உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் -ப. மருதநாயகம்
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
பின்னிணைப்பு
உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்
1/5
செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வெளியீடாகப்(2022) பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகத்தின், ‘உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்’ நூல் வந்துள்ளது. இந்நூல் குறித்து அணிந்துரையில் நிறுவன இயக்குநர் பேரா.இரா.சந்திரசேகரன், “உயர்தனிச்செம்மொழித் தமிழின் உயர்வுக்கு உழைத்த சான்றோ்கள் பலராவர். அவர்களின் உண்மை உழைப்பை முறையாக எடுத்துச்சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும். அந்தத் தேவையை உரிய முறையில் செய்தளித்துள்ளார் பேராசிரியர் ப.மருதநாயகம் அவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலில் தமிழ், செம்மொழியேயென்று முதற்குரல் கொடுத்த மூதறிஞர்கள் பதினால்வர் பங்களிப்பு குறித்தும் பதினைந்தாவதாக அகழ்வாராய்வாளர்கள் குறித்தும் நமக்கு நுண்மையாகவும் ஆழமாகவும் பேரா.ப.மருதநாயகம் விளக்கியுள்ளார்.
இந்நூலில் இடம் பெற்றுள்ள படைப்புகளுக்கான அறிஞர்கள் வருமாறு: -1. எல்லீசர், 2. போப்பு அடிகளார், 3. பரிதிமாற்கலைஞர், 4. மறைமலை அடிகள், 5. விபுலானந்த அடிகள், 6. திரு.வி.கல்யாணசுந்தரம், 7. தெ.பொ.மீனாட்சிசுந்தரன், 8. இலக்குவனார், 9. தனிநாயக அடிகள், 10. தேவநேயப் பாவாணர், 11. கைம் இராபின், 12. ஏ.கே.இராமானுசன், 13. பிரான்சுவா குரோ, 14. சியார்சு ஆர்த்து, 15. அகழ்வாராய்வாளர்கள்.
- அறிஞர் எல்லீசர்
காலுடுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை வெளியிடுவதற்கு அரை நூற்றாண்டிற்கு முன்னரே தமிழ்க்குடும்ப மொழிகளின் தனித்தன்மையை அறிவித்தவர் அறிஞர் எல்லீசர். திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரங்களிலிருந்து தெரிந்தெடுத்த சில குறள்களுக்குக் கவிதை நடையில் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்துள்ளார். இவற்றை விளக்க அவர், தொல்காப்பியம், சங்க இலக்கியம், நீதி இலக்கியம், காப்பிய இலக்கியம், இலக்கணம், பிற்கால இலக்கியங்கள் எனப் பலவற்றிலிருந்தும் மேற்கோள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கும் இவர் புலமை நயத்தை ஆசிரியர் பாராட்டுகிறார்.
புலமைத் திறனும் தமிழ்ப்பற்றும் இருப்பினும் அவற்றை விஞ்சிய சாதிப்பற்றும் இனப்பற்றும் உள்ளோர் உள்ளனர். எனவேதான், திருவள்ளுவர்,
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர் (திருக்குறள் 514)
என்றார். அவ்வாறு திகழும் அறிஞர்களுள் ஒருவராக எடுத்துக்காட்டாக அறிஞர் உ.வே.சா. விளங்குகிறார் என்பதை எல்லீசரின் மேற்கோள் பாடல் நமக்கு விளக்குகிறது.
“அறம்பாடிற்றே ஆயிழை கணவ” என்னும் அடி வரும் புறநானூற்றுப்பாடலில் (361)
“குரவர்த்தப்பிய கொடுமையோர்க்கும்”
என இடம் பெற்றுள்ளது. ஆனால், உ.வே.சா. பதிப்பில்,
“பார்ப்பார்த் தப்பிய” என இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் இடம் பெற்றுள்ள வேறு சில பாட பேதங்களைக் குறிப்பிடும் உ.வே.சா. குரவர் என்பது குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை.
பரிமேலழகரின் உரையில் காணும் தவறுகளை அவ்வப்போது தயங்காது சுட்டிக்காட்டும் எல்லீசர், பரிமேலழகர் உரையில் வரும் அழகிய பகுதிகளை மதி நுட்பத்தோடு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் என இவரின் நடுவுநிலைமையைப் பாராட்டுகிறார்.
