(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 21/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

22/ 69

வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி)

  அடுத்து வரும் ஆறாவது கட்டுரையில் சமற்கிருத இலக்கியங்களில் உள்ள தமிழ் இலக்கியங்களின் ஏற்பும் தாக்கமும் உள்ளமையைச் சிறப்பாக விளக்குகிறார். சங்க இலக்கியங்களின் செல்வாக்குக் காளிதாசனின் காவியங்களில் இருப்பதை மேலை இலக்கிய விற்பன்னர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.  அவற்றின் ஒரு பகுதியாக இக் கட்டுரையில் காளிதாசனின் குமாரசம்பவம், இரகுவம்சம் முதலான காவியங்களில் புறநானூற்றுப்பாடல்களின் தாக்கம் இருப்பதை விளக்குகிறார்.

அடுத்துப் புறநானூற்றுப்பாடல்களிலும் கிரேக்கப்பாடல்களிலும் உள்ள ஒப்புமைக் கருத்துகளை எடுத்துக் காட்டுகிறார். இவற்றின் மூலம் புறநானூறு வீரயுக இலக்கியமன்றென்றும் தமிழ் இலக்கிய வரலாற்று வீரயுகம், இன்னும் பல நூற்றாண்டுகள் முந்தியதாக இருக்க வேண்டுமென்றும் கூறுகிறார். 

மேலும் பிற மொழி இலக்கியங்களில் புறநானூற்றுப் பாடல்களின் தாக்கம் இருப்பதை எ.கே.இராமானுசன் கருத்துகளை முன் மொழிந்து வழிமொழிகிறார். இந்தியத் தாய்மொழிகளிலுள்ள உயிர்த்தன்மையும் அவைகாட்டும் பரந்த மனப்பான்மையும் சமற்கிருதத்தில்  இல்லை என்றும் ்இந்திய மன்பதையில் எல்லா நிலையில் உள்ளவர்களையும் ஒருங்கிணைப்பவை அம்மொழிகளேயன்றிச் சமற்கிருதம் அன்று என்றும் கூறியுள்ளதையும் சுட்டுகிறார்.

சங்கச் சான்றோர் அகமாயினும் புறமாயினும் கூறவந்த கருத்திற்கேற்பச் சூழலை அமைத்துக் கொண்டு தம்மை நாடகத்திற்கு ஏற்ற ஒரு பாத்திரமாகப் பாவித்து ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களையோ முன்னிலைப் படுத்திப் பேசும் உத்தியைச் சிறப்பாகக் கையாள்வதை 7ஆம் கட்டுரையில் விளக்குகிறார்.

தன்னுணர்ச்சிப் பாக்களிலும் நாடகத்தற்கூற்றுப் பாக்களிலும் பிறவற்றிலும் இரு பிளவாக்கப்பட்ட பேசுவோன் (Split addressor), இரு பிளவாக்கப்பட்ட பேசப்படுவோன்(Split addressee)ஆகிய பாத்திரங்கள் பொருள் மயக்கத்தை ஏற்படுத்திக் கவிதையின்பத்தை மிகுவிக்கும் என்பது உருசிய மொழியியல் மேதை விளக்கும் கருத்து. இவ் வுத்தியைக் கையாளும் முறை, சங்கச் சான்றோர் அகப்பாடல்களிலும்புறப்பாடல்களிலும் உள்ளதென்கிறார்.

புறநானூற்றுக் கவிதையில் கவிஞனும் வாசிப்போனும் பிளவுபடுத்தப்பட்ட பாத்திரங்களாக உருப்பெற உதவுவது பாடுபொருள் ஒருவர் மற்றவர்க்குச் சொல்லிய கூற்றாக நாடகப்படுத்தப் படுவதே. ஒரு சிறு கவிதையின் முன் பாதியில் சில சிறு மாற்றங்களைச் செய்து பின் பாதியாகத் தந்து வெற்றி பெறும் கவிதைகள் புறநானூற்றில் உண்டு.

