(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 45/69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

46/69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

 வடமொழி நாடகங்களும் காப்பியங்களும் குறித்து பன்னிரண்டாம் கட்டுரை விளக்குகிறது.

அலெக்குசாண்டர் வருகைக்குப்பின் ஆட்சிசெய்த கிரேக்கத் தளபதிகள் தங்களுடன் நாடகக்குழுக்களை அழைத்து வந்திருந்தனர். அவர்கள் மூலம்தான் சமற்கிருதப்படைப்பாளிகள் நாடகம்பற்றி அறியலாயினர். புதிய கிரேக்க இன்பியல் நாடகக் கூறுகளே சமற்கிருத நாடகங்களுக்கு அடிப்படையாக அமைந்தன.

நாடகமே சமற்கிருதத்தில் தோன்றிய முதல் செவ்வியல் இலக்கிய வகையாகும்; அதன் பிறகே கவிதை பிறந்தது; மேகதூதத்திற்கு மூலம் சங்க இலக்கியத் தூதுப்பாடல்களே; (இ)ருதுசம்ஃகாரத்திற்குச் சிலப்பதிகார ஆறு பருவ வருணனையே மூலமாகும், கீத கோவிந்தம் கவித்துவம் அற்றதெனச் சமற்கிருத இலக்கிய வரலாறு கூறுகிறது; பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தோன்றிய இலக்கியங்கள் படிப்போரை வியப்பில் ஆழ்த்தும் தவறான கவிதை உத்திகைள ஏராளமாகக் கையாள்வன; முருகியல் இன்பம் தரவில்லை;பாரவிக்கும் பாணருக்கும் பின்வந்தவர்கள் யாவரும் மூன்றாந்தர நான்காந்தரக்  கவிஞர்களாகக் கருதத்தக்கவர்களே இவ்வாறு பல சமற்கிருத அறிஞர்களின் ஆய்வு முடிவுகளையும் இக்கட்டுரையில் தெரிவிக்கிறார்.

சமற்கிருதத்தில் பல்வேறு கவிதையியல் கோட்பாடுகள் இருக்கின்றன என ஆர்ப்பரிக்கும் சமற்கிருத ஆர்வலர்கள் தொல்காப்பியரின் செய்யுளியலைப்போல் ஒரு முழுக் கவிதையைத் தெளிவாக வரையறை செய்யும் அணுகுமுறை சமற்கிருத மொழியில் இல்லை என்று புரிந்து கொள்ளுதல் நல்லது. சமற்கிருத நூலார் கற்பித்த கோட்பாடுகள் நன்மையைவிடத் தீமையையே மிகுதியாகச் செய்தன என்பதும் சமற்கிருத இலக்கிய வரலாற்றறிஞர்கள் கண்டுரைக்கும் உண்மையாகும் என்று பேரா.ப.ம.நா. ஆராய்ச்சி முடிவாக இதில் தெரிவிக்கிறார்.

சமற்கிருதக் கவிஞர்கள் கையாண்ட கலைநலம் அற்ற கூறுகளும் உத்திகளும் அவர்களுடைய இலக்கியங்களைப் பாழ்படுத்தின. காளிதாசனின் இரகுவம்சமும் இதற்கு விதிவிலக்கல்ல.  இராவணவதம் படைத்த பட்டி(Bhatti), கவிதைகள் படைத்த பாரவி(Bharavi), சுபந்து(Subandhu), மாகா(Magha), சிரீஅருசா(Sriharsa) ஆகியோர், தரமான இலக்கியங்கள் படைப்பதில் தோல்வி அடைந்தனர். இவ்வாறு பெரும்பாலான மக்கள் வாழ்வோடு தொடர்பற்றுப்போய்,மனித வாழ்க்கையின் அரிய பகுதிகளைப் புறக்கணித்துக் குப்பை இலக்கியங்களை அளவின்றிக் குவித்தனர்.

சமற்கிருதக் குப்பை நூல்களை எவ்வாறு செவ்வியல் இலக்கியங்களாகக் கூற முடியும்?

 பதின்மூன்றாவது கட்டுரை வடமொழி நாடகங்கள்: விபுலானந்தர் விளக்கம் என்பதாகும்.

தசரூபகம் என்னும் சமற்கிருத நூல், பத்துவகை நாடகங்கள்பற்றித் தரும் விளக்கங்களை விபுலானந்தர் ஒரு கட்டுரையில் எடுத்துரைக்கிறார். முஞ்சராசனது அரசவை வித்துவானாகிய தனஞ்சயன் என்னும் சமற்கிருதப்புலவரால் இயற்றப்பட்டது தசரூபகம்.

சமற்கிருத நாடகங்களில் எல்லாப் பாத்திரங்களும் சமற்கிருதத்தில் பேசுதற்குத் தகுதியுடையன அல்ல என்று சமற்கிருத நூலார் கருதினர். கலைமகள் தமிழை நாவில் நடமாடச்செய்வதாகக் கம்பர், ஒட்டக்கூத்தர் முதலான புலவர்கள் சிறப்பிடம் தருகின்றனர்.  ஆனால், சமற்கிருத நாடகங்களில் கலைமகள் தன் கணவனான பிரம்மனிடமும் சமற்கிருதம் தெரியாததால் பிராகிருத மொழியில்தான் பேசுவாளாம். ஆகக் கல்விக்கடவுளுக்கே சமற்கிருதம் தெரியவில்லை என்றால் அது மக்கள் மொழியாக விளங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். சமற்கிருத நாடகங்களில் பரத்தையருக்கே முதலிடம் என்பதை விபுலானந்தர் விளக்கியுள்ளார்.

