சென்னை மணியம்மையார் குளிரரங்கத்தில் கார்த்திகை 01, 2050 / நவம்பர் 17 அன்று முற்பகல் உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் 110ஆவது பிறந்த நாள் பெருமங்கலநாள் விழாவும்  தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்பட்டன.

இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர் இசைமணி சத்தியசீலன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். தொடர்ந்து உலகத்தமிழர் பேரவையின் தலைவர் திரு அக்னி சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், விழாவின் நோக்கங்களையும் தமிழ்ப்போராளி இலக்குவனாரின் தொண்டறங்களையும் பணிச்சிறப்புகளையும் தமிழ்காப்புப் போராட்டங்களையும் குறிப்பிட்டுத் தலைமையுரை ஆற்றினார்.

உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்! என்னும் தலைப்பில் கவியரங்கமும் உரையரங்கமும் நிகழ்ந்தன.

இலக்குவனார் இலக்கியப் பேரவையின் செயலர் கவிஞர் புலவர் உ.தேவதாசு கவியரங்கத்தைத் தாெடங்கி வைத்து நெறியாளராகச் செயல்பட்டார்.

எழில்கலை மன்றம் நிறுவனர் கவிஞர் வேணு.குணசேகரன், இயக்குநர், பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி முதல்வர் கவிஞர் வெற்றிச் செழியன், கவிஞர் திருக்குறள் உரையாசிரியர் செம்பியன் நிலவழகன்,
பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் கவிஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கவிஞர் மின்னூர் சீனிவாசன், கவிஞர் இராசராசன், கவிஞர் வேல் சுபராசர், கவிஞர் வே.கசுமீர் இராசா, உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கத் தலைவர் புரவலர் கவிஞர் மாம்பலம் சந்திரசேகர் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.

தொடர்ந்து உரையரங்கம் நிகழ்ந்தது. பேரா.முனைவர் மருதநாயகம் தொடக்கவுரை யாற்றினார். பேரா.இலக்குவனாரின் ஆய்வுச் சிறப்புகளையும் அவர் குறித்த பிற அறிஞர்களின் சிறப்பு மதிப்பீடுகளையும் தம் உரையில் குறிப்பிட்டார். தமிழ்ச் சங்கப்பலகை அமைப்பின் தலைவர் தஞ்சைத் தமிழ்ப்பித்தன், உலகத்திருக்குறள் பேரவையின் திருக்குறள் தூதர்  வெ.அரங்கராசன், ஆகியோர் உரையாற்றினர்.

இந்திய உயர் அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் திரு இரா.கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப., கட்டுரைப்போட்டியில் வென்றவர்களுக்கான மருத்துவ அறிஞர் புதுமை விநாயகம் செயப்பிரகாசு நாராயணன் & கல்வியாளர் சின்னமணி-வள்ளியம்மாள் குடும்பத்தினர் அளிக்கும் பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
முனைவர் இரா.அகிலன், திருவாட்டி அ.அரும்பொற்செல்வி ஆகியோர் முதல் பரிசுகளையும் (ஒவ்வாெருவருக்கும் உரூபாய் 1,500/-), திருவாட்டி புனிதா சிவகுமார் இரண்டாம் பரிசையும்(உரூபாய் 500/-) திருமிகு சு.இரேணுகுமார் மூன்றாம்பரிசையும்(உரூபாய் 250/-) பெற்றனர்.

பரிசுகள் வாங்க வராதவராதவர்களுக்கு அவர்கள் பகுதிகளைச்சேர்ந்த அமைப்புகள் மூலம் பரிசுகள் வழங்கப்படும் என்கு தெரிவிக்கப்பட்டது.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ  வா.மு.சேதுராமன், இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பேராட்டச் செயல்பாடுகளையும் அரசியல் பங்களிப்பையும் குறிப்பிட்டு நிறைவுரையாற்றினார்.

இலக்குவனார் இலக்கிய இணைய ஒருங்கிணைப்பாளர் பொறி. இ.திருவேலன், தஞ்சதைத் தமிழ்ப்பித்தன்,  தமிழ் ஆர்வலர் திரு வாசுதேவன் ஆகியோர் பங்கேற்பாளர்களுக்கு நினைவளிப்பு நூல்களை வழங்கினர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய இசைமணி சத்திய சீலனுக்குக் கவிஞர் வேணு.குணசேகரன் தம்முடைய ‘குணத்தமிழ்’ நூலையும் ‘திருத்தமிழ்ப்பாவை’ நூலையும் நினைவளிப்புகளாக வழங்கினார்.

திருப்புகழ் அறக்கட்டளைத் தலைவர் முனைவர் இரா.தேவகி நன்றி நவின்றார்.   

மூலிகைப் பானத்துடன் தொடங்கிய விழா நண்பகல் உணவுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

 

ஒளிப்படங்களை அழுத்திப் பெரிதாகக் காணக.