(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 18/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

19/ 69

சிற்பி குறித்த தனி ஆங்கில நூலொன்றும் வள்ளலார் முதல் சிற்பி வரை என்னும் மற்றொரு நூலும் இங்கே பார்க்கப்படுகிறது.

சிற்பியாகக் கவிஞர்: சிற்பி (Sirpi: Poet as Sculptor (2006))

தமிழ்க்கவிதை புனைவு முயற்சியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆழ்ந்த ஈடுபாடு காட்டி வருபவர், கவிஞர் சிற்பி. மாக்கவி பாரதியின் வழித்தோன்றலாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த முயற்சியில் இயங்கி வருபவர்.  கவிஞர் சிற்பியின் கவிதைகள்பற்றி ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட பேராசிரியர்களும், கவிஞர்களும், திறனாய்வாளர்களும் வெவ்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ‘சிற்பியின் படைப்புக்கலை’, ‘சிற்பியின் படைப்புலகம்’, ‘சிற்பியின் கவிதை வளம்’, ‘சிற்பியின் கருத்தியல் வளம்’, ‘கோபுரத்தில் ஒரு குயில்’ போன்ற தனி நூல்கள் வெளியாகியுள்ளன. அவ்வரிசையில் கவிஞர் சிற்பியின் கவிதைகள் குறித்த திறனாய்வு நூலாகத் தம் பங்கிற்குப் பேரா.ப.ம.நா. இவ்வாங்கில நூலை அளித்துள்ளார்.

சிற்பி புதியன புனையும் துணிச்சலான எழுத்தாளர். அவரின் முதன்மை ஆயுதம் உருவகம். எளிதான பொருண்மையாக இருந்தாலும் எளிய, கலவையான, நேரடியான,   சிக்கலான உருவகங்களைக் ககையாள்வதில் வல்லவர் எனப் பேரா.ப.ம.நா. அவரின் உருவகப் பயன்பாட்டுச் சிறப்பைக் குறிப்பிடுகிறார்.

“பாரதி, பாரதிதாசன் போன்றவர்களின் மரபுவழிக் கவிதை ஆக்கத்தைப் பின்பற்றினாலும் கவிஞர் சிற்பி தனக்கே உரிய தனித்தன்மைகளை அவர் கையாண்டுள்ள கவிதைக் கருத்துக்களின் வாயிலாக நிலைபெறச் செய்திருக்கிறார்; சிற்பியின் கவிதைகளை நுட்பமாக ஆராய்ந்து அவரின் படைப்புத்திறனை வெளிப்படுத்தி உள்ளார்.”

பேரா.ப.ம.நா. சிறந்த மொழிபெயர்ப்பாளர். எனவே, இந்நூலில் தேவைப்படும் இடங்களில் எல்லாம் தரமான ஆங்கிலத்தில் சிற்பியின் கவிதைகளை மொழி பெயர்த்துத் தந்துள்ளார். மூலக்கவிதையில் வெளிப்படும் தனித்தன்மைகள் குலையாவண்ணம் நமக்கு அவற்றைத் தந்துள்ளார். தொன்மங்களை நிகழ்காலக் கண்ணோட்டத்தில் கையாளும் சிறப்பு சிற்பிக்குரியது என்றும் வெளிப்படுத்துகிறார்.

“புதுக்கவிதை முயற்சிக்கு வந்த கவிஞர் சிற்பி, வடிவத்தைத் தன்னுடைய ஒவ்வொரு கருப்பொருளுக்கும் ஏற்றபடி எப்படி உருவாக்கியிருக்கிறார் என்பதைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் அடையாளப்படுத்தியிருக்கிறார். இயற்கை, தனிமனிதன், சமூகம், வாழ்வியல், அறிவியல், குமுகம்  போன்ற பல வகைப்பட்ட மாறுபட்ட, முரண்பட்ட தளங்களில் கவிஞர் சிற்பி இயங்கியுள்ளார். இவற்றை விருப்பு வெறுப்பு இன்றி நடுவுநிலைமையுடன்  புலப்படுத்தியுள்ளார்.”- இவ்வாறு நூல் மதிப்பீட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வள்ளலார் முதல் சிற்பி வரை(2008):

இத் தொகுப்பில் 12 கட்டுரைகள் உள்ளன.

‘வாழையடி வாழை: வள்ளலாரும் பாரதியும்’ என்னும் கட்டுரை பாரதியை உருவாக்கியவர்களில் தலைமையிடம் பெறத் தக்கவர் இராமலிங்க அடிகளாரே என்ற கருத்தை நிலை நாட்டுகிறது. எளிய நடை, இனிய சந்தம்,புதிய பாடு பொருள்கள், பல்வேறுபட்ட பாவகைகள், நாடடார் வழக்காற்றை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளல்,பேச்சுத் தமிழிலிருந்து வேண்டிய சொற்களை எடுத்துக்கொண்டு தக்க இடத்தில் பெய்து கவிதைக்கு உயிரூட்டல் ஆகியவற்றிற்கெல்லாம் பாரதிக்கும் அவரது வழித் தோன்றல்களுக்கும் முன்னோடியாக இருந்து கல், முள்ளற்ற பெரும்பாதை அமைத்துக் கொடுத்தவர் அடிகளாரே; தடம் புரண்டுபோய்க் கொண்டிருந்த தமிழ்க் கவிதை வெள்ளத்தை முதலில் மடை திருப்பியவர் வள்ளலார்; மரபு வகைகளுக்குப் புத்துருவம் தந்தவரும் அவரே; வள்ளலாரிடமிருந்து பாரதியார் சொற்களையும் தொடர்களையும் பாவினங்களையும் உத்திகளையும் பெற்றதால் அவற்றின் தாக்கம் பாரதி பாடல்களில் ஆழ்ந்து விரிந்து பரவியுள்ளது;  என ஆய்ந்து வள்ளலாரின் சிறப்புகளை நமக்கு எடுத்துரைத்துள்ளார்.

சுந்தரனாரின் மனோன்மணீயம் குறித்த கட்டுரையில் அதன் ஆங்கில மூலங்களுக்கு அஃது எந்த அளவில் கடன்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறார்.கவிதை நாடகத்திற்கு மறுவாழ்வு தரும் பெரு முயற்சியை மேற்கொண்ட எலியட்டின் காலத்திற்கு முன்னரே மனோன்மணீயத்தைச் சுந்தரனார் கவிதை நாடகமாகத் தந்துள்ளதை வியந்து பாராட்டுகிறார்.  

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்  20/ 69 )