(முன்னிதழ்த் தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 10

 

அத்தியாயம்  4. புதினத் தொடர்ச்சி

தமிழ் நாட்டுப் புதினங்களைவிட ஈழத்துத் தமிழ்ப் புதினங்கள் கூடியளவு சமூகச் சிக்கல்களைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டன என்று கூறுவோர் கணேசலிங்கனின் புதினங்களைத் தவறாமல் சான்று காட்டுவர். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க புதினங்களை எழுதியவராகிய கணேசலிங்கன், தனது படைப்புகள் அனைத்தையும் தொடர்கதைகளாக அன்றி முழுப் புதினங்களாகவே எழுதினார். இளங்கீரன் போல் இவரும் கருத்துகளுக்கே முதன்மை கொடுப்பர். அதனால் இவரது கதாபாத்திரங்கள் பல அனுபவச் செழுமை குறைந்த, கருத்துகளின் சார்பாளர்களாகவே காட்சியளிக்கின்றனர். தத்துவத் தௌிவு இருக்கும் அளவு அதனை வாழ்க்கை அனுபவமாக வௌிப்படுத்துவதற்குாிய அனுபவ வளம் இல்லாமலிருப்பது இதற்குக் காரணமாகலாம். இவரது கடைசிப்படைப்பான ‘மண்ணும் மக்களும் ‘ புதினமாக அன்றிக் கருத்துப் பரப்புரையாகவே அமைந்து விட்டதற்கும் இதுவே காரணம் எனலாம். ஆயினும் அவரது சடங்கு, தரையும் தாரகையும் ஆகியவை இக் குறைபாட்டுக்குள் அடங்காத நல்ல புதினங்கள் ஆகும்.

அடிநிலை மக்களின் வாழ்க்கையையும் சிக்கல்களையும் எழுத்தில் வடிக்கும் முயற்சியில், தமிழ் மக்களிடையே அடக்குமுறையின் வடிவமாக இருக்கும் சாதிச் சிக்கலும் புதினங்களில் இடம் பெற்றன. குறிப்பாக அறுபதுகளில் யாழ்ப்பாணப் பகுதியில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டம், ஆலய நுழைவு இயக்கங்கள் ஆகியவை இலக்கியத்திற்கும் உந்துதலை அளித்தன. இத்தொடர்பில் செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம், போர்க்கோலம் ஆகியவை பற்றி மேலே கூறப்பட்டது. கே. தானியலின் பஞ்சமர் புதினமும் (1972) இப் போராட்ட அனுபவங்களின் அடிப்படையில் எழுந்ததாகும்.

“இந்தப் புதினத்திற்கான மூலக்கருவை வலிந்து தேட வேண்டிய நிருப்பந்தம் எனக்கேற்படவில்லை. இதில் நடமாடும் பாத்திரங்களும் நான் சிருட்டித்தவையல்ல. இதில் வரும் சம்பவங்களும் கற்பனா லோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டவையல்ல. எல்லாம் யதார்த்த உலகில் அன்றாட வாழ்வில் எளிய மக்கள் எனக் கூறப்படும் பஞ்சப்பட்ட மக்கள் தம் மீது சுமத்தப்பட்டுள்ள நுகத்தடியைச் சுழற்றியெறிந்து, தம்மீது சுமத்தப்பட்டுள்ள வாழ்வை நிமிர்த்த எடுத்த முயற்சிகள், நடவடிக்கைகள், போராட்டங்களிலிருந்து பெற்ற அனுபவங்களே.”

மேற்கண்டவாறு தமது பஞ்சமர் புதினத்தின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார் கே.தானியல். கதை சொல்லும் கலை நன்கு கைவரப்பெற்ற தானியல் தனது அனுபவங்களின் பின்னணியில் இப் புதினத்தை எழுதினார். தானியலின் இன்னோர் புதினமான போராளிகள் காத்திருக்கிறார்கள் பஞ்சமர் அளவு முக்கியத்துவம் பெறவில்லை.

அடிநிலை மக்களைச் சார்ந்து இலக்கியம் படைத்தோாில் பெனடிக்கு பாலனும் இடம் பெறுகிறார். அவரது சொந்தக்காரன் மலைநாட்டுத் தோட்டத் தொழிலாளாின் அவலமிக்க வாழ்க்கையையும், போராட்டத்தையும் சித்தாிப்பதாகும். இந் நாவலுக்குச் சில ஆண்டுகள் முன்னர் வௌிவந்த நந்தியின் மலைக்கொழுந்தும் (1964) இதே பிரச்சினையைத் தொட்டதெனினும் நந்தியின் அணுகுமுறை மனிதாபிமானக் கண்ணோட்டம் கொண்டதாகும். கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சை (1964) புதினமும் மலைநாட்டுத் தொழிலாளர் பற்றியது. இந்தியாவிலிருந்து தொழிலாளர் இலங்கைக்கு வரத் தொடங்கிய காலத்திலிருந்து அடுத்த மூன்று தலைமுறை காலத்தைப் பின்னணியாக்கி இயற்பண்புடன் தொழிலாளாின் அவலநிலையைச் சித்தாித்தது இது. இத் தொடர்பில் தௌிவத்தை சோசப்பின் காலங்கள் சாவதில்லை என்ற புதினத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சி. சுதந்திரராசா, செ. யோகநாதன், எசு. அகத்தியர் ஆகியோரும் இடதுசாாி அரசியல் சித்தாந்தத்தால் கவரப்பட்ட எழுத்தாளர்களாவர். இவ்வகையில் சுதந்திரராசாவின் ‘மழைக்குறி’யும் யோகநாதனின் சில புதினங்களும் குறிப்பிடத்தக்கன.

ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து ஈழத்துத் தமிழ்ப்புதின இலக்கியத்தில் ஏற்பட்ட மாறுதலும் புதிய போக்கும் இதுவரை சுட்டப்பட்டது. அடிநிலை மக்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டது மட்டுமல்லாது அவர்களது வாழ்க்கையையும் போராட்டத்தையும் மார்க்குசீய அரசியல் கண்கொண்டு நோக்கிய இப்புதிய பண்பானது எழுபதின் முற்பாதியிலும் கூடப் புதின இலக்கியத்தின் தலைமைப் போக்காகவேயிருந்தது.

இதே காலப்பகதியில் இப் போக்குக்குப் புறம்பான சில புதினங்களும் வௌிவந்துள்ளன. எசு. பொன்னுத்துரையின் தீ (1961) சடங்கு (1971) ஆகிய புதினங்கள் குறிப்பிடத்தக்கன. எழுத்தாற்றல் கைவரப்பெற்ற எசு.பொ.வின் தீ பொருளிலும் வடிவிலும் ஏனைய ஈழத்துப் புதினங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் பாலியலைத் துணிச்சலுடன் வௌிப்படையாகக் கையாண்டது என்பதைத் தவிர இப் புதினம் எவ்வகையிலும் இலக்கிய முதிர்ச்சியை வௌிக்காட்டவில்லை. அவரது சடங்கு யாழ்ப்பாணத்துக் கீழ்மத்தியதர மாந்தரின்மனோ விகாரங்களை இயற்பண்புடன் அணுகியதாகும். அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயதுவந்துவிட்டது (1973) பலரது பாராட்டுதல்களையும பெற்ற புதினம். எழுபதுக்குப் பின் புதினஇலக்கியத் துறையில் புகுந்தவரான அருள் சுப்பிரமணியம், சிங்களப் பெண்ணைக் கலப்பு மணம் புாிந்த பாத்திரமொன்றைக் கதாநாயகனாகக் கொண்டு அதன் பின்னணியையும் சிக்கல்களையும் நேர்த்தியாகச் சித்திாித்துள்ளார். அண்மையில் வௌிவந்த ‘அக்கரைகள் பச்சையில்லை’ அன்னிய நாட்டுக் கப்பல்களில் வேலை செய்யும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டது என்ற வகையில் முற்றிலும் புதியதோர் பொருளை அறிமுகப்படுத்தினும் நடைமுறைக்கு ஒத்துவராத நிகழ்ச்சிகள் புதினத்தின் யதார்த்தத்திற்கு ஊறு விளிவிக்கின்றன. இவரது இன்னொரு நாவலான நான் கெடமாட்டேன் இவருக்குத் தோல்வியையே தந்தது. முதல் நாவல் சிறந்த படைப்பாயிருக்க அதற்குப் பிந்தியவை தரமிழந்து போவது கவனிக்கத்தக்கது.

எழுபதில் பிரபலம் பெற்ற இன்னோர் புதின ஆசிாியர் செங்கை ஆழியானாவர். ஆக்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, நந்திக்கடல், பிரளயம், இரவின் முடிவு முதலானவற்றை அவர் எழுதியிருப்பினும் 1977-இல் வௌியான காட்டாறு என்ற புதினமே இலக்கிய உலகில் அவரைத் தகுதிபெற வைத்தது. வன்னிப் பிரதேசக் குடியேற்றப் பகுதிகளில் அரசாங்க அதிகாாிகள், முதலாளிகள் ஆகியோர் சாதாரண விவசாயிகளைச் சுரண்டுவதையும், குடியேற்றப் பகுதி வாழ்க்கையின் உள்முரண்பாடுகளையும் அவற்றின் இயல்பு குன்றாத வகையில் தமது புதினத்தில் காட்ட முனைந்துள்ளார் செங்கையாழியான். அ.பாலமனோகரனும் வன்னிப் பகுதிச் சிற்றூர்ப் பின்னணியில் நிலக்கிளி, குமாரபுரம் ஆகிய புதினங்களை எழுதியுள்ளர். எசு. சோன்ராசன் மட்டக்களப்புப் பகுதிச் சிற்றூரொன்றினைப் பின்னணியாகக் கொண்டு போடியார் மாப்பிள்ளையை எழுதியுள்ளார். வை. அகமதின் புதிய தலைமுறை, சாந்தனின் ஒட்டுமா ஆகியவையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இதுவரை யாழ்ப்பாணம், கொழும்பு, மலைநாடு ஆகிய பகுதிகளைப் பகைப்புலங்களாகக் கொண்டு மட்டும் புதினம் எழுதப்பட்ட நிலையிலிருந்து மாறி வவனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளையும் பின்னணியாகக் கொள்ளும் நிலை எழுபதுகளில் வௌியான புதினங்களின் சிறப்பம்சம் எனலாம். மேலே காட்டிய சில புதினங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

