ஈழத்துத் திறனாய்வு – மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி)
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 19
6. விமர்சனம்
இலக்கிய விமர்சனம் என்பது, இலக்கியப் படைப்புக்களை வகைப்படுத்துதல், வரையறை செய்தல், விளக்கியுரைத்தல், மதிப்பிடுதல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட ஓர் அறிவுத்துறை என்று கூறுவர். பொதுவாக விமர்சனம் இரு வகைகளாகப் பாகுபடுத்தப்படுகின்றது. ஒன்று கோட்பாட்டு விமர்சனம் அல்லது விமர்சனக் கோட்பாடுகள். மற்றது செயல்முறை விமர்சனம்.
இலக்கியப்படைப்புகளை விளக்குவதற்கும், அவை பற்றி அபிப்பிராயம் கூறுவதற்கும் அவற்றை வகைப்படுத்தி மதிப்பிடுவதற்கும் உாிய பொதுவான அடிப்படைகளையும் அளவுகோள்களையும் வகுப்பதைக் கோட்பாட்டு விமர்சனத்துள் அடக்குவர். ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பை அல்லது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குாிய இலக்கியப் படைப்பை நுணுக்கமாக ஆராய்ந்து, விளக்குவது, அல்லது மதிப்பிடுவதைச் செயல்முறை விமர்சனத்தின் பாற்படுத்துவர். எனினும் செயல்முறை விமர்சனம் வௌிப்படையாகவோ, மறைமுகமாகவோ விமர்சனக்கொள்கைகளாலேயே நிருணயிக்கப்படும் என்பது ஒரு பொதுவான உண்மையாகும். இப்பரந்த பொருளில், இலக்கிய விமர்சனம் 20 ஆம் நூற்றாண்டில் இருந்துதான் ஈழத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியது. நவீன இலக்கிய வடிவங்களான புதினம், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சியே இத்தகைய விமர்சன முறையின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர், இலக்கியம் பற்றிய சிந்தனை முனைப்பாக இல்லாவிடினும், இலக்கிய, இலக்கண, தத்துவ சாத்திர நூல்களுக்கு உரை எழுதும் மரபு இங்கு இருந்து வந்துள்ளது. உரையின் போது பல்வேறு சான்றுகளைக் காட்டித் தம்மதம் நிறுவும் தருக்க முறையும் கடைப்பிடிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் உரையோ, விளக்கமோ செய்யுள் நூல்களுக்கே எழுதப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறுமுக நாவலரை எமது இலக்கிய விமர்சன மரபின் முன்னோடி எனக் கூறுதல் மரபு. சைவ மதம் சாராத இலக்கியங்களையும் அவர் பதிப்பிக்க எண்ணி இருந்தார் எனினும் சைவசித்தாந்த மரபில் வந்த இலக்கியங்களையே அவர் போற்றினார்.
‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டதே முதனூலாகும்,’ அதை அடியொற்றியே வழிநூலும் சார்பு நூலும் தோன்றும்; அறம், பொருள், இன்பம், வீடு தருதலே நூற்பயன் என்பன போன்ற இலக்கியம் பற்றிய தீர்க்கமான கருத்துக்களை மரபு மரபாக எற்றுக்கொண்டிருந்த அக்கால உரையாசிாியர்களோ, அறிஞர்களோ முனைவன் கண்ட முதல் நூல்களையோ, அதை ஒட்டிய சார்புநூல், வழி நூல்களையோ உரைத்துப்பார்த்து மதிப்பீடு செய்திருப்பர் என நாம் எதிர்பார்க்க முடியாது. எனினும் தாம் சார்ந்த மத அளவுகோல் கொண்டு இலக்கியத்தினைப் பாகுபடுத்தும் தன்மையினை 20 ஆம் நூற்றாண்டின் முன்னர்க் காண்கின்றோம்.
அக்காலக் கட்டத்தில் சைவ சித்தாந்த கலாச்சாரத்தைப் பேணுவதிலும் வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலக்கியங்களுள் கந்தபுராணம், பொியபுராணம் என்பவற்றுக்கே முதன்மை கொடுக்கப்பட்டது. சிலப்பதிகாரம் போன்றவை போற்றப்படவில்லை. பாடலுக்கு விளக்கம் தரும் போது தத்தம் கல்வி அறிவுகளுக்கு ஏற்ப பாடலில் உள்ள சொற்களுக்குப் புதுப்புது வியாக்கியானங்களைத் தந்தனர். சில இடங்களில் சொற்களுக்கு வலிந்து பொருள் காணும் முயற்சிகளாகவும் இவை மாறின.