திருக்குறளில் இடம் பெறும் சில சொற்களையும் சில தொடர்களையும் கொண்டு கீழை மேலை மொழிகளின் தனித்தன்மைகளை விளக்குகிறார். எல்லீசரின் தமிழ் யாப்பிலக்கணம் குறித்த ஆங்கிலக் கையெழுத்துப்படி மூலம் அவரது இலக்கணப் புலமையையும் வியந்து போற்றுகிறார் ஆசிரியர். மொழியியல் வல்லுநர் ஏ.சி.பருனல், எல்லீசு உண்மையிலேயே ஒரு பெருங்கல்வியாளர் என்கிறார். போப்பு அடிகள், வியத்தகு திறன பெற்ற கீழ்த்திசையாளர் என எல்லீசைப்போற்றுகிறார். இவையாவும் உயர்வு நவிறசி அன்று என்று ஆசிரியர் கூறுகிறார்.
இவ்வாறு எல்லீசரின் திறனாய்வுத் திறனையும் மொழிபெயர்ப்புச் செம்மையையும் புலமைநயத்தையும் ஆசிரியர் நன்கு விளக்குகிறார்.
நிறைவாக, “எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லீசர் தமிழைச் செம்மொழித் தகுதியுடையதென்று கண்டு கொண்டதும், அதனை இந்திய நிருவாகப் பணித்துறைக்கு வரும் ஆங்கிலேயருக்கு நவீன மொழியாகவும் செம்மொழிகளில் ஒன்றாகவும் அறிமுகப்படுத்தியதும் வியற்து போற்றற்குரியதாகும்” என்கிறார் ஆசிரியர்.
- போப்பு அடிகளார்
போப்பு அடிகளார் ஆக்குசுபோர்டு பல்கலைக்கழகத்துப் பேராசிரியராக இருந்தவர்; மொழிபெயர்ப்பு, அகரமுதலி, இலக்கணம், மொழியியல், வரலாறு, சமயம் ஆகிய துறைகளிலெல்லாம் அவர் இயற்றிய நூல்கள் தமிழ் அறிஞர்களுக்கு முன்மாதிரிகளாகத் திகழ்ந்தன என இரண்டாவது கட்டுரையில் போப்பு அடிகளார் குறித்து விளக்குகிறார்.
திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போப்பு அடிகளார் தமிழின் தனித்தியங்கும் ஆற்றலையும் சொல்வளத்தையும் பாராட்டி தமிழ் செழுமையான, மூலச் சொற்களஞ்சியம் கொண்ட தனித்தியங்கும் மொழி (Tamil is an independent language with a copious and original vocabulary) என்று குறிப்பிடுகிறார்.
தமிழ் அறநூல்கள் கையாளும் வெண்பா யாப்பை சமற்கிருத யாப்புகளோடு ஒப்பிட்டுத் தமிழ்யாப்பிலக்கணத்தின் சிறப்பைப் போப்பு தெளிவாக எடுத்துக்காட்டுவதைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.இலக்கண விளக்கங்கள், மொழிபெயர்ப்புகள் மூலம் போப்பு அடிகளாரின் சிறப்பை ஆசிரியர் நன்கு விளக்குகிறார்.
தனிப்பாசுரத் தொகையின் ஆங்கில மொழிபெயர்ப்பு முன்னுரையில் , ஆக்குசுபோர்டு பல்கலைக்கழகத்தில் நன்னூல், குறள், நாலடியார், திருவாசகம் ஆகிளவற்றை மொழிபெயர்த்து ஆய்வுப்பதிப்புகளாக வெளியிட்டதன் மூலம், அச்செவ்விலக்கியங்களை உலக இலக்கிய அரங்கிற்குக் கொண்டு செல்ல என்னால் ஆனதை எல்லாம் செய்துள்ளேன். தமிழ்க்கவிதை உலகில் ஓரளவு வெற்றியோடு நான் கால்பதிக்காத மூலை முடுக்கு ஏதும் இல்லை. தமிழ்மொழி, தமிழ்க்கவிதை, தமிழ் மக்கள் மீதெல்லாம் நான் பேரன்பு உடையேன் என்பது பொய்நடிப்பன்று. எனப் போப்பு அடிகள் குறிப்பிட்டதையே நிறைவாகத் தந்துள்ளார். அன்னார் தமிழுக்குச் செய்துள்ளது, இதனைப் போல்பல மடங்கு பாராட்டுக்குரியது என இக்கட்டுரையை ஆசிரியர் முடிக்கிறார்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்
ப.மருதநாயகம்
செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600 100
விலை உரூபாய் 500/-
(தொடரும்)
Leave a Reply