உதவிய உள்ளங்கள் – பேரரசி முத்துக்குமார்
உதவிய உள்ளங்கள்
“மணியாகி விட்டது. நிகழ்ச்சி முடிவதற்குள் போகணும்பா…..சீக்கிரம் வண்டியை ஓட்டுங்கள்……இல்லை என்றால் இசையரசி ஆசிரியர் என்னைத்தான் திட்டுவார்கள்,” என்று தமிழரசன் கூறினான்.
“இரு…இரு…இது என்ன ‘ஃபார்முலா 1’ வண்டியா? வேகமாக போவதற்கு?” என்றார் அவன் அப்பா அமுதன்.
திரு. அமுதன் ஊர்தி, சாலையில் போய்க் கொண்டிருந்தது.
அப்போது….
யாரோ வயதான மூதாட்டி ஒருவர் அவர்களின் ஊர்தியின் முன் மயக்கமாகி ‘தொப்’ என்று விழுந்தார். இருவரும் பயந்து விட்டனர். வாகனத்தை விட்டு இறங்கி அந்த மூதாட்டியின் முகத்தில் தாங்கள் கொண்டு வந்த நீரைத் தெளித்தனர்.அவர்களைப் பார்த்து மீண்டும் மயக்கமடைந்தார். அவர் மீது சிராய்ப்புக் காயங்கள். அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது…
‘நேரமாகுதே! பாட்டியைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. என்ன செய்யலாம்?’ என்று சற்று எண்ணினான் தமிழரசன். இரக்கம் அவன் மனத்தில் வழிந்தோடியது.
உடனே, அந்த மூதாட்டியைத் தன் மகிழுந்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தார் தமிழரசன் அப்பா. அந்த மூதாட்டியின் சட்டைப் பையில் உள்ள கைப்பேசியை எடுத்து அந்த மூதாட்டியின் கணவருக்குத் தொடர்பு கொண்டு நடந்தவற்றைக் கூறினார்
அதன் பிறகு, அவன் பள்ளிக்கு வந்தடைந்தான். அவன் அப்பா அவனைப் பள்ளியில் இறக்கி விட்டுச் சென்றார். பள்ளி நுழைவாயிலில் அவன் ஆசிரியை, திருமதி இசையரசி முறைத்துக் கொண்டே அவனுக்காகக் காத்திருந்தார்.
“என்னடா இவ்வளவு நேரம்?” என்று கேட்டார்.
உண்மையைச் சொன்னால் ஊர் சுற்றிவிட்டு மழுப்புகிறாயா எனக் கேட்பாரே என அஞ்சி “அது வந்து…அது வந்தும்மா….,” என்று சொற்களை மென்று விழுங்கினான். அவன் அகன்ற நெற்றியில் முத்து முத்தாய் வியர்வையின் ஆதிக்கம்….பயத்தால் கால்கள் பரதநாட்டியம் ஆடின.
“காரணம் சொல்கிறாயா இல்லை அரை வேண்டுமா?” என்று கையை ஓங்கினார் ஆசிரியர்.
திடீரென்று….
‘கிரிங்…கிரிங்…கிரிங்…கிரிங்…’ என்று அவரின் கைப்பேசி அலறியது. எடுத்தார். எதிர் முனையில் அவர் அப்பா.
“நான்தான் அப்பா பேசுகிறேன். இசையரசி உனக்கு ஒன்று தெரியுமா? உன் அம்மா சந்தையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் சாலையில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்கள்.”
“என்னப்பா சொல்கிறீர்கள்? அம்மா இப்பொழுது எப்படி இருக்கிறார்கள்? நல்லா இருக்கிறார்கள்தானே?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார்.
“நல்ல வேளை நாம் கும்பிடும் தெய்வம் நம்மைக் கை விடவில்லை. யாரோ இருவர் அவர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்து எனக்குத் தகவல் கொடுத்தார்கள். பெயர் கேட்டபோது, தமிழரசன் அவரோட அப்பா அமுதன் என்றார்கள்.” என்று கூறினார்.
ஆசிரியைக்குக் கையும் ஓடவில்லை…காலும் ஓடவில்லை….உடனே, தமிழரசனை இறுகப் பற்றிக் கொண்டு “ எதுவும் தீர விசாரிக்காமல் உன்னை அடித்திருப்பேன். என்னை மன்னித்துவிடு தமிழரசன். நீயும் உன் அப்பாவும் காப்பாற்றியது என் அம்மாவைத்தான். மிக்க நன்றி. என்றார்.
“பரவாயில்லை அம்மா…,” என்று கூறியவாறே நிகழ்சியில் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் தமிழரசன்.
நாளை, பள்ளியில் இவனும் இவன் அப்பாவும் செய்த தொண்டினை எல்லாரிடமும் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணியபடியே ஆசிரியையும் வீடு திரும்பினார்.
- பேரரசி முத்துக்குமார்
- மாரா அறிவியல் கல்லூரி, பாரிட்டு பேராக்கு (parit perak, malaysia)
Leave a Reply