இவ்வியாக்கியான முறையில் இலக்கிய இரசனையே முக்கியமானதாகக் கொள்ளப்பட்டது. இலக்கிய ஆய்வு இங்கு மேற்கொள்ளப்படவில்லை. இதனோடு ஒட்டி எழுந்ததே புராணப்படனமாகும். கோயில்களில் மக்கள் முன்னிலையில் புராணங்களுக்கு உரை கூறுவதில் இம் மரபின் தாக்கத்தைக் காணலாம்.
இவ்வண்ணம் தத்துவங்களையும் இலக்கணங்களையும் ஆதாரம் காட்டிக் கற்பனையும் இரசனையும் கலந்து உரை செய்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் ச. பொன்னம்பல பிள்ளையாவர் (1837-1897). இவர் பற்றிப் பண்டிதமணி கணபதிப்பிள்ளை பின்வருமாறு கூறுவர்.
“பொன்னம்பலப்பிள்ளை அழகுகள், நவரசங்கள் சொட்டச் சொட்ட பாடல்களுக்கு உரை விாித்தற்கென்றே பிறந்தவர் என்று சொல்லுவார்கள். அவரை மாணவர்களாகிய மதுகரங்கள் எப்போதும் சூழ்ந்து கொண்டே இருப்பார்கள். உச்சியில் இருந்து உள்ளங்கால் பாியந்தம் பொன்னம்பலப்பிள்ளையினது உருவம் இலக்கிய இரசனையால் ஆனது. புதிது புதிதாகத் தனக்குத் தோன்றுகின்ற இலக்கிய இரசனையை யாருக்காவது வௌிப்படுத்தாமல் இருக்கமாட்டாமை பொன்னம்பலப்பிள்ளையின் நித்திய கலியாண குணங்களில் ஒன்று.”
பொன்னம்பலப்பிள்ளைபற்றிப் பண்டிதமணி கூறும் இக்கருத்து ஏனைய உரையாசிாியர்களுக்கும் பொருந்தக்கூடியதே. பொன்னம்பலப்பிள்ளையுடன் கந்தபுராண உரையாசிாியர்களான உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம். அண்மைக் காலம் வரை இம்மரபு ஆற்றல் வாய்ந்ததாக இருந்து வந்துள்ளது. தொல்காப்பிய உரையாசிாியர் கணேசையர் (1878-1958), திருவாசக உரையாசிாியர் நவநீதக் கிருட்டிண பாரதியார் (1889-1954), பதிற்றுப்பத்து உரையாசிாியர் பண்டிதர் சு. அருளம்பலவனார், கந்தபுராண தட்சகாண்ட உரையாசிாியர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆகியோர் இம்மரபினரே. இவர்களுள் பண்டிதமணி கணபதிப் பிள்ளையும் அவரது பரம்பரையினரும் தனியாக நோக்கப் படத் தக்கவர்கள். இவர்கள் பழைய உரையாசிாியர்கள் வழி வந்தவர்களாயினும் பல விடயங்களில் இவர்கள் பழையவர்களில் இருந்தும் வேறுபடுகின்றனர்.
முன்னைய உரையாசிாியர்களைப்போல இவர்கள் சித்தாந்தக் கோட்பாட்டை அடியொற்றி எழுந்த இலக்கியங்களை மாத்திரம் போற்றவில்லை. இலக்கிய இன்பம் தரும் எந்த நூலையும் வரவேற்றனர். பண்டைய தமிழ்ப் புலவர்களை மட்டுமன்றி தமது சமகால ஈழத்துப் புலவர்களின் பாடல்களிலும் இலக்கிய நயம் கண்டனர். பாடல்களில் வரும் சொற்கள், அதன் அமைப்பு முறை, ஓசைநயம் ஆகியவற்றை இலக்கிய இரசனையின் மூலாதாரமாகக் கொண்டனர்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை திருநெல்வேலி ஆசிாிய பயிற்சிக்கலாசாலையில் தமிழ் ஆசானாக இருந்தமையினாலும் கலாசாலையை மையமாகக் கொண்டு அவர் காவிய பாடசாலை ஒன்றை நடத்தியமையினாலும் தம்முடைய இலக்கியரசனை முறையினை மாணாக்கர் மத்தியில் அவரால் பரப்ப முடிந்தது. இக்காலக் கட்டத்தில் கோப்பாய் அரசினர் ஆசிாியக் கலாசாலையில் கடமையாற்றிய குருகவி மகாலிங்கசிவமும் இத்தகைய இரசனை முறையினைத் தம் சொற்பொழிவுகளின் மூலம் வளர்த்தார்.
