(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 27/ 69 இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

28/ 69

 

உலக மொழிகளில் தூய்மை இயக்கங்கள்(2018)

தமிழ்த்தூய்மையைப் பேண வேண்டும் என்று தனித்தமிழ் இயக்கத்தினர் வலியுறுத்துகையில் அதற்கு எதிராகக் கூறித் தமிழைச் சிதைக்க விரும்புவோர் நம் நாட்டில் உள்ளனர். மொழிக்கலப்பே மொழி வளர்ச்சி எனக் கூறுவோர் பிற நாட்டு மொழி வரலாற்றை அறியாதவர்கள். மொழிக்கலப்பினால் தத்தம் தாய்மொழி கேடுறுவதைத் தடுப்பதற்காக மொழித்தூய்மை இயக்கங்களைப் பிற மொழியினரும் பேணுகின்றனர். ஆங்கிலம், இசுகாட்டு, பிரெஞ்சு முதலான பல மொழியினரும் மொழித்தூய்மை இயக்கங்களை நடத்திய நடத்தும் வரலாற்றை இதில் கூறியுள்ளார்.

 “மொழியிலும் நடையிலும் மரபைப் பேண வேண்டும் என்றும் பிற மொழிகளின் அத்துமீறிய நுழைவைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் இயக்கங்கள் பல பழம் மொழிகளிலும் எட்டாம் நூற்றாண்டு, பத்தாம் நூற்றாண்டு, பதினான்காம் நூற்றாண்டு போன்று பிற்காலங்களில் தோன்றிய மொழிகளிலும் அவ்வப்போது அறிஞர்களால் தோற்றுவிக்கப் பெற்றுப் போராட்டங்கள் நிகழ்த்தியுள்ளன. இவ்வாறான இயக்கங்களின் வரலாற்றைக் கூர்ந்து நோக்கும் போது சில வியப்புக்குரிய முடிவுகளுக்கு நாம் வரவேண்டியுள்ளது. தமிழின் உட்பகைவர்களும் புறப்பகைவர்களும் குற்றம் சாட்டுவதுபோல், தனித்தமிழ் இயக்கங்களின் கோட்பாடுகளும் செயல்களும் பொருளற்றவையென்றோ, தேவையற்றவை யென்றோ, அளவுகடந்தவை யென்றோ எண்ணுதல் பெருந்தவறு மட்டுமன்று, அறியாமையும் ஆகும்” – இவ்வாறு தொடக்கத்திலேயே பிற மொழித் தூய்மை இயக்கங்கள்போல் தமிழ்த்தூய்மை இயக்கமும் வேண்டற்பாலது எனவலியுறுத்துகிறார் பேரா.ப.ம.நா.

ஆங்கிலச் சொல்வளக் குறைபாடு, இலக்கணக் குறைபாடு குறித்து ஆங்கிலேய அறிஞர்கள் கூறுவதையும் எடுத்துரைக்கிறார். சேக்குசுபியர் தம் நாடகம் ஒன்றில் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தமையால் ஒருவன் வேலைகிடைக்காமல் திரிவதான உரையாடல் வருவதையும் குறிப்பிடுகிறார்.

நமது மொழி துருப்பிடித்துப் போனது;

செல்லரித்தது; பூச்சியால் நோயுற்றது;

அறிவுத்திறன் அற்று மழுங்கிப் போனது;

அழகிய பாடலொன்று எழுத முயன்றால்

எண்ணங்களை வெளியிடத் தக்க சொற்களை

எங்கே தேடுவது? எனத் தெரியவில்லை

என ஆங்கிலேயரான இயான் கெலட்டன் (John Skelton) எழுதிய பாடலைக் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு ஒரு காலத்தில் ஆங்கிலம் குறைபாடுள்ள மொழியாக இருந்தாலும் இப்பொழுது உலகத் தலைமை பெற்றுள்ளது.

