ஊடக வலிமை உணர்ந்தவர்கள்

இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்!

மக்களுக்கு வழி காட்டுவதாகவும் திசை மாற்றுவதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் ஊடகங்கள் இருக்கின்றன. திரைக்காட்சியிலும் தொலைக்காட்சியிலும் உள்ளவர்கள் தோற்றத்திலும் பண்பிலும் எத்தன்மையராக இருந்தாலும் மக்களைக் கவர்ந்துவிட்டார்கள் என்றால் மக்களின் நாயக நாயகியர் அவர்களே என்பதில் ஐயமில்லை.

குடும்பத்தினரிடையே, உறவினரிடையே, பழகுநரிடையே, காண்பவரிடையே நிறவேற்றுமை பார்ப்பவர்கள், உருவ அழகிற்கேற்ப பழகுபவர்கள் பெரும்பான்மையர் உள்ளனர். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்னும் திருக்குறளைப் படித்திருந்தாலும் அதைப் பின்பற்றமாட்டார்கள். ஆனால், இவர்களே, திரையில் குள்ளனாக இருந்தாலும் கறுப்பனாக இருந்தாலும் கோரனாக இருந்தாலும் அத்தகையவர்களின் திறமையினால் கவரப்பட்டார்கள் என்றால் அவர்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவர். அவர்கள் பெயர்களில் நேயர் மன்றங்கள் வைத்துத் தம் உயிரையும் கொடுக்க முன்வருவர்.தீயன், வஞ்சகன், கெட்டவன்,இரண்டகன் என்பனபோன்று எதிர்ப்பண்பு வேடங்களில் தாம் விரும்பும் நடிக நடிகையர் நடித்தாலும் அவர்களை வரவேற்பர். அத்துடன் நில்லாது தீயன் முதலான பெயர்களையும் தங்களுக்குச் சூட்டிக் கொள்வர். அவர்கள் திரையில் உதிர்ப்பன உளறலளாக இருந்தாலும் தங்கள் வழிகாட்டுரைகளாக ஏற்றுக் கொள்வர்.

திரைஉலகைச்சேர்ந்தவர்கள் மக்கள் சார்பாளர்களானதும் அமைச்சர், முதலமைச்சர் பொறுப்பேற்பதும் ஊடக வலிமையால்தான். ஊடகலிமையை உணர்ந்ததால்தான் திரை உலகைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். தங்களின் திரைச்செல்வாக்கு அரசியலிலும் செல்வாக்கை ஏற்படுத்தும என நம்புகின்றனர். இம் முயற்சியில் சிலர் வெல்லலாம். சிலர் கவிழலாம். எனினும்  மக்களிடையே உள்ள திரைமுக மயக்கம் தங்களுக்குக் கை கொடுக்கும் என எதிர்பார்த்தே செயல்படுகின்றனர்.

ஆங்கிலத்தில் கடந்த நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே வரலாற்றுப்படங்கள் நூற்றுக்கணக்கில் வந்துள்ளன. தமிழில் சிவகங்கைச் சீமை, வீரபாண்டிய கட்டபொம்ன்,கருணன் முதலான சில படங்கள் வந்துள்ளன. இப்போது இன்றைய புகழ்வாணர்களை வரும்தலைமுறையினரும் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்களைப்பற்றிய வரலாற்றுப் படங்களையும் எடுத்து வருகின்றனர். இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். மறைந்தபிறகு பாராட்டுவதை விட இருக்கும்பொழுதே பாராட்டுவது அவர்களின் உழைப்பிற்கான அறிந்தேற்பாகும்.

வாழும் நிலையில் உள்ள தலைவர்கள், கலைஞர்கள், ஆன்றோர்கள், விளையாட்டு வீரர்கள் என வரலாற்றுப்படங்கள் எடுக்கும் போக்கு இந்திய மொழிகளிலும் தமிழிலும் இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. அந்தவகையில் இலங்கை மட்டைப்பந்தாட்ட வீரரான முத்தையா முரளிதரன் வரலாற்றுப் படத்தைத் தமிழில் இப்பொழுது எடுக்க உள்ளனர்.

மட்டைப்பந்தாட்டத் திறமைப்போட்டிகளில்(Test Match) 800 இலக்குகளை வீழ்த்தி அருவினை புரிந்தார் என்பதால் 800 என்னும் தலைப்பில் இவரைப்பற்றிய திரைப்படம் எடுக்கின்றனர். தமிழில் எடுக்கப்படும் படத்தை இந்தி, வங்காளம், சிங்காளம் முதலான பல மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட உள்ளனராம்.

இத்திரைப்படத்தை எடுப்பவர்கள் அல்லது இயக்குநர் முதலான தொழில் நுட்பக் கலைஞர்கள், பிற கலைஞர்கள் யாரையும் மக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மக்கள் செல்வன் எனப் போற்றப்படும் நடிகர் விசய்சேதுபதி முரளீதரன் வேடத்தில் நடிப்பதற்குத் தமிழின உணர்வாளர்கள் உலகெங்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசய்சேதுபதி மீது மக்கள்கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர் என்ற நம்பிக்கையே இத்தகைய எதிர்ப்புகளுக்குக் காரணம் என்பதை விசய்சேதுபதி உணர்ந்து இப்படத்தில் நடிப்பதிலிருந்து விலக வேண்டும்.