 

3

புதினத்தின் பொருளைப் பொறுத்தும் அணுகு முறையைப் பொறுத்தும் மாறுதலும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதெனினும் உருவத்திலோ கதை கூறும் முறையிலோ அடிப்படையில் பாாிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையெனலாம். சுருக்கமாகச் சொன்னால் புதின இலக்கியத்தில் இங்கு பாிசோதனை முயற்சிகள் இடம்பெறவில்லை. மார்க்குசீய புதின ஆசிரியர்களின் புதினங்களில் கலைச் செழுமை குறைவு என்ற குற்றச்சாட்டு உண்டு ; அதில் உண்மையில்லாமலும் இல்லை. ஆனால் அதற்குப் புறம்பான புதினஆசிாியர்களின் படைப்புகளில் ஆழமான தேடலும் கலைச்செழுமையும் உடைய சிறந்த புதினங்கள் ஒன்றுகூட இல்லை. தமிழகப் புதின வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஈழத்துத் தமிழ்ப் புதினஇலக்கிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பிரதான காரணிகளில் முதன்மையானது வெளியீட்டு வசதிக் குறைவாகும். வெளியீட்டு நிறுவனங்கள் வளர்ச்சி பெறாத நிலையிலும், புத்தக வௌியீட்டுச் செலவு உயர்ந்திருக்கும் நிலையிலும் இலக்கிய ஆர்வம் கொண்ட எழுத்தாளர் சிலர் சொந்தப் பணத்திலேயே புதினங்களை வௌியிட்டுள்ளனர். தரமான புதினங்களை வௌியிட முன்வந்த நிறுவனங்கள் கூட நிதிப்பலம் அற்றவையாகவிருந்தன. இன்றுள்ள நிலையில் வீரசேகாி நிறுவனம் ஒன்றே வெற்றிகரமாகப் பல புதினங்களை வௌியிட்டு விற்பனை செய்து வருகின்றது. 1971-ஆம் ஆண்டு தென்னிந்திய சஞ்சிகைகள், நூல்கள் ஆகியவற்றின் இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டின் விளைவாக இந் நூல்வௌியீட்டு நிறுவனம் 72 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்றுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட புதினங்களை வௌியிட்டுள்ளது. அண்மைக்காலத்தில் எழுத்துலகிற்கு அறிமுகமாகிய பாலமனோகரன், கே. விசயன், ஞானசேகரன், ஞானரதன், கே. ஆர். டேவிட்டு, வை. அகமத்து முதலியோரது புதினங்களை இந் நிறுவனமே வௌியிட்டது. எனினும் வணிகத்தையே முதல் நோக்கமாகக் கொண்ட நிறுவனம் இலக்கியத் தரத்திலோ பொருளிலோ எத்தகைய அக்கறை செலுத்தும் என்பது ஐயப்பாட்டிற்குாியது. தூரத்துப்பச்சை, காட்டாறு, நான் சாகமாட்டேன், போராளிகள் காத்திருக்கின்றனர் முதலிய குறிப்பிடத்தக்க நூல்களை இந் நிறுவனம் வௌியிட்டிருப்பினும் அதன் சாய்வு சுவைமிகுந்த கதையம்சம் கொண்ட புதினங்கள் பக்கமே என்பது தௌிவு. இந் நிறுவனம் வெயிட்ட நா. பாலேசுவாி, கமலா தம்பிராசா, அன்னலட்சுமி இராசதுரை, இந்துமகேசு, உதயணன் முதலியோரது புதினங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். வாசக ரசனையை குறிப்பிட்ட வகையில் உருவாக்குவனவாகவும். எழுத்தாளரைக் கட்டுப்படுத்துவனவாகவும் இத்தகைய நிறுவனங்கள் அமைந்துவிடும் அபாயம் எப்போதும் உண்டு. இதுமட்டுமன்றி நூல் வௌியீட்டுச் செலவுகள் மேன்மேலும் உயரும் நிலையிலும், இறக்குமதிக்கட்டுப்பாடு சமீபகாலத்தில் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தென்னிந்திய சஞ்சிகைகள் நூல்கள் ஆகியவற்றின் போட்டியை எதிர்நோக்க வேண்டிய நிலையிலும் புதினஇலக்கிய வளர்ச்சி மட்டுமன்றி ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சியே தேக்கடையும் அபாயம் ஏற்படக்கூடும். எழுத்தாளர் பரந்த கொள்கை அடிப்படையில் இணைந்து செயல்படுவதற்கான அவசியத்தை இந்நிலமை வற்புறுத்துகிறது.

(தொடரும்)

சிமௌனகுருமௌசித்திரலேகா & எம்நுஃமான்