ஆங்கிலத்தில் கலந்து விட்ட இலத்தீன் சொற்களைக் களையமேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிடுகிறார்.1573 இல் இராலஃப் இலேவர்(Ralph Lever), காரணத்தின் கலை சரியாகச்சொல்வதாயின் கரணியக்கலை (The Art of Reason, Rightly Termed Witcraft) என்னும் நூலில் இலத்தீன் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை உருவாக்கினார். மிக உயர்ந்த ஆங்கில இலகக்கியங்களைத் தந்த மிலட்டன் இலத்தீன் சொற்களைக் கலந்து எழுதியுள்ளமையால் அவற்றுக்குப் பல எதிர்ப்புகள் வந்தன.  மிலட்டனின் மொழி உயிரற்றுக் கிடக்கின்றது என்றே பாவலர் கீட்சு குற்றம் சாட்டினார். எசுரா பவுண்டு(Ezra Pound) ஆங்கில மொழியை மிலட்டனின் இரும்புப் பிடியில் இருந்து மீட்க வேண்டுமென்று அறைகூவினார்.

மேலை ஐரோ்ப்பியமொழி அறிஞர்கள் தத்தம் மொழிகளில் உள்ள குறைகளைக் குறிப்பிட்டுள்ளனர். பேரா.ப.ம.நா.,அவ்விலக்கணக் குழப்பங்களுக்குக் காரணம் தொல்காப்பியம் முதலான மரபிலக்கண நூல் அம்மொழிகளில இல்லாமையே என்கிறார்.

பெருனாடு சா(Bernard Shaw)ஆங்கில மொழிச் சீர்திருத்தத்திற்கு மேற்கொண்ட முயற்சிகள், ஐரிசு மொழியினரின் மொழிக்காப்புப் போராட்டம், இசுகாட்டு மொழித் தூய்மைக்கான இயக்கம், பிரித்தானிய ஆங்கிலம் அமெரிக்க ஆங்கிலச் செல்வாக்கிலிருந்து விடுபடும் போராட்டம்,  அமெரிக்க ஆங்கிலம் பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து மீளும் போராட்டம், பிரெஞ்சு மொழித்தூய்மைப் போராட்டம், கெலட்டிமொழிக் காப்புப் போராட்டம், தூய வேல்சு மொழிப் போராட்டம், தனிச் செருமானியமொழிப் போராட்டம், இசுபானியமொழித் தூய்மை இயக்கம், ஆப்பிரிக்கான்சு மொழிப் போராட்டம் எனப் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த, நிகழும் மொழித்தூய்மைப்போராட்டங்களைக் குறிப்பிடுகிறார். நாமும் தனித்தமிழ்க் காப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதே சிறப்பானது என உணரலாம். 

தமிழ்நிலம் பதிப்பகம் 39 பக்கத் தனி நூலாக வெளியிட்டு்ளள இதன் மூலம் தமிழ்த்தூய்மை தேவை என்பதை உணர வைத்தப் பேராசிரியர் ப.ம.நா. மற்றோர் உண்மையையும் நமக்கு உணர்த்துகிறார். அது வருமாறு:-

“தமிழ் தோன்றிப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றித் தமிழிலுள்ள சொற்களில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் சொற்களைப் பெறாத இசுாட்சுமொழிக்கு எழுந்துள்ள அகரமுதலிகள் எண்ணிக்கை எண்ணற்றவை… .. .. பல நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே இலக்கண நூல்களையும் நிகண்டுகளையும் பலவாகப் பெற்றிருந்த தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் இப்பொழுது தமிழில் உட்பகைவர்கள் கொண்டு வந்துள்ள இரண்டு மூன்று அகரமுதலிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. “ என வருத்தப்பட்டு உரைப்பதன் உண்மையை உணர்ந்து நாம் தமிழ் அகராதிகளைப் பெருக்குவோம்!

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 29/ 69  )