(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 44/69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

45/69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

வடமொழி இலக்கியம்: ஒரு வடமொழிப்பேராசிரியரின் மதிப்பீடு என்பது பத்தாவது கட்டுரையாகும்.

தார்வார் பல்கலைக்கழகத்தில் சமற்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர் கே.கிருட்டிணமூர்த்தி. தொனி, வக்கிரோத்தி, இரசம் போன்ற கோட்பாடுகள்பற்றிய சமற்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; காளிதாசன் படைப்புகள்பற்றி ஆங்கிலத்தில் நூல் எழுதியவர்; சமற்கிருத இலக்கியம்(Sanskrit Literature) என்னும் கட்டுரை எழுதியவர். சமற்கிருதம் பற்றிய அவரின் ஆய்வுரைகளையே இக்கட்டுரையில் நமக்குப் பேரா.ப.ம.நா.தருகிறார். அவை வருமாறு:

வேதமொழிக்கும் பாணிணி வகுத்துள்ள சமற்கிருத மொழிக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. வேத மொழியானது அவெசுத்தன்(Avestan) மொழிக்கு மிக நெருக்கமானது.

இருக்கு வேதம் முழுமையும் பேராசை கொண்ட புரோகிதர்களின் தந்திரவேலை. அதில் உள்ள சில அழகிய வரிகள், அப்புரோகிதர்கள் மது, மாதர்பால் கொண்டிருந்த இச்சையையும் சூதாட்ட ஈடுபாட்டையும் காட்டுபவை.

யசுர்வேதமும் சாம வேதமும் இலக்கியத்தரம் உடையவை அல்ல.

அதர்வேதத்தை வேதமாகக் கொள்ள முதலில் எதிர்ப்பு இருந்தது.

வேள்விச்சடங்குகள்பற்றிய பிராமணங்கள் என்னும் நூல்கள் மிகுதியாக உள்ளன. அவை இலக்கியம் என்ற முறையில் சுவையற்றவை; சமய நூல்கள் என்ற முறையில் பொருளற்றவை; சிறுபிள்ளைத்தனமான மூடநம்பிக்கைகள் கொண்டவை.

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வெவ்வேறு காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்கள் உள்ளன.

மகாபாரதத்தின் இலக்கியச் சிறப்புகள் மிகக் குறைவானவை.

மாககவியின் ‘சிசுபாலவதம்’, பட்டியின் ‘இராவணவதம்’, இரக்குனாகரின் ‘அரவிசயம்’, சிரீஅருசனி்ன் ‘மைசதிய சரிதம்’ ஆகிய நூல்களில் எவ்விதமான புதுமையோ சிறப்போ ஏதுமில்லை. இது, காளிதாசனுக்குப் பின் எழுதப்பெற்ற நூற்றுக்கணக்கான நூல்களுக்கும் பொருந்தும். அவையெல்லாம் அடிமைத்தனமான தழுவல்களே! அவற்றுள் கையாளப் பெற்றுள்ள மொழி செயற்கையானது; கற்பனை உயர்வுநவிற்சியானது; காட்சியுருக்கள் எளிதில் புரியாதவை; கல்வியாளர்களுக்கு அதிர்ச்சி யூட்டும் நோக்குடன் எழுதப்பெற்றவை.

சமற்கிருத நாடகங்களில் உயர்நிலையில் உள்ள பெண்கள் உட்பட எல்லாப் பெண்களும் கீழ்நிலையில் உள்ள எல்லாப் பாத்திரங்களும் பலவகையான பிராகிருதக் கிளைமொழிகளிலேயே பேசுகின்றன; தலைமைப் பாத்திரம் மட்டுமே சமற்கிருதத்தில் பேசும் உரிமை பெற்றுள்ளது.

சமற்கிருத நூல்கள் பல இழிகாமம்(ஆபாசம்) நிறைந்தவை. அம்மொழியில் மிகச் சிறந்த  காவியம் என்று சொல்லத்தக்கது ஏதும் இல்லை என்பது வருதத்திற்குரியது.

பத்திப்பாடல்கள் எல்லாம் கவிதைத்தரம் உடையவை அல்ல.

வடநூலார் போற்றும் சமுதாயம் என்னும் தலைப்பில் 11 ஆவது கட்டுரை அமைந்துள்ளது.

பிராமணர்களை மட்டும் உயர்த்திப் பிற குலத்தினரையும் எக்குலமாயினும் பெண்களை இழிவாகக்கூறி இழிவாக நடத்த அறிவுறுத்துவனவே சமற்கிருத நூல்கள் என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறார். பெண்களைப் புகழ்ந்துபேசுவதுபோல் ஆங்காங்கே மனுவில் காணப்பட்டாலும் பெண்களுக்குக் கல்வி யுரிமை யில்லை; சொத்துரிமை யில்லை; எவ்வளவு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டாலும் சோர்வில்லாமல் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும்; என்பனபோல் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலேயே உள்ளன. கலப்புமணத்தைக் கண்டிக்கும் கீதை பெண்களே இக்கொடிய பாவத்திற்குக் காரணம் என்று சொல்லி அவர்களைக் குற்றவாளியாக்குகிறது.

பிராமணர்கள் எல்லா உரிமைகளும் பெற்றுத் தலைமை நிலை அளிக்கப்பட்டிருந்தனர். எக்குற்றம் செய்தாலு்ம் பிராமணனுக்குக் கொலைத்தண்டனை கிடையாது. அரசன் தனது செல்வம் முழுவதையும் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். வில்லை மட்டும் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும். சமற்கிருத நூலார் போற்றியது மூடநம்பிக்கைகள் மலிந்த கீழான மன்பதையையே! சமற்கிருத நூல்களில் காதல் எனச் சொல்லப்படுவன எல்லாம் கீழான காமமே. பரத்தமைத் தொழிலே எங்கும் பரவியிருந்தது. கி.மு. மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளிலேயே சமற்கிருத இலக்கியங்களில் பரத்தையருக்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டது.

“வடஇந்திய மன்பதையிலும் வடமொழி இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தோர் பழந்தமிழ் மன்பதையிலும் சங்க இலக்கியங்களிலும்  தமிழ்ப் பெண்கள்நிலை எவ்வளவு உயர்ந்து காணப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்”  என்கிறார் பேரா.ப.ம.நா.

இலக்கியம் படைத்தோர் இத்தகைய சூழலில் தரக்குறைவான படைப்புகளைத் தயக்கமின்றித் தந்தனர். மன்பதைக் கேடுகளைச் சாடி அவற்றைத் திருத்த அவர்கள் முயலவில்லை.

 உண்மையான கவிதை எதுவென்று புரிந்து கொள்ளாலேயே ஏதோ எழுதிக் குவித்தனர்.

இவற்றை யெல்லாம் தொகுத்துத் தரும் பேரா.ப.ம.நா., “உண்மைநிலை இவ்வாறிருக்க வடநூலார் தங்களுடைய மொழியிலேயே அளவிலும் தரத்திலும் மேம்பட்ட இலக்கியங்கள் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வது குறையவில்லை” என்கிறார். மன்பதைக்குக் கேட்டை விளைவிக்கும் சமற்கிருத நூல்கள் எங்ஙனம் செவ்வியல் இலக்கியங்களாகும்?

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 46/69)