பொதுவாக ஈழத்தமிழர்கள் சொந்தநாடு என்பதால் உரிமை வேட்கையுடன் வாழ்பவர்கள். மலையகத் தமிழர்கள் வந்த நாடு என்பதால் உரிமை உணர்வு மழுங்கி வாழ்பவர்கள். முரளி மலையக் தமிழர். மலையகத்தமிழர்களிலும் உரிமைக்காகப் போராடிய, போராடும்  எண்ணற்றோர் இருக்கத்தான் செய்கின்றனர். முரளி, எப்பொழுதுமே பொதுவெளிகளில் சிங்களத்தில் பேசுநராக உள்ளார்.  “நான் முதலில் இலங்கையன்… அதன் பின்னரே தமிழன்” என்று சொல்லித் தமிழன் என்று கூறுவதைப் பின்னுக்குத் தள்ளுநராக உள்ளார். ஈழப்போராட்டங்ளைக் கொச்சைப்படுத்திப் பேசி வந்துள்ளார். 1,86,000 ஈழத்தமிழர்கள் கூட்டு இனப்படுகொலைக்கு ஆளான நாளை-அந்த ஆண்டை- மகிழ்ச்சியான நாளாகவும் மகிழ்ச்சியான ஆண்டாகவும் கூறியவர். அதற்கு விளக்கம் கூறுவதாக எண்ணிக் கொண்டு அதன்பின் போரில்லா வாழ்க்கை உள்ளதால் அவ்வாறு கூறியதாகக் கூறியுள்ளார்.  வாழும் மக்களிடையே அமைதியை உண்டாக்க வேண்டுமே தவிர அனைவரையும் கொன்று புதைத்துவி்ட்டு மயானஅமைதியைப் பாராட்டிக் கொண்டிருக்கக் கூடாது. பேரளவிலான கொத்து கொத்தான இனப் படுகொலைகளுக்குப் பின்னரும்  ஆள் கடத்தல், கட்டாயக்கருத்தடை, தமிழர் நிலங்களைச் சிங்கள நிலங்களாக ஆக்கல், தமிழர்களைச் சுற்றியும் அவர்கள் இடையேயும் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி வருவதல் முதலான பல்வேறு நடவடிக்கைள் மூலம் தமிழர்களை நாளும் அழித்து வருகிறது சிங்கள அரசு. இப்படி இருக்கையில் நாளும்  நடைபெறும் இனஅழிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கொலைத்தலைவன் இராசபக்குசேவுடன் கூடிக்குலவுபவனைத் தமிழனாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எனவேதான் அத்தகையவன் படத்தைத் தமிழ்நாட்டில் எடுக்கவும் அதில் நடிகர் விசய்சேதுபதி நடிக்கவும் உலகெங்கிலும் தமிழ் உணர்வாளர்களும்தமிழ் அமைப்புகளும் திரைக்கலைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘அசுரன்’ படித்தில் நடித்த நடிகர் அருணாச்சலம் தான் ஈழத்தமிழன்னைக்குப் பிறந்தவர் எனக் கூறித் தன்னிடம் முதலில் முரளி வேடத்தில் நடிக்க அழைத்ததற்கு மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அவருக்குப் பாராட்டுகள்! விசய்சேதுபதிக்கு இப்படத்தில் ஒப்பந்தாகும் பொழுதே பின் விளைவுகள் என்னவாக இருக்கும் எதிர்ப்பலைகள் எழும் என்பனவெல்லாம் தெரிந்திருக்கும். இருப்பினும் அவர் துணிந்து நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார்.

திரைப்படங்கள் மூலமும் தவறான பரப்புரைகள் மூலமும் மூளைச்சலவை செய்து ஈழத்தமிழர்களின் உணர்வுகளை மழுங்க அடித்துக் கொண்டுள்ளது சிங்களஅரசு. அவற்றின் ஒரு பகுதிதான் இந்தத் திரைப்படமும்.

இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் தங்களின் நாயகன் கூறும் உரைகளையும் ஏற்பார்கள் அல்லவா? அப்படியானால் அந்த வேடத்திற்குரிய மூல நாயகனின் தமிழ்ப்பகை உரைகளையும் ஏற்பார்கள் அல்லவா? எனவேதான், தமிழனாகப் பிறந்தும் அயலவனாக நடந்துகொள்ளும் இரண்டகனின் வேடத்தில் நடிக்க வேண்டா என மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோட்சேவிற்கு முதன்மை அளிக்கும் படங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எதிர்பபு தெரிவிப்பதுபோல்தான் இதுவும். நடிப்பது அவர் உரிமை என்றும் பிறரின் தவறான செயல்களை ஒப்பிட்டும் விசய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதற்கு ஆதரவு தருவோரும் உள்ளனர். அவர்கள் தமிழின உணர்வாளர்கள் அல்லர். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் இராசு, “இலங்கை மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான திரைப்படத்தில் நடிப்பது நடிகர் விசய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை. ஆனால், மக்களின் உணர்வுகளையும் அவர் மதிக்க வேண்டும்.” என்றார். இதுவே, சரியான நிலைப்பாடு. இங்கே அவரின் உரிமைபற்றிப் பேச்சு எழவில்லை. அவர் உருவாக்கிய பிம்பத்தைச் சிதைக்க வேண்டா என்பதற்காக மக்களின் எதிர்ப்பு உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக இத்திரைப்படத்தில் விளையாட்டரங்கங்களிலும் பிற இடங்களிலும் சிங்களக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் சிங்கள அரசை வாழ்த்தும் முரளி வேடத்தில் நடிப்பதில் இருந்து விலக வேண்டும்.

“என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று பின்னர் வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விட வேண்டும்” என்பதற்காகத் திருவள்ளுவர். “எற்றென்று இரங்குவ செய்யற்க”(குறளடி655) என்கிறார்.

புகழையும் அறத்தையும் தாராத தூய்மை அற்ற செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும் என்பதைப் பின்வரும் திருக்குறளில்(652) திருவள்ளுவர் வலியுறுத்துவதைப் பின்பற்ற வேண்டும் நடிகர் விசய் சேதுபதியும் 800 திரைப்படக் குழுவினரும்..

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல