(முன்னிதழ்த்தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 22

திறனாய்வு

4

தேசிய இலக்கியக் கொள்கை இறுக்கமான அரசியல் சார்பை வௌிக்காட்டாததால் பொதுவாக எல்லாராலும் அஃது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் முற்போக்கு இலக்கியக் கொள்கை திட்டவட்டமான அரசியல் சார்பை உள்ளடக்குவதனால் அதற்கு எதிரான இலக்கியக் கோட்பாடுகள் உருவாகுவதற்கு அது வழிகோலியது. அந்த வகையில் 1960 களின் பிற்பகுதியில் ஈழத்து விமர்சன உலகில் இரண்டு புதிய இலக்கியக் கொள்கைகள் முன்வைக்கப் பட்டன. ஒன்று நற்போக்கு இலக்கியம், மற்றது பிரபஞ்ச யதார்த்த வாதம்.

நற்போக்கு இலக்கியக் கொள்கையை முன்வைத்தவர் எசு. பொன்னுத்துரையாவர். 1950 களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நின்று ‘மக்கள் இலக்கிய’த்தை ஆதாித்துப் புதுமை இலக்கியம் இதழில் கட்டுரை எழுதிய எசு.பொ. 60 களில் முற்போக்கு இலக்கியத்தின் பிரதான எதிர் விமர்சகர்களுள் ஒருவராக மாறினார். முற்போக்கு என்ற சொல்லுக்கு எதிராக நற்போக்கு என்பதைப் பயன்படுத்தியரைத் தவிர திட்டமான கருத்துகள் எதையும் அவர் முன்வைக்கவில்லை. ஆகவே ஈழத்தில் இவரால் மட்டுமே முன்வைக்கப்பட்ட ஓர் இலக்கியக் கோசமாக அது மறைந்தது. சிறந்த படைப்பாளியான எசு.பொ. சில நல்ல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியவர். எனினும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை விடக் கண்டனங்களிலேயே இவர் அதிக சக்தியைச் செலவிட்டுள்ளர். பந்தநூல் மூலமும் உரையும் என்ற இவரது நூல் இவரது விமர்சன ஆளுமை விரயமாக்கப்பட்டதற்குச் சிறந்த உதாரணமாகும்.

மு. தளையசிங்கம் பிரபஞ்ச யதார்த்த வாதம் என்ற கொள்கையை முன்வைத்தார். முற்போக்கு இலக்கியத்துக்கு எதிராகக் காத்திரமான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தவர் இவரே. முற்போக்கு இலக்கியத்தின் சித்தாந்தத் தளமான மார்சீய தத்துவத்தையே இவர் விமர்சனத்துக்கு உட்படுத்தினார். இந்தியாவில் மார்சீயம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆத்திரமுற்று அவத்தைப்படும் வெங்கட்டு சாமி நாதன் போல் அன்றி, மு. தளையசிங்கம் மார்சீயத்தை ஒரு தத்துவார்த்த சமயவழி நின்று விமர்சித்தார். மார்சீயத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொண்டு அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதே இவரது கருத்தாகும்.

“மார்சீயத்தை மறுக்கும் தௌிவற்ற கலைஞர்களும் சிந்தனையாளர்களும் முதலில் அதை உணர்ந்து ஒப்புக் கொண்டால்தான் அவர்களின் மறுப்பு வெறும் மறுப்பாகவே நின்றுவிடாமல் இன்று சாித்திரம் காட்டிநிற்கும் புதிய தருணத்தை இனம் கண்டு பயன்படுத்தி மார்சீயத்தையும் மீறி வளரும் வெற்றியாக மாறுவதற்கு வழிபிறக்கும். அதாவது அந்த உண்மையை ஒப்புக் கொண்டால்தான் அந்த உண்மையின் அடுத்த பக்கத்தையும் உணரலாம்” என்று தளையசிங்கம் எழுதியுள்ளார். மேலைத்தேய மார்சீய எதிர்ப்புச் சிந்தனையாளர்களின் கருத்துகளையும் அரவிந்தர் போன்றவர்கள் பிரதிபலித்த இந்திய ஆன்மிக வாதத்தையும் ஒன்றிணைத்ததே இவரது கொள்கையாகும். அவர் தமது இலக்கியக் கோட்பாடு பற்றி எழுதுகையில் ‘இனி வரவேண்டிய கோட்பாட்டை ‘பிரஞ்ச யதார்த்தம்‘ என்று கூறலாம்; விஞ்ஞானமும் ஆன்மிக ஞானமும், வாழ்க்கை ஆகியவற்றுக் கிடையே பேதம் இருக்காது. வாழ்க்கையே கலையாகும். கலையை அழிக்கும் கலை இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம் இவையே இனித் தோன்றப் போகின்றன. அதுவே மெய்யுள் என்பது இவரது கலை இலக்கியம் பற்றிய கருத்துகளின் சாரமாகும், அந்தவகையில் இவர் தருக்க முரண் நிறைந்த ஆன்மிகக் கற்பனாவாதியேயாவார். மு.பொன்னம்பலம், என்.கே. மகாலிங்கம், இமையவன் முதலியோர் இவரது கருத்துகளின் செல்வாக்கு உட்பட்டவர்களாவர், தளையசிங்கத்தின் போர்ப்பறை, மெய்யுள் ஆகியவை ஈழத்தின் ஒரு குறிப்பிட்ட இலக்கியச் சிந்தனையை வௌிக்காட்டும் மிக முக்கியமான நூல்களாகும். இவரது ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – அவசரக் குறிப்புக்கள் என்ற கட்டுரைத் தொடரும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாம் நோக்கியதில் இருந்து 1960 ஆம் ஆண்டுகளில் இலக்கிய விமர்சனக் கொள்கைகள் ஈழத்தில் சித்தாந்தரீதியில் வளர்ச்சியுற்றன என்பதைக் காணலாம். முற்போக்கு இலக்கியம், தேசிய இலக்கியம் என்ற கோட்பாடுகள் காத்திரமாக வளர்ச்சியுற்றதால் அரசியல் ரீதியில் அதை எதிர்த்தவர்களும் சாியாகவோ, பிழையாகவோ தவிர்க்க முடியாமல் புதிய கோட்பாடுகளையே முன்வைக்க வேண்டி இருந்தது. அதன் விளைவே நற்போக்கு வாதம், பிரபஞ்ச யதார்த்தம் வாதம் என்பனவாகும்.

(தொடரும்)

சிமௌனகுருமௌசித்திரலேகா & எம்நுஃமான்