(முன்னிதழ்த்தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 18

நாடக இலக்கியம் தொடர்ச்சி

 

4



ஈழத்துக் கவிதை நாடகங்கள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். கவிதை நாடகம் என்ற பதப்பிரயோகம் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. சிலர் கவிதை நாடகத்தைக் கவிதை வகைகளுள் ஒன்றாகக் கருதுவர். செய்யுள் நடையில் அமைந்துள்ளமையாலேயே இவ்வாறு கருகின்றனர் போலும். இதனால் கவிதை, நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள்பற்றிக் கருத்துக் குழப்பம் ஏற்பட வழியுண்டு. செய்யுள் நடையில் அமைந்திருப்பினும் இவை நாடகங்களே. இவற்றைச் செய்யுள் நாடகம் அல்லது பாநாடகம் என்று அழைப்பதன் மூலம் இக்குழப்பத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

1950ஆம் ஆண்டுகளின் பின் அரைவாசியில் இருந்தே இங்கு பாநாடகங்கள் கணிசமான அளவில் தோன்றத் தொடங்கின. இலங்கையில் முதலாவது பாநாடகமாக கதிர்காமர் கனகசபையின் நற்குணனைச் சொல்வர். ஆரம்பக் காலப் பாநாடகங்கள் பெரும்பாலும் நடிப்பதற்கன்றிப் படிப்பதற்கே எழுதப்பட்டன. மஹாகவி, முருகையன் ஆகியோரே இத்துறையில் அதிகம் உழைத்தவர்களாவர். மகாகவியின் அடிக்கரும்பு, சேனாபதி, திருவிழா ஆகியனவும், முருகையனின் தாிசனம், வந்து சேர்ந்தன போன்றவையும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.

60 ஆம் ஆண்டுகளில் மேடைப் பாநாடகங்கள் பல எழுந்தன. நீலாவணனின் மழைக்கை, மகாகவியின் புதிய தொரு வீடு, கோடை முருகையனின் கடூழியம், கோபுர வாசல், அம்பியின் வேதாளம் சொன்ன கதை முதலியன இக்காலப் பகுதியில் மேடையேறின. இலங்கையில் தோன்றிய பாநாடகங்களைப் பொதுவாக மூன்று வகைக்குள் அடக்கலாம். ஒன்று பழந்தமிழ் இலக்கியச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை. இரண்டு நடைமுறைச் சமூக வாழ்வை அடிப்படையாகக் கொண்ட யதார்த்தப் போக்கானவை. மூன்று குறியீட்டுப் பாங்கானவை. வந்து சேர்ந்தன, கோபுரவாசல், மழைக்கை போன்றவை முதல் வகையின. கோடை, புதியதொரு வீடு, போன்றவை இரண்டாம் வகையின. கடூழியம் மூன்றாம் வகையைச் சேர்ந்தது. அண்மையில் பா. சத்தியசீலனின் பாட்டுக்கூத்து என்ற சிறுவர்க்கான பாநாடக நூல் ஒன்றும் வௌிவந்துள்ளது.

ஈழத்து வானொலி நாடகங்களையும் இங்கு குறிப்பிடுதல் அவசியம். வானொலி நாடகங்களிற் பெரும்பாலானவை நூலுருப் பெறவில்லை. இலங்கையர்கோனின் மிசுடர் குகதாசனும் (1957) மாதவிமடந்தையும் (1958) முருகையனின் தாிசனமும், எசு.பி.கே.யின் பொற்கிழியும் நூலுருப் பெற்ற வானொலி நாடகங்களாகும். பொதுவான ஈழத்து நாடகப் போக்கிற்கு வானொலியும் விதிவிலக்கில்லை. வானொலி ஒரு வெகுசனத் தொடர்புச் சாதனமானமையினாலும் அரச கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிறுவனமானமையினாலும் சில எல்லைகளை மீறி நாடகம் போட அதனால் முடியவில்லை. எனினும் இடையிடையே சில நல்ல நாடகங்களையும் வானொலி அளிக்காமலில்லை. சிவபாதசுந்தரம், சானா, வாசகர் போன்றோர் வானொலி நாடகத் துறையில் உழைத்தவர்கள். வாசகர் வசனம் எழுதிய தணியாததாகம் வானொலி விசிறிகளின் பாராட்டுதலைப் பெற்றது. முன்னையவர்களை விட வானொலி நாடக வளர்ச்சிக்கு வாசகர் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கது. இயல்பான பேச்சு மொழியினை சனரஞ்சகப் படுத்தியமையை வானொலி நாடகங்களின் முக்கிய பணியாகக் குறிப்பிடலாம்.

