னர் எழுந்தனவாகச் சரசோதிமாலை என்னும் சோதிட நூலும், ஈழத்துப் பூதந்தேவனார் என்பாரியற்றிய சில தனிப்பாடல்களும் காணப்படுகின்றன. ஈழத்துப் பூதந்தேவனாருடனேயே ஈழத்துத் தமிழிலக்கியப் பாரம்பரியம் தொடங்குகிறது எனக்கூறுவது இன்று மரபாகிவிட்டது. எனினும் ஈழத்துப்பூதந்தேவனார் ஈழத்தவர்தானா என்பது பற்றிய சந்தேகம் இன்னும் தீர்த்துவைக்கப்படவில்லை. சங்கத்தொகை நூல்களான அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்பவற்றில் இப்புலவர் பெயரால் சில பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அகநானூறு 68, 231, 307 ; குறுந்தொகை 34, 189, 360; நற்றிணை 366 ஆகிய பாடல்கள் ஈழத்துப் பூதந்தேவனாருடையவை. ஈழம் என்ற சொல்லே இப்புலவரை ஈழத்தவராகக் கொள்ள இடமளிக்கிறது. எனினும் ஈழம் என்ற சொல் இலங்கையை மட்டுமே குறித்ததா என்பதும் சிந்திக்க வேண்டியதாகும். ஈழத்துப் பூதந்தேவனாரை ஈழத்தவராக ஏற்றுக்கொண்டால், சங்கக்கால நூல்களின் பின்னெல்லையான கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் எழுந்தனவாகவே இப்பாடல்கள் அமையும். இதற்குப் பின்னர் நீண்டகாலமாகத் ‘தமிழிலக்கிய நூல்கள்’ ஈழத்தில் எழுந்ததற்கு இதுவரை சான்றுகள் எதுவுமில்லை. தம்பதேனியா மன்னர் 3-ஆம் பராக்கிரமபாகுவின் அரசவையில் 1310 ஆம் ஆண்டு போசராச பண்டிதர் என்பவர் சரசோதிமாலை என்னும் சோதிட நூலொன்றை அரங்கேற்றினார். ஈழத்துப் பூதந்தேவனாருக்குப்பின் சரசோதிமாலை இயற்றப்பட்டது வரை எமது இலக்கிய வரலாறு இருண்டதாகவே உள்ளது. இதற்குப் பின்னர் கிடைக்கின்ற இலக்கியங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்டவையே. இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழர் வதியும்போதிலும் 17-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எதுவும் அப்பகுதிகளிலிருந்து எழுந்ததாகத் தெரியவில்லை. ஈழத்து இலக்கியவரலாற்றைக் கற்போர் இந்த அம்சத்தையும் மனங்கொள்ளுதல் வேண்டும்.


13-ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதி தனி யரசாக விளங்கியதென்பதும் தமிழ் மன்னர்கள் அப்பகுதியை அரசுபுரிந்தனர் என்பதும் வரலாற்றுண்மை. இக்காலத்திலிருந்துதான் தமிழிலக்கியங்கள் பலவும் தோன்றியுள்ளன. இக்காலத்திலே இயற்றப் பட்டவையாக கிடைக்கும் நூல்களைச் சிங்கைச் செகராசசேகரன் காலத்தவை (1380 – 1414) எனவும் நல்லூர்ப் பரராசசேகரன் காலத்தவை (1478-1519) எனவும் இவற்றுக்குப் பிந்தியவை எனவும் பேராசிரியர் ஆ. சதாசிவம் தான் தொகுத்த ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம் என்னும் நூலில் வகுத்துள்ளார். இந்நூல்களைப்பற்றி இங்கு குறிப்பிடுதல் இக்கால இலக்கியப் போக்கினை அறிந்துகொள்ள உதவும்.

செகராசசேகரம் (இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை இயற்றுவித்தவர் செகராசசேகர மன்னன் என அறியப்படுகிறது) சோமசன்மாவின் செகராசசேகரமாலை, பரராச சேகரம் (பரராச சேகர மன்னன் பன்னிரு வைத்தியர்களைக் கொண்டு இந்லூலை இயற்றுவித்தான என்பர்), பண்டிதராசர் இயற்றிய தக்கிணகைலாச புராணம், சகவீரர் இயற்றிய கண்ணகி வழக்குரை, கரசைப்புலவர் இயற்றிய திருக்கரசைப் புராணம், கதிரைமலைப்பள்ளு (இந்நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை). அரசகேசரியின் இரகுவம்சம், வையாபுரி (ஐயர்) இயற்றிய வையாபாடல், வைத்தியநாத முனிவர் இயற்றிய வியாக்கிரபாத புராணம், முத்துராச கவிராயரின் கைலாய மாலை முதலியவை 13ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் எழுந்த நூல்களாகும். இந்நூல்களை, சமயம் தொடர்பான நூல்கள், யாழ்ப்பாணத்தரசர்களின் வரலாற்று வரன்முறை கூறும் இலக்கியங்கள், சோதிடம், வைத்தியம் ஆகிய துறைகள் சார்ந்த நூல்கள் என வகைப்படுத்தலாம். முதலாவது பிரிவில் தக்கிணகைலாசபுராணம், திருக்கரசைப்புராணம், கதிரை மலைப்பள்ளு, வியாக்கிரபாதபுராணம், கண்ணகி வழக்குரை என்பன அடங்கும். இரண்டாம் பிரிவில் வையா பாடல், கைலாய மாலை என்பன அடங்கும். இவற்றுடன் பரராச சேகரன் உலா என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம். 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாழ்ப்பாண வைபவம் என்ற நூல் பரராசசேகரன் உலாவைத் தனது முதனூலாகக் குறிப்பிடுகிறது. இந்நூல் தற்போது கிடைக்கவில்லையாயினும் பரராசசேகரன் பேரில் எழுந்ததாகையால் அம்மன்னன்காலத்ததாய் இருக்கலாமெனக் கருதப்படுகிறது. மூன்றாவது பிரிவில் செகராசசேகரமாலை, செகராசசேகரம், பரராசசேகரம் ஆகியவை அடங்குகின்றன. இவற்றில் செகராசசேகர மாலை சோதிட நூல்; ஏனையன இரண்டும் வைத்திய சம்பந்தமான நூல்களாகும்.

மேற்கண்டவாறு பல நூல்கள் எழுந்திருப்பினும் சமயம் தொடர்பான இலக்கியங்களே அவற்றுள் பெரும்பான்மையன. நிலவுடைமைச் சமூகங்களிற் சமயம் பெறும் முதன்மைத்துவத்தையே இது காட்டுகிறது. இந்நிலைமை இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை எமது இலக்கியங்களில் தொடர்ந்து காணப்படுகிறது.

(தொடரும்)

சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்