ஒழுக்கத்தை வலியுறுத்தாத நூல்கள் எங்ஙனம் செவ்வியல் இலக்கியமாகும்?

சூத்திரகரின் மூன்று நாடகங்களில் ஒன்று பத்தும பிராபகர்த்தகா(Padmaprabhartaka). குமுகாயத்தில் பல நிலைகளில்  உள்ளவர்கள் பரத்தையரோடு தொடர்பு கொண்டிருப்பதை  இழிகாம(ஆபாச) உரையாடல்களில் சொல்லும் நாடகம் இது. இதனால் இதனைத் தரம் வாய்ந்த இலக்கிய வரிசையில் வைக்க முடியாது என்கிறார். இரண்டாம் நாடகம் ‘வீணா வாசவதத்தா’(Veena vasavadatta). நாடகத்தின் கதையை விளக்கும் அவர், இத்தகைய புனைவியல் கதைகளை நாடகங்களில் தரும் யாரும் திருத்தக்கத் தேவரின் சிந்தாமணியை ஒத்த படைப்பைத் தரவில்லை. பெருங்கதையை நெருங்கும் தரமும் அவற்றில் இல்லை என்கிறார்.

மூன்றாவது ‘மிருச்சகடிகம்’(Mrccakatika) என்னும் நாடகம். நாடகத்தில் கூறப்படும் குமுகாய, அரசியல் சிக்கல்கள் முழுக்க முழுக்க மக்களின் முயற்சிகளால் தீர்க்கப்படுகின்றன; அவரவர் நல்ல அல்லது தீய செயல்களுக்கு அவரவர்களே பொறுப்பாக்கப் படுகின்றனர்; மனித முயற்சிகளே வெற்றிக்குக் காரணங்கள் எனப்படுகின்றன; கதை நிகழ்ந்த காலத்து மண்ணின் மணம் வீசுகிறது; இவ்வாறு இந்நாடகத்தின் சிறப்புக்கூறுகளைச் சிறப்பாக விளக்குகிறார். இருப்பினும் சூத்திரகரின் மிருச்சகடிகம், இலக்கியத் தரத்தில்  சிலப்பதிகாரத்தை நெருங்கமுடியாது என்பதை அதைப் படிப்பவர் உணரலாம்.

நிறைவான தரமான நாடகங்களாக இல்லாத பொழுது இவை எங்ஙனம் செவ்வியல் இலக்கியங்களாகும்?

பாசனின் நாடகங்களும் பழந்தமிழ்ப் பனுவல்களும் குறித்துப் பதினைந்தாம் கட்டுரை விளக்குகிறது.

பாசகவி என்னும் சமற்கிருத அறிஞரின் நாடகங்கள் பதின்மூன்று. சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் ஈடுபாடு கொண்டமையால் அவற்றின் தாக்கம் இவரது நூல்களில் உள்ளன. தமிழ்க்கடவுளான முருகனைப்போற்றி வாழ்த்தும் பாடல்களும் முருகனைப்பற்றிய செய்திகளும் இவரது படைப்புகளில் காணப்படுகின்றன. தமிழ்க்களவு மணத்தில் வரும் அறத்தொடு நிற்றலை இவரது படைப்புகளில் காணலாம்.

“அவளுடைய கண்கள் எனக்கு உயிர்நீக்கும் நோயைத் தந்தன. (அவள் சந்திப்பு குறித்து) நீங்கள் கூறும் இச்செய்தி, அந்நோய் நீக்கும் மருந்தாக அமைகிறது” எனத் தலைவன் கூறுவதாக (பக்.74) நாடகத்தில் இடம்பெறும் நிகழ்வு உள்ளது.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கு ஒன்றுஅந்நோய் மருந்து(திருக்குறள் 1091)

என்று திருவள்ளுவர் தெரிவிப்பதன் மொழிபெயர்ப்பே இது.

இதுபோல் திருக்குறள் 55, 56, 375, 377, 380, 388, 422, 567, 578, 581, 599, 619, 620, 1329, குறுந்தொகை 142, புறநானூறு 6, 13, 17, 24, 27,35, 42, 47, 75, 89, 93, 118, 138, 185, 202, 279, 315, 341, 359, 369,  மலைபடுகடாம் அடி 364, முதலான சங்கப்பாடல்களையும் அவற்றின் தழுவலாக அல்லது எடுத்தாண்டு எழுதப்பட்ட பாசனின் வரிகளையும் ஒப்பிட்டுத் தமிழ்ப்பனுவ்களின் தாக்கம் பாசனின் நாடகங்களில் இருப்பதை நயம்பட விளக்கியுள்ளார் பேரா.ப.ம.நா. மேனாட்டுக் கல்வியாளர்களில் சிலரும் பாசனின் நாடகங்களில் சங்க இலக்கியச் செல்வாக்கு உள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர். இது மகிழ்ச்சியான நல்ல செய்திதான். ஆனால், தமிழ் உட்பகைவர்கள், சமற்கிருதத்தி லிருந்துதான் தமிழ்ப்படைப்புகள் உருவானதுபோல் பிதற்றுகின்றனரே!

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 47/69 )