சித்திரை விருது மாசியிலேயே ஏன்?

அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா

                                    

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளை ஐம்பத்து அறுவருக்கு (மாசி 08, 2050 / 19.02.2019) தலைமைச்செயலகத்தில் வழங்கியுள்ளார்.

விருதாளர்களுக்குப் பாராட்டுகள்! மேலும் தமிழ்த்தொண்டாற்ற வாழ்த்துகள்!

பொதுவாக விருதுகளை முந்தைய நாள் அல்லது கடைசி நேரம் அறிவிப்பதையே அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. காலங்கடந்தும் அறிவித்துள்ளனர். சான்றாக ஒவ்வொரு தை 2 ஆம் நாளும் திருவள்ளுவர் திருவிழாவைத் தமிழ்நாடு அரசு கொண்டாடும். அப்பொழுது திருவள்ளுவர் விருதையும் பிற ஆன்றோர்கள் பெயர்களிலான விருதுகளையும் வழங்கும். ஆனால், இந்த ஆண்டு திருவள்ளுவர் திருாளன்றுதான் விருதாளர்கள் பெயர்களையே அரசு அறிவித்தது. திருவள்ளுவர் நாளும் தை 06 / சனவரி 21 அன்றுதான் கொண்டாடப்பட்டது.

இம்முறை மிக முன்னதாக அறிவித்துள்ள தமிழ் வளர்ச்சித் துறைக்குப் பாராட்டுகள். சிலம்பொலி சு.செல்லப்பனுக்கு ‘இளங்கோ அடிகள் விருது’ அளித்துள்ளதுபோல் தகுதியான அறிஞர்களை அரசு சிறப்பித்துள்ளது. ஆழி.செந்தில்நாதன் என்பவர் அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகச் செயல்படுபவர். ஆனால் அவர் தந்தை புலவர் க. சம்பந்தனுக்குத் ‘தமிழ்ச்செம்மல்’ விருதினை அரசு அளித்துள்ளது. இதன் மூலம் கட்சி வேறுபாடு பார்க்காமலும் விருதாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. வேறு சில விருதாளர்களை விடத் தகுதியானவர்கள் அத்துறையில் அல்லது மாவட்டத்தில் இருக்கலாம். எனினும் அரசின் கவனத்திற்கு வந்ததன் அடிப்படையில் தேர்ந்தெடுத்திருப்பதாக எண்ணலாம். எனவே விருதாளர் சிலரின் பெயர்கள் சில பிரிவினருக்கு மனநிறைவு அளிக்காமல் இருக்கலாம். எனினும் எந்த விருதளிப்பிலும் இத்தகைய பேச்சு வரத்தான் செய்யும். இதைப் புறந்தள்ளி நாம் தமிழ்வளர்ச்சித் துறையையும் தமிழக அரசையும் பாராட்டலாம்.

கலைமாமணி விருதுகள் பிப்பிரவரி 2010 இற்குப் பின்பு வழங்கப் பெறவில்லை. பெரும்பாலும் நாட்டுப்புறத்தார்கள்தாம் இவ்விருதுகளைப் பெறுவார்கள். அவர்களுக்கு எதுவும் செல்வாக்கு இருக்காது. ஆனால் அறிஞர்கள், புலவர்கள், தமிழ் அமைப்பினருக்குத் தத்தம் பகுதியிலும் சிலருக்கு எல்லை கடந்தும் செல்வாக்குகள் உண்டு. எனவே, அவர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகப் போகக்கூடாது என எண்ணி விருதுகளை முன்னதாக வழங்கியுள்ளதாகச் சிலர் கூறுகிறார்கள்.

தேர்தல் அறிவிப்பிற்குப் பின்னர் இவர்களுக்கு விருதுகள் வழங்குவதில் சிக்கல் எழலாம் என ஆள்வோர் கருதியிருப்பர் என்கின்றனர்.

ஆனால், நமக்குள்ள ஐயம் என்னவென்றால் காலங்கடந்து விருது தருவது தவறு என்றால் முன்னரே அளிப்பதும் தவறுதானே!  தேர்தல் சூழலில் விழா நடத்த இயலாது என்றால் தேர்தல் ஆணையத்திடம் இசைவு பெற்று நடத்தலாமே!  இப்பொழுதும் மக்கள் விழாவாக நடத்த வில்லை. தலைமைச் செயலகத்தில்தான் நடத்தியுள்ளனர். அவ்வாறே சித்திரையில் நடத்தியிருக்கலாமே!

ஒருவேளை பாசகவுடன் கூட்டணி அமையாவிட்டால் ஆட்சி கவிழலாம். அல்லது பன்னீர் அணியினர் மீதான தீர்ப்பு எதிராக வந்தால் ஆட்சி கவிழலாம் என்பதுபோன்ற அச்ச உணர்வு வந்துவிட்டதா? சித்திரையில் ஆட்சியில் இருக்க மாட்டோம என்னும் உணர்வு ஆள்வோருக்கு வந்துவிட்டதால்தான் முன்னதாகவே விழாவை நடத்திவிட்டனரா?

ஆட்சியில் இல்லாவிட்டால் நமக்கு வேண்டியவர்களை விருதுகள் அளித்துப் பாராட்ட இயலாதே! அடுத்து ஆட்சி அமைக்காவிட்டால் விருதுகள் அளிக்கும் வாய்ப்பு பறிபோய்விடுமே என்ற அச்சம் வந்துவிட்டதா?

“இன்றைக்குக் கவிழும், நாளைக்குக் கவிழும்” என்று பேசியவர்கள் முகங்களில் கரி பூசி நிலையாக ஆட்சியை நடத்துகிறாரே, திறமை மிகு எடப்பாடி பழனிச்சாமி! அவருக்கு அச்சம் வரக் காரணம் என்ன?

பாசகவின் தயவால்தான் ஆட்சி நீடிக்கிறது; இல்லையேல் என்றைக்கோ கவிழ்ந்திருக்கும். கூட்டணிச் சிக்கலால் காட்சி மாறி ஆட்சி மாறும் என்ற அச்சம் வந்திருக்கலாம்.

விருதுகளை மட்டும் அறிவித்துவிட்டு விழாவை மட்டும் சித்திரையில் வைத்திருந்தால் யாவரேனும் வழக்கு தொடுத்துத் தடை வாங்கலாம் என்ற அச்சமும் வந்திருக்கலாம். எனவேதான் விருதுகள் அளிக்கும் விழாவை எளிமையாகவும் அவசரமாகவும் நடத்தி விட்டனர் எனப் பிறர் சொல்வதில் உண்மை இருக்கலாம்.

பொறுமையாக இருந்திருந்தால் பாசக கூட்டணி அறிவிப்பு வந்திருக்கும். அச்சமின்றிப் பாரறியவே விழாவை நடத்தியிருக்கலாம் என இப்பொழுது எண்ணலாம்.

 விருதாளர் ஒருவரை வாழ்த்திய பொழுது “எங்கள் பெருமைக்காக வாழ்த்துகிறீர்களா? பொறுமைக்காக வாழ்த்துகிறீர்களா?” என்றார். “காலை 10.00 மணிக்கு விழா நடைபெறும்; காலை 7.30 மணிக்குள் தலைமச்செயலகம் வர வேண்டும்” என்று சொன்னதால் காலையிலேயே அரை வயிறாக விருதாளர்கள் சென்று விட்டனராம். 11.00 மணிக்கு, 12.00 மணிக்கு என்பன போன்று விழா நேரத்தை மாற்றிச்சொல்லி இறுதியில் மாலை 6.00 மணிக்கு விழா நடந்ததாம்.

அள்ளித் தெளித்த அவசரக்கோலத்திற்கு என்ன தேவை வந்தது? தேர்தல் கூட்டணி முடிவில் மும்முரமாக இருக்கும் பொழுது இப்பணிகளுக்கெல்லாம் எங்கே நேரம் கிட்டும்? நிதியாண்டிற்குள் நடத்தி முடிக்க வேண்டும், குறிப்பிட்ட நாளில் நடத்தியாக வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லாத பொழுது ஏன் இந்தக் கூத்து? விருது பெற்ற மகிழ்ச்சியைவிடக் காத்திருப்பால் ஏற்பட்ட சோர்வுதானே மனத்தில் பதியும்.

விருதுகள் வழங்கிப் பாராட்டுகள் பெறாமல் ஏச்சும் பேச்சும் வாங்கும் அளவிற்கு முன்னதாகவும் விரைவாகவும் நடத்தும் அளவிற்கு ஆள்வோருக்கு என்ன தேவை வந்தது? ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து ஏன் அச்சம் வந்தது? எனப் பிறர் கேட்கும் வினாக்களுடன் இதை முடிக்கின்றேன்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை-அகரமுதல