மேலைநடையியல் வல்லுநர்கள் முற்படுத்திக்காட்டல்(fore grounding)எனும் உத்தி இலக்கியமொழிக்கே உரியதென்பர் எனும் பேரா.ப.ம.நா. இத்தகைய உத்தியைக் கையாளும் புறநானூற்றுப் பாடல்களையும் விளக்குகிறார். உயர்திணைக்குரிய பண்புகளை அஃறிணைப் பொருள்களுக்கு ஏற்றிக் காட்டலும் இவ்வுத்தியில் அடங்கும் என்பர். சான்றோர் செய்யுட்கள் பலவற்றில் அஃறிணைப் பொருள்கள் கேட்குந போலவும் கிளக்குந போலவும் படைக்கப்பட்டுள்ளமையையும் காணலாம். இவ்வாறு இக்கால மேலைநாட்டார் கூறும் நடையியல் அணுகுமுறையைப் புறநானூற்றுப்  பாடல்களால் அறிந்து கொள்ள முடியும்.

எட்டாவது கட்டுரையில் மேலைநாடுகளில் இன்று பேசப்படும் பெண்ணியத் திறனாய்வு கருத்துகளைக் குறிப்பிட்டுப் பழந்தமிழில் பெண்ணியப் புலவர்கள் உள்ளமையைப் பின்வருமாறு விவரிக்கிறார்.

“சங்கக்காலக் குமுகாயம் போருக்கும் போர்த்திறனுக்கும் பெறப்படும் புகழுக்கும் முன்னுரிமை அளித்த ஆண்மையக் குமுகாயம்தான். ஆனால் பெண்பாற் கவிஞர்களின் பாடல்களையும் பெண் பாத்திரங்கள் படைக்கப்பட்டிருத்தலையும் பார்க்கும்போது அக்குமுகாயத்தில் அதன்காலத்து உலக நாடுகள் வேறு எதிலுமில்லாத அளவு உரிமைகள் பெண்ணினத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். சங்கக் காலம் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பதை மனத்தில் கொண்டோமானால் இவ்வளவு பெண் கவிஞர்களை வேறெந்தக் குமுகாயமும் அக்காலத்தே பெற்றிருக்கவில்லை என்பதை உணரலாம்.அறிவு நிலையிலும் கவிதை ஆற்றலிலும் இவர்கள் ஆண் கவிஞர்களுக்குச் சற்றும் தாழ்ந்தவர்கள் அல்லர். அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையையும் காண இயலாது. பாடுபொருள்களில் எவ்வித வேறுபாடுகளோ கட்டுப்பாடுகளோ இல்லாமல் ஆண் கவிஞர்களைப் போன்று எப்பொருள்பற்றியும் முழு விடுதலையுணர்வோடு பாட வல்லார். ஆண்பாற் புலவர்கள்  தம்மைப் பெண் பாத்திரங்களாகப் பாவித்துப் பாடியுள்ள கவிதைகளும் உண்டு. பெண்ணின் உடலழகைப்பாடுவதில் இவர்கள் எத்தகைய தயக்கமும் காட்டுவதில்லை. குமுகாயத்தில் இவர்களுக்கிருந்த உயர்நிலையை அவர்கள் மன்னர்களை இடித்துக் கூறும் பாடல்களிலிருந்தும் அறம் உணர்த்தும் பாடல்களிலிருந்தும் அறியலாம். “

மேலைக்குமுகாயத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியிலிருந்தே, பெண்ணியக்கத்தின் தோற்றத்திற்குப் பின்னரே பெண்கள் எத்தலைப்பிலும் தங்கள் தனித் துய்ப்புகள்பற்றிப் பேசலாம் என்னும் நிலை வந்தது என்றும் சங்கக்காலத்துப் பெண் கவிஞர்களுக்குப்பாடுபொருள்குறித்த கட்டுப்பாடு இருக்கவில்லை எனவும் பாடற்சான்றுகளுடன் விளக்குகிறார். புறநானூற்றில் பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒன்பது துறைகளின் கீழ்ப்பாடல்கள் உள்ளன எனப்பட்டியலிட்டும் தருகிறார். பெண்களுக்குத் துயரம் வந்தபொழுது அவர்களுக்காக இரங்கி அவர்கள் சார்பில் பாடிய புலவர்களின் பாடல்களையும் சுட்டிக் காட்டுகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 23/ 69 )