பத்திாிகைகளும் அவ்வப்போது சில நாடகங்களை வௌியிட்டுள்ளன. குறிப்பாக 1967 ஆம் ஆண்டிலே தினகரன் பத்திாிகை நாடக விழா ஒன்றினை அகில இலங்கை அளவிலே நடத்தியது. ஈழநாடு பத்திாிகை ஓரங்க நாடகப் போட்டி ஒன்றினை நடத்தி முதன்மை பெற்ற நாடகங்களை விடிய இன்னும் நேரமிருக்கு (1971) என்ற தொகுதியாக வௌியிட்டது. ஈழகேசாி, வீரகேசாி முதலிய பத்திாிகைகளும், அஞ்சலி, கலைச்செல்வி முதலிய சஞ்சிகைகளும் ஓரங்க நாடகங்களை வௌியிட்டன. மல்லிகை நாடக விமர்சனங்களை வௌியிட்டது. இவ்வகையில் பத்திாிகை, வானொலி ஆகிய வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈழத்தமிழ் நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றின.

இவற்றைவிட ஈழத்து நாடகத்துறையில் ஈடுபட்டவர்கள் சிலர் தமது நாடக அனுபவங்களையும், விவரங்களையும் நூலாக வெயிட்டுள்ளனர். கலையரசு சொர்ணலிங்கத்தின் ஈழத்தில் நாடகமும் நானும், ஏ.ரி.பொன்னுத்துரையின் வெள்ளிவிழா மலர் ஆகியன இதற்கு உதாரணங்களாகும். 1917 தொடக்கம் 1973 வரை ஈழத்தில் வௌிவந்த நாடக நூல்களை ஆராய்ந்து முதுகலைமாணிப்பட்டம் பெற்ற சொக்கனின் ஆய்வுக் கட்டுரை விாிவாக எழுதப்பட்டு 1977 இல் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கியவளர்ச்சி என்ற பெயாில் வௌிவந்துள்ளது. ஈழத்தமிழ் நாடக நூல் விவரங்களை அறிய விரும்புவோர்க்கு இது சிறந்த வழிகாட்டியாகும்.

நூல் முயற்சிகளை விட ஈழத்தமிழ் நாடக ஆராய்ச்சி, நாடக விமர்சனம், நாடகக் கணக்கெடுப்பு ஆகியனவும் ஓரளவு வளர்ச்சிபெற்று வருகின்றன. பேராசிாியர் கா. சிவத்தம்பி, பேராசிாியர் சு.வித்தியானந்தன், பேராசிாியர் க.கைலாசபதி, சி. மௌனகுரு, கே.எசு.சிவகுமாரன், சொக்கன், இ.சிவானந்தன் போன்றோர் இத்துறையிலீடுபட்டு உழைத்து வருகின்றனர்.

இதுவரை நோக்கியதில் இருந்து, ஈழத்தில் மரபுவழி நாடகம் அல்லது நாட்டுக்கூத்து மரபும், பேசி நடிக்கும் நவீன நாடகமும் சமாந்தரமாக வளர்ச்சியடைந்து வந்திருப்பதைக் காணலாம். இவ்விரு நாடக நெறிகளும் 1960களின் பிற்பகுதியில் இருந்து சருவதேச நவீன நாடக அரங்க நெறிகளுக்கு ஏற்பத் தம்மை இயைபுபடுத்திக் கொண்டுள்ளன என்பதையும் காணலாம். ஆயினும் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கியம் இன்னும் எவ்வளவோ வளர்ச்சியடைய வேண்டி உள்ளது. நவீன நாடக அரங்கு பற்றிய சிந்தனை வளர்ச்சி பெற்ற விகிதத்தில் நாடக எழுத்து இங்கு வளர்ச்சி பெறவில்லை. அதனாலேயே சமீப காலத்தில் மொழிபெயர்ப்பு நாடகங்களும், இந்திரா பார்த்தசாரதி, தருமுசிவராமு போன்றவர்களின் அபத்த நாடகங்களும் இங்கு மேடையேற்றப்பட்டன. இது எவ்வாறெனினும் சினிமாவினதும் சபாக்களினதும் இறுக்கமான பிடியில் இருந்து விடுபடத்தவிக்கும் தமிழக நாடக அரங்கைவிட ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு வெகுதூரம் முன்னேறி உள்ளது எனலாம். சிங்கள நாடக அரங்கச் செல்வாக்கு இதற்கு ஒரு முக்கிய காரணியாகும். தமிழ் நாட்டில் மிகச் சமீபத்தில்தான் பாட்சா போன்ற பாிசோதனை நாடகக் குழுக்கள் தோன்றியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்