இம்மரபில் வந்தவர்களாக கனக. செந்திநாதன், க.ச. அருள்நந்தி. பொ.கிருட்டிணபிள்ளை, கா.பொ. இரத்தினம், க.வேந்தனார் ஆகியோரைக் குறிப்பிடலாம். அக்காலத்தில் வௌிவந்த பத்திாிகைகளில் இவர்கள் எழுதிய கட்டுரைகளிலே இவர்களின் இலக்கிய நோக்கினைக் காண முடிகிறது. பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் இலக்கியவழி, கந்தப்புராண கலாச்சாரம், பாரத நவமணிகள்; பொ.கிருட்டிண பிள்ளையின் இலக்கியச் சோலை, க.பொ. இரத்தினத்தின் இலக்கியம் கற்பித்தல் ஆகிய நூல்கள் இவர்களின் இலக்கிய இரசனை முறையை வௌிக்காட்டுவனவாய் உள்ளன.
பண்டிதமணி பரம்பரையில் கனக. செந்திநாதன் தனியாகக் குறிப்பிடத்தக்கவர். தனிப் புலவர்களை விமர்சனம் செய்து நூலாக வௌியிடும் மரபினை முதல்முதல் ஈழத்து விமர்சன உலகில் தொடக்கி வைத்தவர் இவரே. பண்டிதமணி பற்றிய இவரது மூன்றாவது கண், சோமசுந்தரப் புலவர் பற்றிய இவரது மூன்றாவது கண், சோமசுந்தரப் புலவர் பற்றிய திறவாத படலை, கவிஞர் மு. செல்லையா பற்றிய கவிதைவானில் ஓர் இளம்பிறை ஆகிய நூல்கள் இதற்கு உதாரணங்களாகும். கனக. செந்திநாதன் பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் இரசனை மரபில் வளர்ந்தவராய் உள்ள அதேவேளையில், பண்டிதர் பரம்பரையினர் சிலரால் ‘இழிசனர் இலக்கியம்’ என அழைக்கப்பட்ட நவீன புனைகதைத் துறையினை இலக்கியம் என ஏற்று விமர்சனம் செய்தவராகவும் காணப்படுகின்றார். எனினும் இவரது நவீன புனைகதை பற்றிய மதிப்பீடுகளிலும் இரசனை முறையின் பாதிப்பை ஓரளவு காணக்கூடியதாக உள்ளது.
பண்டிதமணி பரம்பரையினரால் வளர்க்கப்பட்ட இலக்கிய இரசனை முறை, இன்றுவரை பாடசாலைகளிலும் ஆசிாியப் பயிற்சிக் கலாசாலைகளிலும் செல்வாக்குச் செலுத்திவருகின்றது. அன்று கல்வி அதிகாாிகளாக இருந்த க.ச. அருள்நந்தி, அ.வி.மயில்வாகனம், சதாசிவ ஐயர் போன்றோர் இவ்விரசனை முறையினை ஏற்று அதற்கு அளித்த ஊக்கமும் இம்மரபில் வந்தோரே ஆசிாியக் கலாசாலைகளிலும் பாடசாலைகளிலும் இலக்கியம் பயிற்றுவோராக இருந்தமையும் இவ்விரசனை முறை பாடசாலைகளில் செல்வாக்குப் பெறக் காரணமாயிற்று.
இரசனை அடிப்படையில் அமைந்த இலக்கிய விளக்கமே இவர்களது இலக்கிய விமர்சன முறையாக அமைந்தது. எனினும் ஆரம்பத்தில் காணப்பட்ட சைவ சித்தாந்தம் என்ற சமய எல்லையை மீறி ‘இலக்கியம்’ என்ற பரந்த தடத்தினில் இலக்கிய ரசனை செல்வதனையும் அது ஈழத்து இலக்கியத்தைப் போற்றும் தன்மை கொண்டதாக அமைவதனையும் இவர்களிடம் காணலாம். இரசனை முறையாளர்கள் மரபுவழிச் செய்யுள்களில் அமைந்த பிரபந்தங்களையும், தனிப்ப்பாடல்களையுமே ஆராய்ந்து சுவை கண்டனர். உரைநடையில் எழுந்த நவீன இலக்கியங்களான புதினம், சிறுகதை. நாடகம் ஆகியவற்றை இவர்களிற் பெரும்பாலோர் இலக்கியங்களாக ஏற்கவில்லை. இலக்கியம் பற்றி இவர்கள் வைத்திருந்த கொள்கையே இதற்குக் காரணம் எனலாம்.
Leave a Reply