(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 55 / 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

56 / 69

 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

இறுதியாக முடிவுரை வழங்கியுள்ளார். சமற்கிருதம் செம்மொழியல்ல என்பதைச் சுருக்கமாக இது மெய்ப்பிக்கிறது.

  1. தமிழுக்குச் செம்மொழி ஏற்பு வழங்கிய பொழுது மத்திய அரசு 2004 இல் செம்மொழிக்கான தகுதிகளை வரையறுத்தது. இத்தகுதிகளின் அடிப்படையில் சமற்கிருத மொழி இலக்கிய வரலாற்றையும் அம்மொழியில் செவ்விலக்கியங்கள் என்று போற்றப்படுபவற்றையும் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கும்போது தமிழ், கிரேக்கம், இலத்தீன் ஆகியவற்றை ஒத்து எண்ணத்தக்கப் பெருமை அதற்கு இல்லை.
  2. திருமதி பட்டாச்சார்சி சமற்கிருதத்தின் செவ்விலக்கிய வரலாறு கி.பி.நான்காம் நூற்றாண்டில் தொடங்கிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில்முடிந்து விடுகிறது எனத் தெளிவுறுத்துகிறார்(சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு/ History of  Classical Sanskrit Literature).வேத உபநிடதங்களையும் மகாபாரதம் இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் எனப்பட்டவற்றையும் அவர் செவ்விலக்கியங்களாகக் கருதவில்லை.
  3. காளிதாசன் படைப்புகளுக்குப் பின்னால் வந்த சமற்கிருத நூல்கள் தரத்தில் மிகவும் தாழ்ந்த நிலையின.
  4. சமற்கிருதப்பேராசிரியர் கே.கிருட்டிணமூர்த்தி, சமற்கிருதத்தில் இழிகாம(விரசமான) நூல்களே மிகுதியாக உள்ளன என ஆராய்ந்து தெரிவித்துள்ளார்.
  5. தமிழிலிருந்து மட்டுமல்லாமல் பிற இந்திய மொழிகளிலிருந்தும் நல்ல இலக்கியப்பகுதிகளை எல்லாம் சமற்கிருத நூல்களில் இடைச்செருகல்களாகச் சேர்த்தார்கள்.
  6. பிற மொழி இலக்கியங்களில் சிறந்தனவற்றை மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு மூலநூல்களை முற்றிலுமாக அழித்தார்கள். அழிக்க முடியாது போனால் சமற்கிருத நூலே மூலமென்றும் பிற மொழி நூல் மொழிபெயர்ப்பென்றும் பொய்கூறி ஏமாற்றினர்.
  7. மனுநூல், அருத்தசாத்திரம், சுக்கிரநீதி ஆகியவற்றிலெல்லாம் திருக்குறள் கூறும் அறங்கள் சேர்க்கப்பட்டு வள்ளுவரே அவற்றைச்சமற்கிருதத்திலிருந்து எடுத்தாண்டார் என்ற “பச்சைப்பசும்பொய்” நிலைநாட்டப்பட்டது.
  8. “அறிவியல் காணாததை எல்லாம் வேதம் கண்டுள்ளது” என்ற பொய்யான கருத்தைப் பரப்பப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐசன்பெருக்கு என்பாரின் கோட்பாடு(Heisenberg’s Uncertainty Principle) வேதங்களிலிருந்து பெறப்பட்டதென்றும் அவரே இதுபற்றித் தாகூரிடம் 1929இல் பேசிக்கொண்டிருந்தபோது அறிந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பொய்ச்செய்தி விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், அவ்வறிஞர் தாகூரைச் சந்திப்பதற்கு இரண்டாண்டுகள்(1927இல்) முன்னரே இக்கோட்பாடு உருவாக்கப்பட்டு விட்டது.
  9. வானூர்திகளைக் கட்டமைப்பது குறித்துப் பரத்துவாச முனிவரின் நூலில் கூறப்பட்டுள்ளதென்றும் அவ்வாறு உருவாக்கப்பட்ட வானூர்திகள் 7000 ஆண்டுகளுக்கு முன்னரே, நகரங்கள், கண்டங்கள், கோள்களுக்கிடையே பறந்தன என்றும் 102ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் ஆனந்து போதசு என்பவர் கட்டுரை அளித்தார். இந்தச் சமற்கிருத நூலையும் அதன் இந்தி, ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஆராய்ந்த இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பொறியியல் வல்லுநர்கள் அஃது எவ்வளவு பெரியமோசடி என்பதைக் கண்டு வெளிப்படுத்தினர். அச்சமற்கிருத நூலானது 1904ஆம் ஆண்டுக்குப் பிறகு அனேகல் என்னும் ஊரைச் சேர்ந்த சுப்பராய சாத்திரி என்பவரால் எழுதப் பெற்றது என்றும் அவர் சுலோகங்களைச் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதினாரென்றும் சுந்தர விமானம், (உ)ருக்கும விமானம் என்பவற்றின் படங்களை வரைய இன்னொருவரைப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் தேசபாண்டே என்பவர் அம்பலப்படுத்தினார். இதனைஇந்து நாளிதழ் 11.1.2015 அன்று வெளியிட்டுள்ளது.

அரசியல் துறையிலேயே இதனைச் செய்தவர்கள் மொழி, இலக்கிய, சமயத்துறைகளில் இவ்வாறான வஞ்சகச் செயல்களை மிக எளிதாகவும் பரவலாகவும் செய்தனர் என்பதைச்சொல்லவும் வேண்டுமோ?

  1. எங்கும் வழங்காத சமற்கிருதக் கிளைமொழி யொன்றைக் கற்பனை செய்து அதற்குப் ‘பாந்தீர பாசா’ என்று பெயரிட்டு இலக்கணமும் எழுதினர் என ஏ.சி.பருனல் மெய்ப்பித்துள்ளார்.
  2. கிரேக்க அறிஞர்கள் பெயர்களைச் சமற்கிருதப் பெயர்களாக்கி அவர்களைச் சமற்கிருத அறிஞர்கள் எனப் பரப்பினர். (இப்படித்தான் தொல்காப்பியர், திருவள்ளுவர் முதலான தமிழ்ப்புலவர்களுக்குச் சமற்கிருதப்பெயர்கள் சூட்டப்பட்டன.)

  இவ்வாறெல்லாம் ஆய்வுரை வழங்கிய பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம், பின்வரும் முத்தாய்ப்புடன் நூலை முடிக்கிறார்.

” இத்தகைய முயற்சிகளை யெல்லாம் காலங்காலமாக மேற்கொண்டு இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் சமற்கிருதமே முதலில் தோன்றிய மொழியென்ற எண்ணத்தை மொழியியல் வல்லுநர்களிடையே ஏற்படுத்தி அது கிரேக்கம், இலத்தீன் போன்று செம்மொழித் தகுதி உடையது என்னும் பொய்யையும் வரலாற்று உண்மையாகச் சமற்கிருதச் சார்புடையோரால் நிலைநாட்ட முடிந்தது.”

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 57/69)