சலகெருது நாள்

பொங்கற்திருவிழா என்பது, காப்புக்கட்டு, கதிரவன் பொங்கல், ஊர்ப்பொங்கல், பெரிய நோன்பு, மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல், பாரிவேட்டை,வேடிக்கைநாள், மூக்கரசு, சலகெருதுநாள், பூப்பொங்கல், விடைநாள் என்பதாக அமைந்த ஒருவாரகாலத் திருவிழா.

 காணும்பொங்கலன்று பொது இடங்களுக்குச் சென்று களித்திருந்து வருதல், உற்றார் உறவினரைக் கண்டுவருதல், சல்லிக்கட்டு காண்பதென்பதுதான் பொதுவாகப் பார்க்கப்படுகின்றவொன்று. ஆனால் அன்றைய நாளிலே, சேவற்கோச்சை, புறாப்பந்தயம், தகர் சமர் எனப்படுகின்ற கிடாமுட்டு, ரேக்ளாபந்தயம், முயல்வேட்டை, தேனெடுப்பு, வழுக்காம்பாறை, ஆற்றங்கரை, மலைமுகடு, காட்டுமுகடு போன்ற இடங்களிலே தின்பண்டங்களுடன் கூடிக் கதை பேசிக்களிக்கும் மூக்கரச்சும் இடம் பெறும்.

இதேநாளில்தான் சலகெருது ஆட்டங்களும் இடம் பெறும். இது பழைய சிஞ்சுவாடி சமீன், மைவாடி சமீனுக்குட்பட்ட வட்டாரத்துக்கேவுரிய தனிப்பட்ட வாடிக்கையாக இன்றளவும் நிலைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  

 காப்புக்கட்டிய தருணத்திலிருந்து பூப்பொங்கல் முடியும் தருணத்துக்குள் (நான்கு நாட்கள்) சினைமாடு ஈன்றுமேயானால் அது ஆலாமரத்தூர்/சோமவாரப்பட்டியில்இருக்கின்ற ‘ஆல் கொண்ட மால்’ திருக்கோயிலுக்குச் சொந்தமானது என்பது மரபு.

பிறந்த கன்று கிடாரிக்கன்றாக இருக்குமேயானால் அது குடிக்குமளவுக்கும் விட்டு விட்டுப் பிறகுதான் பசுமாட்டின் உரிமையாளர் அதனின்று பால்கறக்கலாம். பால்குடி மறந்தபின், அந்தக் கன்றினைக் கொண்டு போய் திருக்கோயில் வசம் ஒப்படைத்து விட வேண்டும். காளைக்கன்றாக இருக்குமிடத்து, அது சாமிக்கன்றென அழைக்கப்படுகின்றது.

கீழ்த்தாடையில் பால்பற்கள் விழுந்து புதிய பற்கள் முளைக்கும் போது, அதாவது அதன் மூன்றாவது வயதில், ஊர்ப்பெரியவருடன் அந்த சாமிக்கன்று ஆல்கொண்ட மால் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றது. அங்கே அதற்கு சிறப்புவழிபாடு நிகழ்த்தி, வழிபாடு செய்யப்பட்ட திருநீர் அதன்மீது தெளிக்கப்பட்டுச் சலகையடிக்கப்படுகின்றது.

 சலகைச்சடங்கின் ஒருபகுதியாகக் காதுகளின் ஓரங்களை நறுக்கிப் பின்னர் ஆண்மைநீக்கத்திற்காக விதைப்பைகள் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றது.

இப்படியாகப்பட்ட சடங்கின் நிமித்தமே அவை சலகெருது என அழைக்கப்படுகின்றது. கொம்பு, நெற்றி, முதுகின்மேற்பகுதி முதலான இடங்களில் மஞ்சள்பூசப்பட்டு, திருநீறு குங்குமம் வைக்கப்பட்டு, கழுத்தில் காணிக்கைப் பை கட்டவிடப்பட்டு,கிழக்குப்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தேங்காய் பழம் வைத்து வழிபடுவர் கோயிலில் கூடியுள்ள ஊர்மக்கள். இதன்பின்னர் அனைவராலும் தொழத்தக்க சலகெருதுவாக உருவெடுக்கின்றது அந்தக் காளைக்கன்று கயிறு கொண்டு கட்டப்படமாட்டாது. எவர் நிலத்திலும் மேய்ந்து கொள்ளலாம். ஓரிரு மாதங்களுக்குப் பின்னர், உருமிமேளத்துடன் கூடிய ஆட்டத்துக்கு அது பயிற்றுவிக்கப்படும். சலங்கைகள் பூட்டப்பட்டு, உருமிமேளத்துடன் கூடிய நளினமான ஆட்டத்துக்கும் வேகத்துக்கும் ஏற்றபடி வளைந்து வளைந்து தலையைச் சிலுப்பியபடியே அது ஆடும் கலைஞனுக்குச் சவால் விடுக்கும்வண்ணம் தன் திறமையை வெளிப்படுத்தும்.

உருமிமேளத்தின் வீச்சா, கலைஞனின் ஆட்டமா, சலகெருதுவின் ஆட்டமாயென்பதில் பெரும்போட்டி நிகழும். சுற்றிலும் நின்று ஊர்மக்கள் வேடிக்கை பார்த்துக் களிப்பெய்துவர்.

 ‘(ஞ்)சாகோ’ எனச் சொல்லியபடித் தன்கைகளில் இருக்கும் சிலம்புகளையும் அந்தக் கலைஞன் வெவ்வேறு விதமாகச் சமிக்கைகள் செய்து கொண்டே உயர்த்தியும் தணித்தும் ஆடிவர சலகெருதுக்கும் கலைஞனுக்கும் ஆட்டத்தில் பெரும்போட்டி நிகழும். இப்படியான ஆட்டங்களினூடே அந்தந்த ஊர்மக்கள், அந்தந்த ஊர் சலகெருதுகளுடனும்மேளதாளத்துடனும் ஆட்டபாட்டங்களுடனும் ஆல்கொண்ட மால் திருக்கோயில் நோக்கிஅணியணியாகச் செல்வர். இந்த இரு சமீன்களுக்குரிய பகுதிகளிலே எங்கும் ஆரவாரம் கோலோச்சும். இதுதான் சலகெருதுநாள். *சலகெருதுநாள் வாழ்த்துகள்*

-பழமை பேசி

ஆசிரியர் குறிப்பு:    இராசகம்பளத்து நாயக்கர் வகுப்பார் கோயில் மாடு ஓட்டம் நடத்துவர். இதனையே அவர்கள் ‘சலகெருது’ என்று அழைக்கின்றனர். உடுமலை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒக்கலிகர் வகுப்பார் முதலியவர்களால் இவ்வாறு சலகெருது நாள் கொண்டாடுகின்றது. தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சலகெருது நாள் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாடு முழுவதும் அல்லது எல்லா வகுப்பினரும் பரவலாக இவ்வாறு அழைப்பதில்லை. சலகெருது மாடுகள் நலச்சங்கம் என்றும் ஊர் மக்கள் சங்கம் வைத்துள்ளனர்.

சலகு என்றால் படைப்பயிற்சி எனப்பொருள்.படைப்பயிற்சி போன்ற பயிற்சிஉடைய எருது என்னும் பொருளில் இச்சொல் வழங்குகிறது. சலகு என்றால் காயடித்தல்/விதையடித்தல் என்றும் பொருள்கள. ஒருவேளை இவ்வெருதுகள் காயடிக்கப்படுமோ எனத் தெரியவில்லை. உரிய ஊர்க்காரர்களைக் கேட்டால் தெரியும்.